தமிழ் மேடை நாடகங்கள்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சுமார் 80 ஆண்டுகளுக்குமுன் தொடங்கிய சிங்கப்பூர்த் தமிழ் மேடை நாடகங்கள், காலப்போக்கில் கருப்பொருள்களிலும் உத்திகளிலும் பல்வேறு மாற்றங்களைக் கண்டபோதும், உள்ளூர்த்தன்மையுடனும் படைப்பாக்கத்துடனும் அடுத்தடுத்த தலைமுறைத் தமிழர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டவருகின்றன. சிங்கப்பூர்த் தமிழ் நாடகத்தின் வேர்கள், நாட்டின் ஆகப்பழமைவாய்ந்த இந்து ஆலயமான ஶ்ரீ மாரியம்மன் கோயில் ஆலயத் திருவிழாக்களில் ஆடப்பட்ட அர்ச்சுனன் தபஸ் உள்ளிட்ட தெருக்கூத்துகளில் தொடங்கியவை. தமிழ்நாட்டிலிருந்து 1920-களில் விலாச நாடகக் குழு, பாய்ஸ் கம்பெனி நாடகக் குழு முதலியவை மலாயாவிலும் சிங்கப்பூரிலும் நாடகங்களை அரங்கேற்றியுள்ளன. அக்காலக்கட்டத்தில் தம் நாடகக்குழுவோடு சிங்கப்பூர் வந்த காதர் பாட்சா இங்கேயே குடியேறி இசை நாடகங்களை நடத்தினார்.

பிறகு, 1930-களில், தமிழர் சீர்திருத்தச் சங்கம், சமூகச் சீர்கேடுகளைச் சாடும் மேடை நாடகங்களை அறிமுகப்படுத்தியது. சங்கத்தின் உறுப்பினரும் அதன் நாடகச் சபாவின் தலைவருமான ந. பழநிவேலுவின் சுகுண சுந்தரம் அல்லது ஜாதிபேதக் கொடுமை எனும் நாடகம் அலெக்ஸாண்டரா அரங்கில் 1936-இல் மேடையேறியது. அவரது இன்னொரு தொடக்கக்கால நாடகமான ஜானி ஆலம் பற்றிச் சில குறிப்புகள் இருந்தபோதும் அவை ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன – 1934, 1935, 1936 ஆகிய மூன்று ஆண்டுகளும் நாடகம் மேடையேற்றப்பட்ட ஆண்டாகக் குறிப்பிடப்படுகின்றன. மேலும், ஜானி ஆலம் கதையை எழுதியவர் ஆர்மோனிய ஆசிரியராக விளங்கிய சிங்காரம் பிள்ளை என்றும் பழநிவேலு வசனம், பாடல்கள் ஆகியவற்றை எழுதினார் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. எவ்வாறாயினும், அவ்விரு நாடகங்களும் உள்ளூர்வாசிகளைக்கொண்டே படைக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் தமிழ் மேடை நாடகங்களாகக் கருதப்படுகின்றன. மதனவேலு பிள்ளையின் தேவி கான சபா நாடகக் குழுவினால் வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா ஆகிய நாடகங்களும் அதே காலக்கட்டத்தில் மேடையேற்றப்பட்டன. அக்கால நாடகங்கள், சுயமரியாதை, பெண்ணடிமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கைம்பெண் மறுமணம் முதலிய முற்போக்குக் கருத்துகளையும் தனிமனித ஒழுக்கம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று ஆகிய விழுமியங்களையும் மக்களிடம் வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டன. அதன்பின்னர், அக்கோட்பாடுகளுடன் பகுத்தறிவுக் கருத்துகளும் இணைந்தன. ச. வரதன் 1955-இல் பகுத்தறிவு நாடக மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி, அதே ஆண்டில் கருணாநிதி எழுதிய நச்சுக்கோப்பை என்ற பகுத்தறிவு நாடகத்தை மேடையேற்றினார். கசந்த கரும்பு (1957), எங்குமே எதிர்ப்பு (1960) உள்ளிட்ட பல நாடகங்களைத் தயாரித்தார். 

சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தில் தமிழ்ப்பிரிவில் நீண்டகாலம் பணியாற்றி, இறுதியில் பிரிவின் தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் 1958 முதல் 1987 வரை பல சமூக நாடகங்களையும் மர்ம நாடகங்களையும் ஒலிபரப்பியும் மேடையேற்றியும் வந்தார். சிங்கப்பூர்த் தமிழ் மேடை நாடகங்களில் தீவிரமான பிரச்சினைகள் சார்ந்த கருப்பொருள்களைத் தவிர்த்து, சிங்கப்பூர் வாழ்வியலை ஒட்டி அமைந்த பொழுதுபோக்கு நாடகங்களை எஸ்.எஸ். சர்மாபடைத்தார். அவரது கபுக்கா (1962) என்ற மர்ம நாடகம், விண்வெளி வீரன் (1966) என்ற அறிவியல் கற்பனை நாடகம் ஆகியவை மிகவும் பிரபலமாயின. அவர் சுமார் 70 நாடகங்களை உருவாக்கினார்.

கலைஞர்கள் அனைவரையும் ஒரே கூரையின்கீழ் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் 1970-இல், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் நிறுவப்பட்டு அதற்கடுத்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது. சங்கம், கலை ஆரம் எனும் கலை நிகழ்ச்சியை முதலில் அரங்கேற்றித் தொடர்ந்து விக்டோரியா அரங்கத்தில் கல்யாணமாம் கல்யாணம் எனும் நாடகத்தை ஆறு முறை அரங்கேற்றியது. மேலும் பல நாடகங்களை உள்ளூரில் மட்டுமின்றித் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றியது. மேலும், இந்தியக் கலைகள் மையம், வெண்ணிலா கலை அரங்கம், தமிழவேள் நாடக மன்றம் முதலிய நாடகக் குழுக்களும் அக்காலக்கட்டத்தில் நாடகங்களை மேடையேற்றின.

சிங்கைத் தமிழ் மேடை நாடகங்கள் 1980-களில் மீண்டும் புத்தெழுச்சி கண்டன. இளையர்களால் 1988-இல் தொடங்கப்பட்ட ரவீந்திரன் நாடகக் குழு ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. மெக்பெத், பதிவதி, விலங்குப் பண்ணை முதலாகப் பல நாடகங்களை மேடையேற்றி எண்ணிக்கையில் மட்டுமன்றி, கருப்பொருள், அரங்க அமைப்பு, தொழில்நுட்பம் முதலிய கூறுகளிலும் புதிய வார்ப்புகளைப் படைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மேடைகளிலும் ஊடகங்களிலும் நடிப்பு, இயக்கம், எழுத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று புகழ்பெற்றிருக்கும் பலரின் நாடகப் பயணம் ரவீந்திரன் நாடகக் குழுவோடுதான் தொடங்கியது எனலாம். அந்த நீண்ட பட்டியலில், ஜி. செல்வ நாதன், வடிவழகன், ரவி வேலு முதலியோர் முன்னோடிகளாக இருந்தனர். 

சிங்கப்பூர்த் தமிழ் நாடக மேடை 1990-களில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. எழுத்தாளராகிய இளங்கோவன் கலை இயக்குநராக நிர்வகித்த அக்கினிக்கூத்து நாடகக் குழு 1991-இல் எஸ். தேன்மொழியால் தொடங்கப்பட்டது. புரட்சிகரமான கருத்துகளை மையமாகக் கொண்ட பிணம், தலாக், ஊடாடி முதலிய நாடகங்களை இளங்கோவன் எழுதினார். சிங்கப்பூரில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் பார்க்கத் தடைவிதிக்கப்பட்ட முதல் தமிழ் நாடகமான விபத்துஅக்கினிக்கூத்து நாடகக் குழுவால் அரங்கேற்றப்பட்டது. மேடை நாடகங்கள், 2000-ஆம் ஆண்டுக்குப்பின் தொடங்கப்பட்ட அவாண்ட் நாடகக்குழு, TripleV, AK நாடகக்குழு, அதிபதி, இவண் நாடகக் குழு, அகம் நாடகக்கூடம், 2டாங்கோ, Blacspice, SITFE உள்ளிட்ட பல்வேறு நாடகக் குழுக்களால் தொடர்ந்து வளர்ச்சிகண்டன. மற்ற கலைகளைக் காட்டிலும் மேடை நாடகத் துறையில், புலம்பெயர்ந்த தமிழரைவிடச் சிங்கப்பூர்த் தமிழர்களின் பங்களிப்பும் ஈடுபாடும் அதிகமாகக் காணப்படுகிறது. சிங்கப்பூரில் செயல்பட்ட, செயல்படும் மேடை நாடகக் குழுக்கள் பெரும்பாலும் சிங்கப்பூர்த் தமிழர்களால் தொடங்கப்பட்டவை. 

தொழில்முறை நாடகக் குழுக்களுக்கு அப்பால், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர் அமைப்புகளும் மேடை நாடகங்களை அரங்கேற்றுகின்றன. தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் சங்கே முழங்கு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் உத்ரா, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சமர்ப்பணம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஜீவகானம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத் தமிழ்மொழி, பண்பாட்டுச் சங்கமான தமிழாவின் அத்தியாயம் ஆகிய நிகழ்வுகள் சில எடுத்துக்காட்டுகள். அவற்றில் பங்கேற்ற மாணவர்களுள் பலர் பின்னாளில் சிங்கை மேடை நாடக, கலை உலக ஆளுமைகளாக வளர்ச்சியடைந்தனர். 

காலப்போக்கில் மாறிவரும் கருப்பொருள்களைப்போலவே அரங்க வடிவமைப்பு, மேடை அலங்காரம், ஆடை வடிவமைப்பு, ஒளி, ஒலி அமைப்பு, இசை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் படைப்பாக்கத்துடன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மெக்பெத், விலங்குப் பண்ணை, ராஜ ராஜ சோழன், தொண்டன், தாஜ் மகால், ஒதெல்லோ, குவார்ட்டர்ஸ், குள்ள நரி’, அழகி’ ஆகிய நாடகங்கள் சில எடுத்துக்காட்டுகள். அகம் நாடகக்கூடம், சிங்கப்பூரின் அதிமெய்நிகர் படைப்பாக, துரியோதனன் என்னும் தமிழ்-ஆங்கில நாடகத்தை மேடை நாடகமாகவும், செயலி வடிவிலும்வெளியிட்டது. அதே குழுவின் பச்ச பங்களா ரெட்ட கொலடா நாடகம் எஸ்டி லைஃப் விருதுகள் விழாவில் 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த குழு நடிப்பு விருதைப் பெற்றது. பலமொழிகளுக்கும் பொதுவான விருதுகள் விழாவில், அதுவே தமிழ் நாடகத்திற்குக் கிடைத்த முதல் விருது. அந்நாடகம் The Play That Goes Wrong எனும் பிராட்வே நாடகத்தின் தமிழ் வடிவம். மேலும், அகம் நாடகக்கூடம், ‘பிளாக் பாக்ஸ்’ என்னும் சிறு நாடகக் கூடத்தை தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் 110 இருக்கைகளோடு 2025-இல் நிறுவி வரலாற்றுச் சாதனை படைத்தது.

சிங்கப்பூரில், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், 2020-இல், நோய்ப்பரவல் முறியடிப்புத்திட்டம் நடப்பிலிருந்தபோதும் நடிகர்கள் அவரவர் இல்லங்களில் இருந்து இணையம் வழியாக ஒன்றிணைந்து நடித்து இறுதியில் யார்? எனும் நாடகத்தைப் படைத்தனர். அவாண்ட் நாடகக் குழு அப்படைப்பைத் தயாரித்தது. மேடை நாடகக் கலைஞர்கள் பலர் முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளனர். கலைஞர்களுக்கான உயரிய விருதான கலாசாரப் பதக்கத்தை ச. வரதன், ந. பழநிவேலு, பி. கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுள்ளனர். 

மேடை நாடகத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்வதற்கு 2டாங்கோ நாடகக் குழுவின் ஆர்ட்டேதான், இவண் நாடகக் குழுவின் கலக்கல் நாடகத் திருவிழா, அவாண்ட் நாடகக் குழுவின் கல்வெட்டு, Page2Stage, அதிபதி நாடகக் குழுவின் திசைவேகம், அகம் நாடகக்கூடத்தின் பணிக்கன் உள்ளிட்ட பட்டறைகளும் பயிற்சிகளும் போட்டிகளும் நிகழ்த்தப்படுகின்றன. சுதந்திரச் சிங்கப்பூரின் முதல் அரைநூற்றாண்டு மேடை நாடக ஆவணங்கள் பல சிங்கப்பூர்த் தமிழ் நாடக மின்தொகுப்பில் சேர்க்கப்பட்டு 2017-இல் வெளியிடப்பட்டன. சில நாடகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 2014-இல், சே.வெ. சண்முகத்தின் குடும்பம், டி.டி. தவமணியின் காதல் என்ன விலை? ஆகியவை ‘ஏ’ நிலைத் தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர், ச. வரதனின் சிங்கப்பூர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல நாடகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்த் தமிழ் நாடகங்கள், உள்ளூரிலும் இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. தேசியக் கலை மன்றம்வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து சிங்கைத் தமிழ் மேடை நாடகங்களுக்குத் தொடர்ந்த ஆதரவு கிடைத்துவருகிறது. வசந்தம் ஒளிவழி, ஒலி 968 உள்ளிட்ட மீடியாகார்ப் தமிழ் மொழிச் சேவைகள், தமிழ் முரசு ஆகியவை ஊடக ஆதரவு அளிக்கின்றன. அவைபோக ஆர்வமிக்கத் தனிநபர்களாலும் அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களாலும் சிங்கப்பூர்த் தமிழ் மேடை நாடகங்கள் மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதோடு தொடர்ந்து வளர்ச்சியும் கண்டுவருகின்றன. பல சிங்கப்பூர்த் தமிழ் மேடை நாடகங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடப்பதையும் அவற்றில் உள்ளூர்த் தமிழ் இளையர்கள் பங்கேற்பதையும் பரவலாகக் காணமுடிகிறது.




மேல்விவரங்களுக்கு
எஸ்.எஸ். சர்மா. (2004). நாடகம் நடத்தினோம் 
ச. வரதன், சா. ஹமீட். (2008). சிங்கப்பூர்த் தமிழ் நாடக வரலாறு. சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்
ரெ. சோமசுந்தரம், 1990 சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்கள்.
Avant Theatre. Accessed 1 August 2025. https://avanttheatre.com/
Athipathi. Accessed 1 August 2025. https://www.athipathi.com/
Agam. Accessed 1 August 2025. https://www.agam.com.sg/
SITFE. Accessed 1 August 2025. https://sitfe.sg/
AKT Theatre. Accessed 1 August 2025. https://www.aktheatre.com/

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA