ச. வரதன் என்று அறியப்படும் சஞ்சீவிராஜலு வரதன் (பி. 1934) சிங்கப்பூர்த் தமிழ் நாடகத்துறையில் நாடக ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆய்வாளர் எனப் பல்வேறு வகைகளில் பங்களித்தவர். பகுத்தறிவு நாடக மன்றம், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் ஆகிய அமைப்புகள் உருவாக அடித்தளமிட்டவர். வரதன் சிங்கப்பூரில் பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதானபோது குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து அங்கேயே தங்கிவிட நேர்ந்தது. இந்தியாவில் உயர்நிலைக் கல்வியைப் பெற்ற வரதன், தன் 18-ஆம் வயதில் சிங்கப்பூர் திரும்பினார். ஒரு கப்பல் போக்குவரவு நிறுவனத்தில் 1953-இல் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்து 1971 வரை பணியாற்றினார். சிங்கப்பூர் திரும்பியதிலிருந்தே முற்போக்கு நாடகங்களைப் பார்ப்பதும் நடிப்பதுமாக இருந்தவர், 1955-இல், பகுத்தறிவு நாடக மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி, கசந்த கரும்பு (1957), எங்குமே எதிர்ப்பு (1960) உள்ளிட்ட பல நாடகங்களைத் தயாரித்தார்.
மன்றம் 1968-இல் கலைக்கப்பட்டபோதும் வரதன் தொடர்ந்து நாடக உருவாக்கத்தில் ஈடுபட்டார். பிறகு, 1971-இல், நாடக, வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர்களை ஒரே குடையின்கீழ் கொணரும் நோக்கில், நண்பர்களுடன் இணைந்து சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். பிறகு தலைவராகி 1980-களின் இறுதிவரை அப்பொறுப்பில் நீடித்தார். அக்காலக்கட்டத்தில் உயர்ந்த உள்ளம் (1978), முத்துக்குவியல் (1987) உள்ளிட்ட பல நாடகங்களை அவர் இயக்கினார். கலாசார அமைச்சு நடத்திய தமிழ் நாடகத் திருவிழாவில் சிறந்த இயக்குநராகத் தொடர்ந்து மூன்றாண்டுகள் (1983-85) தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 1990-களின் தொடக்கத்திலிருந்து, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் ஆலோசகராகப் பணியாற்றிக்கொண்டே நாடக வரலாற்று ஆய்விலும் ஆவணப்படுத்தலிலும் ஈடுபட்ட வரதன், சுவடுகள் (1990), கலைச்சோலையில் வாடாமலர்கள் (2005), சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு: 1935-2007 (2008) உள்ளிட்ட பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒருசில ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளியாகியுள்ளன. நாடகத்துறைச் சேவைகளுக்காக, வரதன், தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் விருது (2022) போன்ற விருதுகளுடன் கலாசாரப் பதக்கத்தையும் (1984) பெற்றுள்ளார்.
மேல்விவரங்களுக்கு
Singapore: The Encyclopedia, edited by Tommy Koh, Timothy Auger, Jimmy Yap, Ng Wei Chian, published by Editions Didier Millet and National Heritage Board, 2006
S. Varathan, Memories Never Fade, trans. Singapore Indian Artistes’ Association (Singapore: Singapore Indian Artistes’ Association, 1990) S. Varathan, Oral history interview by Daniel Chew, 13 March 1990, transcript and MP3 audio, 00:31:22, National Archives of Singapore (accession no. 001000/08/03), 16–17
Venka Puroshothaman, ed., Narratives: Notes on a Cultural Journey (Singapore: National Arts Council, 2002)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |