தமிழர் சீர்திருத்தச் சங்கம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

இப்போது சிங்கைத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழர் சீர்திருத்தச் சங்கம் 1930-கள் முதல் 1950-கள் வரை தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த தமிழ்ச் சமூக அமைப்பாக விளங்கியது. அதை நிறுவிய தலைவர்களுள் பலர் பின்னர் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டிகளாக உருவெடுத்தனர்.  

பெரியார் எனப் பரவலாக அறியப்பட்ட இந்தியச் சமுதாயச் சீர்திருத்தவாதி ஈ.வெ. ராமசாமி 1929-இல் சிங்கப்பூர், மலாயாவுக்கு மேற்கொண்ட பயணம் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை அமைக்கத் தூண்டுகோலாக இருந்தது. அவர் 25 டிசம்பர் 1929 அன்று சிங்கப்பூருக்கு வருவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னரே அவருடைய சீர்திருத்தச் சிந்தனைகள் வேரூன்றத் தொடங்கிவிட்டன என்றாலும், அவரது வருகையின்போதுதான் சங்கம் உருப்பெறத் தொடங்கியது. சிங்கப்பூர், பினாங்கு, பத்து காஜா, கோலா கங்சார், மலாக்கா உள்ளிட்ட மலாயாவின் பல்வேறு பகுதிகளிலும் 1930-களின் தொடக்கத்தில் அதேபோன்ற சங்கங்கள் தோன்றின. 

பெரியார் தம் கருத்துகளை மக்களிடையே பரப்ப 1924-இல் தொடங்கிய வார ஏடான குடியரசு சிங்கப்பூரில் கோ. சாரங்கபாணியால் விநியோகிக்கப்பட்டது. பெரியாரின் கருத்துகளால் கவரப்பட்ட அவர் பெரியாருடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். மலாயாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் பெரியாரைச் சம்மதிக்கவைப்பதிலும் பயண ஏற்பாடுகளிலும் சாரங்கபாணி முக்கியப் பங்காற்றினார். சிங்கப்பூரில் மூன்று நாள்கள் தங்கிய பெரியார் 27 டிசம்பர் 1929 அன்று நகர மண்டபத்தில் மக்களிடையே உரையாற்றினார். அந்தப் பயணத்தின் ஏற்பாட்டாளர்களுடனான பெரியாரின் கலந்துரையாடல்கள் சமுதாயச் சீர்திருத்தத்திற்கான உள்ளூர் அமைப்பு ஒன்றை நிறுவும் எண்ணத்திற்கு வித்திட்டதாகக் கருதப்படுகிறது. 

ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப்பின், 21 ஏப்ரல் 1930 அன்று, தமிழர் சீர்திருத்தத்திற்காகச் சங்கம் ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் 3 ஓவன் ரோட்டில் அமைந்திருந்த இந்தியர் சங்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், ஓ. ராமசாமி நாடார், பா. கோவிந்தசாமி செட்டியார், கோ. இராமலிங்கத் தேவர், அ.சி. சுப்பய்யா, சா. கோபால் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.  

மீண்டும் 13 ஜூலை 1930 அன்று அதே இடத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஏறக்குறைய 150 பேர் கலந்துகொண்டனர். நாடார் தலைமை தாங்கிய அக்கூட்டத்தில் சங்கத்தின் நோக்கங்கள் விவாதிக்கப்பட்டு வருங்காலச் செயற்பாடுகளுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.  

நாடார் தம் உரையில் தீண்டாமை, சாதி ஒழிப்பு, மாதர் உரிமைகள், அறிவு வளர்ச்சிக்கான கல்வியை ஊக்குவித்தல், வாழ்க்கைமுறையில் சிக்கனத்தை வலியுறுத்துதல், பகுத்தறிவுக்கு ஒவ்வாத நடைமுறைகளை மறுத்தல் போன்ற பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள்பற்றிப் பேசினார். எனினும், பெரியாரின் தீவிர பிராமண எதிர்ப்பும் இறைமறுப்புக் கொள்கையும் முக்கிய நோக்கங்களில் இடம் பெறவில்லை. முந்தைய தமிழ்ச் சங்கங்கள் பல தொடர்ந்து வாடகை கொடுக்கமுடியாத காரணத்தால் குறுகிய காலத்திலேயே மறைந்துவிட்டதைக் குறிப்பிட்ட நாடார், புதிய சங்கம் தன் சொந்தக் கட்டடத்தைப் பெற்றிருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இயன்ற விரைவில் சங்கத்திற்கென ஒரு கட்டடத்தை வாங்க அவர் கோவிந்தசாமி செட்டியாருடன் இணைந்து உறுதியளித்தார். 

அவருடைய உரைக்குப்பின், சங்கத்தின் பெயரைத் தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’ என்ற பெயர் மிகப் பெரும்பான்மையினரால் தேர்வு செய்யப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்ட மற்றொரு பெயர் ‘சுயமரியாதை இயக்கம்’ என்பது. தமிழர் சீர்திருத்தச் சங்கம் பெரியாராலும் அவருடைய சுயமரியாதை இயக்கத்தினாலும் தூண்டப்பட்டிருந்தாலும் அது தொடக்கத்திலிருந்தே தன் பெயரிலும் செயலிலும் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்ற தனித்துவத்தைக் கட்டிக்காத்தது. மலாயா ட்ரிப்யூன் 30 மார்ச் 1933 அன்று, தமிழர் சீர்திருத்தச் சங்கம் சுயமரியாதை இயக்கத்தின் ஒரு கிளை அமைப்பு எனக் குறிப்பிட்டு நவநீதம் என்ற உள்ளூர்த் தமிழ் இதழில் வெளியான கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்து வெளியிட்டபோது, சங்கத்தின் சார்பாக சாரங்கபாணி, அது தவறான தகவல் என விளக்கி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினார். அதன் விளைவாக, 19 மே 1933 அன்று சங்கத்திடம் மலாயா ட்ரிப்யூன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. 

பின்வருவோர் சங்கத்தின் அலுவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்: தலைவர் ராமசாமி நாடார், துணைத்தலைவர் கோவிந்தசாமி செட்டியார், செயலாளர் சாரங்கபாணி, துணைச் செயலாளர் கோபால், பொருளாளர் ஏ. ராஜகோபால், தணிக்கையார் ஏ. அதிசயம். 

நிர்வாகக் குழுவில், வி. சோமசுந்தரம் செட்டியார், கோ. இராமலிங்கத் தேவர், அ.சி. சுப்பய்யா, வி தாமோதரன், ஆர்.டி. கோவிந்தசாமி, எம்.ஆர். முத்துக் கண்டியர், சி.வி. குமாரசாமி, எஸ். குப்புசாமி, பி.ஆர். கோவிந்தசாமி, ஆர். திருவேங்கடம், ஏ.எஸ். நாராயணசாமி, ஈ.ஏ. சிவராம பிள்ளை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மேலும், 27 ஜூலை 1930-க்குள் சங்கத்தின் சட்ட திட்டங்களை வரைவதற்காக, அதிசயம், கோபால், கோவிந்தசாமி, சுப்பய்யா, சாரங்கபாணி ஆகியோர் அடங்கிய ஐவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தச் சட்டங்களைப் பரிசீலிக்க 3 ஆகஸ்ட் 1930 அன்று மீண்டும் கூடுவதென்று முடிவு செய்யப்பட்டது என்றாலும், அந்தக் கூட்டம் நடந்ததா என்பதுபற்றிய தகவல் கிடைக்கவில்லை. ஏறக்குறைய ஈராண்டுகளுக்கு எந்தச் செயற்பாடுகளுமில்லை. ஒருவேளை, அப்போதைய பெரும் பொருளியல் மந்தம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். 

பிறகு, 29 மே 1932 அன்று, ஆர்ச்சர்ட் ரோட்டிலிருந்த இந்தோ-சிலோனீஸ் சங்கத்தில் நாகலிங்க முதலியார் தலைமையில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தம்முடைய உரையில் நாகலிங்கம், தமிழர்களின் ஒற்றுமையின்மை, பிறப்பின் அடிப்படையிலான சமுதாயப் படிமுறை, ஊதாரித்தனமான வாழ்க்கைமுறை, மாதர்கள் ஒடுக்கப்படுதல், குழந்தைத் திருமணம், பிற சமூக அநீதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, தமிழர் சீர்திருத்தச் சங்கம் அமைக்கப்பட்டதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். பின்வருவோர் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்: தலைவர் நாகலிங்கம், துணைத்தலைவர் சுப்பய்யா, கௌரவச் செயலாளர் சாரங்கபாணி, துணைச் செயலாளர் கே.ஆர். சாமிநாதன், பொருளாளர் கே. ராமலிங்கம், தணிக்கையாளர் என். சாமிநாதன். சட்டதிட்டங்களை வரைவதற்குப் பணிக்கப்பட்ட குழுவில், தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், கே. வடிவேலு, கே. தாமோதரன் ஆகியோர் அடங்கியிருந்தனர். தமிழர் சீர்திருத்தச் சங்கம் 1932-இல் 80 உறுப்பினர்களுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. 

காந்தி நினைவு மண்டபத்தில் 26 மார்ச் 1933 அன்று நாகலிங்கத்தின் தலைமையில் நடந்த மற்றுமொரு கூட்டத்தில், சாரங்கபாணி, தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வி வசதி வழங்குவது, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட 14 நோக்கங்கள்பற்றி விரிவாகப் பேசினார். சங்கம் தமிழ் முஸ்லிம்களையும் தமிழ்க் கிறிஸ்துவர்களையும் பிரதிநிதிக்குமா எனக் கேட்கப்பட்டபோது, நாகலிங்கம் ‘ஆம்’ எனப் பதிலளித்தார். 

சிலோன் தமிழர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிய நாகலிங்கம், ஆகஸ்ட் 1934-இல் நாராயணன் செட்டியார் என்பவர் தொடுத்த நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு வழக்கை எதிர்நோக்கினார். அந்த வழக்கு 1935-இன் தொடக்கத்தில் விசாரணைக்கு வந்தது. அதன் காரணமாக, நாகலிங்கம் 1934 முதல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் எந்த வகையிலும் ஈடுபடவில்லை. சுப்பய்யா 1934 அல்லது 1935-ஆம் ஆண்டில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கக்கூடும். 

சங்கத்தின் புதிய மனை 6 ஜூலை 1935 அன்று 20 கிளாங் ரோட்டில் திறக்கப்பட்டது. இதில் 500 தமிழ், ஆங்கில நூல்களோடு பல்வேறு நாளேடுகளையும் கொண்டிருந்த தமிழ் வாசிப்பறை ஒன்றும் அமைந்திருந்தது. அந்தச் சமயத்தில் சங்கத்தில் 450 உறுப்பினர்கள் இருந்தனர். அதே நாளில் குழுவில் பெண் உறுப்பினர்களைப் பிரதிநிதிக்க எம். மீனாம்பாள் தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் வார இதழான தமிழ் முரசின் முதல் பதிப்பும் அன்று வெளியிடப்பட்டது. சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை, 31 டிசம்பர் 1935-க்குள், 14 பெண்கள் உட்பட 1,044-ஆக உயர்ந்தது. அப்போது அச்சங்கம் மலாயாவின் ஆகப் பெரிய இந்திய அமைப்பாக விளங்கியது. தமிழர் எவரும் ஆண்டுக்கு ஒரு வெள்ளி சந்தாச் செலுத்தி உறுப்பினராகலாம். 

தமிழர் சீர்திருத்தச் சங்கம் நாடகம், இலக்கியம், விளையாட்டு, தொண்டூழியம் முதலிய அணிகளுடன் பலதரப்பட்ட ஆர்வலர்களுக்கும் இடமளித்துச் செழித்து வளர்ந்தது. சங்கத்தின் முதல் நாடகம் ந. பழநிவேலு எழுதிய சுகுண சுந்தரம். சாதி முறையின் கெடுதல்கள்பற்றியும் மாதர்கள் ஒடுக்கப்படுவதுபற்றியும் பேசிய அந்நாடகம் 12 ஏப்ரல் 1936 அன்று அலெக்ஸாண்ட்ரா  அரங்கத்தில் அரங்கேறியது. நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. இலக்கிய அணி, சங்கக் கட்டடத்தில் வாராந்திரச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தது. அவற்றில் மூட நம்பிக்கை, விதவைத் திருமணம், மாதர் கல்வி உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தக் கருத்துகள் அலசப்பட்டன. சுமார் 40 பேர்களைக் கொண்ட சீருடையணிந்த தொண்டூழியர் அணி, சங்க உறுப்பினர்களின் திருமணம், ஈமச் சடங்கு முதலிய குடும்ப நிகழ்வுகளின்போது சேவையாற்றியது. உறுப்பினர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக, காலாண்டுக்கு ஒரு முறை உள்ளூர்ச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 

சங்கத்தின் வார இதழான தமிழ் முரசு வாரம் மும்முறைப் பதிப்பாக மாற்றப்பட்டபின்னரும் இழப்பைச் சந்தித்தது. எனவே, 5 மே 1936 அன்று அந்த இதழைச் சாரங்கபாணிக்கு விற்க சங்கம் முடிவு செய்தது. அவருடைய நிர்வாகத்தின்கீழ், இதழ் ஒரு லாபகரமான தொழிலாக மாறி இறுதியில் ஒரு நாளேடாக மாற்றப்பட்டது. இன்றுத் தமிழ் முரசு சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடாக விளங்குகிறது. 

சாரங்கபாணி 2 ஜூன் 1936 அன்று, தமிழ் முரசில் 'சீர்திருத்தம் ஏன் தேவை?' என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் அவர் திருமணச் சடங்குகளைச் சமய நடைமுறைகளும் பிராமணர்களும் இல்லாமல் நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சங்கக் கட்டடத்தில், 3 ஜூன் 1936 அன்று, தமிழ் இந்து மணமகனான எம். லெட்சுமணனுக்கும் யூத மணமகளான கிட்டி சி எடிக்கும் இடையே சீர்திருத்தத் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அத்திருமணத்தில் சமயச் சடங்குகள் ஏதும் செய்யப்படவில்லை. மாறாக, திருமண ஒப்பந்தம் வாசிக்கப்பட்டு, சாரங்கபாணியால் மணமகன், மணமகள், அவர்களின் பெற்றோர், சாட்சிகள் ஆகியோரின் கையொப்பங்கள் பெறப்பட்டன. அதேபோன்ற சமயச் சார்பற்ற திருமணங்கள் சங்கத்தில் சாரங்கபாணி அல்லது சுப்பய்யாவின் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றன. எடுத்துக்காட்டாக, 1938-இல் நடந்த, ஆர். கமலா, எம். மாணிக்கத்திற்கிடையேயான திருமணம். சமயச் சடங்கு சார்ந்த திருமணங்களில் வழக்கமாக மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். அதற்குப்பதிலாக, மணமக்கள் இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். பின்னர் 1940-இல் நடந்த மற்றொரு சீர்திருத்தத் திருமணத்தில், மணமக்கள் மோதிரத்தோடு மாலையையும் மாற்றிக்கொண்டனர்.  

சங்கத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் 5 ஜூலை 1936 அன்று நடந்தபோது, தலைவர் சுப்பய்யா ரிஃபார்ம் என்ற மாத இதழை 6 ஜூலை 1936 முதல் வெளியிடும் சங்கத்தின் திட்டத்தை அறிவித்தார். அந்த இதழின் நோக்கம் ‘சங்கத்தின் நோக்கங்களைத் தமிழரல்லாத ஆசிய, ஐரோப்பிய மக்கள் முன் வைப்பது’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு ஓராண்டுக்குள் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 2000-த்துக்கு உயர்த்தும் இலக்கும் அறிவிக்கப்பட்டது. 

சிங்கப்பூரில் 1937-இன் தொடக்கத்திற்குள் தமிழ்ச் சமூகங்களைப் பிரதிநிதிக்கும் முதன்மை அமைப்பாகத் தமிழர் சீர்திருத்தச் சங்கம் உருவெடுத்தது. எடுத்துக்காட்டாக, 15 மார்ச் 1937 அன்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டுவிழாக் கொண்டாட்டங்கள்பற்றிப் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் விவாதிக்கக் கூட்டப்பட்ட கூட்டம் சங்கக் கட்டடத்தில் நடத்தப்பட்டது. மற்றுமோர் எடுத்துக்காட்டு, 4 நவம்பர் 1937 அன்று, மதராஸ் சட்டசபையில் அம்மாகாணத்தில் இந்தியைக் கட்டாய மொழியாக்குவதற்கு முன்மொழியப்பட்ட மசோதாவை எதிர்த்துச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டம். தென்னிந்திய முஸ்லிம் லீக், மருத்துவர் சங்கம், விவேகானந்தர் சன்மார்க்கச் சங்கம், தமிழர் சகோதரத்துவக் கட்சி, முஸ்லிம் மேம்பாட்டுச் சங்கம், பி, சி முட்லூரின் ஜமித்துல் முஸ்லிம், அகம்படியார் மகாஜன சங்கம் ஆகிய ஏழு அமைப்புகளின் பேராளர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

தமிழ்ச் சமூகத்தில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை ஒழிக்கும் அதன் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, சங்கம், 1938-இல், பக்தர்கள் தங்கள் உடலில் ஊசிகள், கம்பிகள், வேல்களைக் குத்திக்கொள்ளும் அலகுக்காவடிகளையும் தீமிதியையும் தடை செய்யுமாறு நீரிணைக் குடியேற்ற அரசாங்கத்தின் காலனித்துவச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தது. அந்தப் பழக்கங்களுக்கு "சமய அடிப்படையோ நியாயமான காரணங்களோ இல்லை" என அது கூறிற்று. எனினும் அரசாங்கம் அந்த வேண்டுகோளுக்குச் செவிமடுத்து நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.  

சங்கம் 1940-இல், சமூகச் சீர்திருத்தத்தை இலக்காகக் கொண்டு பல தீர்மானங்களை நிறைவேற்றியது. ஒரு தீர்மானம் கள்ளுக்கடைகளை மூடும்படி அரசாங்கத்தை வற்புறுத்தியது. அந்தத் தீர்மானத்திற்கும் பலனில்லை. சிங்கப்பூரில் ஒருவழியாக 1979-இல்தான் கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. மற்றொரு தீர்மானம், தமிழர்கள் இழிவாகக் கருதிய ‘கிளிங்’ என்னும் சொல்லால் அவர்கள் அழைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும், தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியில் இலவசக் கல்வி வழங்குமாறு சங்கம் கூறியது. ஏப்ரல் 1940-இல், சாரங்கபாணி பொதுத் தமிழ் நூலகம் ஒன்றை முன்மொழிந்தார். சிங்கப்பூரில் உள்ள தமிழர் ஒவ்வொருவரும் இந்த இலக்கை ஓராண்டுக்குள் அடையும் வகையில், ஒரு நூலை நன்கொடையாக வழங்குவதை அவர் ஊக்குவித்தார். 

சாரங்கபாணி பிப்ரவரி 1941-இல் அனைத்து மலாயாத் தமிழர் சங்கம் ஒன்றை அமைக்க முன்மொழிந்து மலாயாவிலுள்ள அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளின் மாநாடு ஒன்றைக் கூட்ட யோசனை கூறினார். மாநாடு ஏப்ரல் 1941-இல் 12, 13-ஆம் தேதிகளில் 54 செயிண்ட் பேட்ரிக்ஸ் ரோட்டில் அமைந்திருந்த நாடாரின் மாளிகையில் 500-க்கும் மேற்பட்ட பேராளர்களுடன் நடைபெற்றது. அதே மாளிகையில், 21 ஜூலை 1941 அன்று, பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற ஆர்.கே. சண்முகம் செட்டியாரால் அனைத்து மலாயா தமிழர் சங்கம் நிறுவப்பட்டது. 

தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு, 16 ஆகஸ்ட் 1941 அன்று தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற நாடார், 125 சிராங்கூன் ரோட்டில் 10,000 வெள்ளிக்குமேல் மதிப்புடைய ஒரு கடைவீட்டை நன்கொடையாக வழங்கினார். அதோடு, அந்தக் கடைவீட்டைப் புதுப்பிக்க மேலும் 5,000 வெள்ளி அளிப்பதாகவும் உறுதியளித்தார். எனினும், இரண்டாம் உலகப் போர் அத்திட்டங்களில் குறுக்கிட்டது. இந்தியாவிற்குச் சென்ற நாடார் சிங்கப்பூருக்குத் திரும்பி வரவேயில்லை. 

ஜனவரி 1942-இல், ஜப்பான் சிங்கப்பூரைத் தாக்குவதற்கு ஒரு மாதத்திற்குமுன், போர் மூண்டு அதன் விளைவாக அல்லற்படும் தமிழர்களுக்குத் தங்கும் வசதியளிக்க ஓர் இடத்தை ஏற்பாடு செய்வதுபற்றி விவாதிக்கச் சங்கம் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. எனினும், அதன்பின்னர், 1942-க்கும் 1945-க்கும் இடையே ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போதும் அதைத் தொடர்ந்து அதன் விளைவுகளிலிருந்து மீண்டுவந்த ஐந்தாண்டுக் காலத்திலும் சங்கத்தின் நடவடிக்கைகள் நின்றுபோயின. சங்கம் 1950-க்குள் போரின் விளைவுகளிலிருந்து மீளத் தொடங்கியபோது அதன் முதல் தலைவர் ராமசாமி நாடார், முதல் துணைத் தலைவர் கோவிந்தசாமி செட்டியார் ஆகிய இருவரின் இழப்பையும் எதிர்கொண்டது. இருவரும் காலமாகியிருந்தனர். அந்தக் காலக்கட்டத்தில் சுப்பய்யாவும் சாரங்கபாணியும் முக்கியத் தலைவர்களாக உருவெடுத்தனர். சாரங்கபாணி, போரின்போது நின்றுபோயிருந்த தமிழ் முரசை 1947-இல் மீண்டும் வெளியிடத் தொடங்கினார். 

சாரங்கபாணி 1949-இல் இந்து ஆலோசனை வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, சிறப்புப் பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழர் சீர்திருத்தச் சங்கம், கோயில் விழாக்களில் ஆடுகளைப் பலியிடும் வழக்கத்தை நிறுத்தியதற்காக மாரியம்மன் கோயிலுக்கு நன்றி தெரிவித்தது. மேலும், இந்து பக்தர்கள் கடும் நோன்பிருந்து அலகுக்காவடி, தீமிதி என உடல்வதை செய்துகொள்ளும் வழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம், இந்து ஆலோசனை வாரியம், கோயில் நிர்வாகக் குழுக்கள் ஆகியவற்றைக் கேட்டுக்கொண்டது. ஆனால், இன்றுவரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 

சங்கத்தின் போருக்குப்பிந்திய முதல் ஆண்டுப் பொதுக் கூட்டம், 18 பிப்ரவரி 1951 அன்று நடைபெற்றது. இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: ஒரு தீர்மானம், மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை விரிவுரையாளர் இருக்கைக்கும் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் ஒன்றை உருவாக்கவும் நிதி அளிக்க நன்கொடை திரட்டுவதற்காகக் குழு ஒன்றை அமைப்பது. மற்றொரு தீர்மானம், தைப்பூசம் தமிழ் இந்துக்களால்மட்டுமே கொண்டாடப்படுகிறது, பொங்கல் அனைத்துத் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது என்பதால் தைப்பூசத்துக்குப்பதிலாகப் பொங்கல் நாளைப் பொது விடுமுறையாக அறிவிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. அது நிறைவேறவில்லை. 

சாரங்கபாணி 1 ஆகஸ்ட் 1951 அன்று தமிழர் பிரதிநிதித்துவ சபை (பின்னாளில் தமிழர் பேரவை), என்னும் ஒரு புதிய சமூக அமைப்பைத் தொடங்கினார். அதன் முக்கிய நோக்கம், சிங்கப்பூரிலுள்ள பல்வேறு தமிழ்ச் சமூக அமைப்புகளை ஒரே கூரையின்கீழ் ஒன்றிணைத்து அவற்றின் பொதுவான தேவைகளுக்குப் பாடுபடுவது. வயி. சண்முகம் செட்டியார் பேரவையின் தலைவராகவும் சாரங்கபாணி அதன் செயலாளராகவும் சேவையாற்றினர். தமிழர் சீர்திருத்தச் சங்கம், பேரவையின்கீழ் வந்த 24 அமைப்புகளுள் ஒன்றானது. பேரவை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, சாரங்கபாணி தமிழர் திருநாள், குடியுரிமை இயக்கம் முதலிய சமூக முன்னெடுப்புகளில், பேரவைச் செயலாளர் என்ற முறையில் கவனம் செலுத்தினார். 

இதற்கிடையே, சாரங்கபாணி 1952-இல் சீர்த்திருத்தச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் 1954-இல் தலைவராகவும் ஆனார். மூத்தவரான 74 வயது சுப்பய்யா ஆலோசகராக மாறியிருந்தார். பெரியார் 1955-இல் சிங்கப்பூருக்கு இரண்டாவது முறை வருகை புரிந்தார். பெரியாரது வரவேற்பையும் 2 ஜனவரி 1955 அன்று ஹேப்பி வோர்ல்ட் அரங்கில் நிகழ்ந்த அவருடைய சொற்பொழிவையும் ஏற்பாடு செய்வதில் சாரங்கபாணியும் சுப்பய்யாவும் முக்கியப் பங்காற்றினர். பெரியாரின் உரையைக் கேட்க 5,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டிருந்தனர். அப்போது 31 அமைப்புகளைப் பிரதிநிதித்த தமிழர் பிரதிநிதித்துவ சபையினர் ஒருவர் வரவேற்புரை ஆற்றினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் சுப்பய்யா காலமானார். மற்றைய மூன்று முக்கிய உறுப்பினர்களான பழநிவேலு, குப்புசாமி, ஜி ராமலிங்கம் ஆகியோர், வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட காரணத்தாலோ சிங்கப்பூரில் வேலைப் பளு காரணமாகத் தொடர்ந்து சங்கத்தில் ஈடுபடமுடியாததாலோ சங்கத்திலிருந்து விலகிவிட்டனர். 

சிங்கப்பூர்ச் சட்டமன்றத்தில் 1954-இல், இந்துத் திருமணங்கள் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட மசோதாவில் இந்துத் திருமணத்தின் இன்றியமையாத அம்சங்களுள் ஒன்றாகப் பாரம்பரியச் சடங்கையும் சேர்த்திருந்தது. அதற்குத் தமிழர் சீர்திருத்தச் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், உடனடியாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனினும், 1961-இல் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கிய மாதர் சாசனம் நடப்புக்கு வந்தபோது நிலைமை மாறியது. அவ்வாறாக, பாரம்பரியத் திருமணச் சடங்கு தேவைப்படாத கட்டாயத் திருமணப் பதிவு நடப்புக்கு வந்தபோது, சீர்த்திருத்தச் சங்கத்தின் முயற்சிகள் இறுதியில் வெற்றி பெற்றன. 

மக்கள் செயல் கட்சி (ம.செ.க.) முதன் முதலாகப் பதவிக்குவந்த 1959 பொதுத் தேர்தலில் கட்டாய வாக்களிப்புப்பற்றிப் பேச 1958-இல் சங்கக் கட்டடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.  சிங்கப்பூரின் முதல் தமிழ் உயர்நிலைப் பள்ளியான உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியைக் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டச் சங்கம் 1959-இல் தீவிர இயக்கம் ஒன்றைத் தொடங்கியது. அப்பள்ளி 1960-இல் திறக்கப்பட்டாலும், ம.செ.க. அரசாங்கத்தின் இரண்டாம் மொழிக் கொள்கையின் (காண்க தமிழ்க் கல்வி) காரணமாகப் பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டதால், காலப்போக்கில் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்து, இறுதியில் 1982-இல் அப்பள்ளி மூடப்பட்டது. 

மற்றொரு நிகழ்வு சங்கத்தின் செயற்பாட்டைக் கடுமையாகப் பாதித்தது. ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு 3 ஜூலை 1963 முதல் 10 ஜூலை 1964 வரை ஓராண்டுக் காலம் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாகச் சாரங்கபாணி தமிழ் முரசு வெளியிடுவதை நிறுத்திவைத்திருந்தார். அந்த வேலைநிறுத்தத்தின் விளைவாகச் சங்கம் சமூகத்துடன் தொடர்புகொள்ள முக்கிய வாயிலாக விளங்கிய தமிழ் முரசின் உதவியை இழந்தது. தமிழ் முரசு மீண்டும் வெளியாகத் தொடங்கியபின்னர், இடைக்காலத்தில் தொடங்கப்பட்ட மற்றொரு நாளேடான தமிழ் மலருடன் போட்டியை எதிர்கொண்டது. தமிழர் சீர்திருத்தச் சங்கம் 1960-கள் முழுவதும் குறிப்பிடத்தக்க திட்டங்களையோ நிகழ்ச்சிகளையோ முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. எனினும், அது தமிழர் பேரவையின் எல்லா முயற்சிகளிலும் இடம்பெற்றிருந்தது. 

பின்னர், லெட்சுமணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1969 தேர்தலை எதிர்த்து, 1970-இல் சாரங்கபாணி வழக்குத் தொடுத்தார். அப்போது தனியார் துறையில் தொழில் புரிந்த ஜே.பி. ஜெயரத்தினத்தினால் பிரதிநிதிக்கப்பட்ட அவர் தம் வழக்கை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றார். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் மார்ச் 1971-இல் ஆறு மாதர்கள், சங்கச் செயற்குழுத் தேர்தலைக் கேள்விக்குள்ளாக்கி உயர் நீதிமன்றத்தை நாடினர். அதன்பின் சுமார் மூன்றாண்டு கழித்து, 16 மார்ச் 1974 அன்று, பெரியார் காலமான நான்கே மாதத்தில், சாரங்கபாணி காலமானார். தமிழர் சீர்திருத்தச் சங்கம் 19 மார்ச் 1974 அன்று தமிழ் முரசில் சாரங்கபாணிக்கு அஞ்சலி செலுத்தி ஒரு சுருக்கமான இரங்கற்செய்தியை வெளியிட்டது. 

தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் வீழ்ச்சிக்குப் பல காரணங்களைக் கூறலாம். முதலாவதாக, 1951-இல் தமிழர் பேரவை நிறுவப்பட்டபிறகு, அதன் 24 அமைப்புகளில் சீர்திருத்தச் சங்கமும் ஒன்றாகி 1950-களிலும் 1960-களிலும் தன் முக்கியத்துவத்தை இழந்தது. அதே காலக்கட்டத்தில் குறைந்தது நான்கு முக்கியச் சங்க உறுப்பினர்கள், பழநிவேலு, குப்புசாமி, ஜி. ராமலிங்கம், வை.திரு. அரசு ஆகியோர் தங்கள் வேலை காரணமாகச் சங்கத்திலிருந்து விலகநேர்ந்தது. மேலும், 1963-64 காலக்கட்டத்தில் ஓராண்டு தமிழ் முரசு நிறுத்தப்பட்டது, 1969-71 காலக்கட்டத்தில் செயற்குழு, தலைவர் தேர்தல் தொடர்பான வழக்குகள், 1974-இல் இறுதி அடியாக, சாரங்கபாணியின் மறைவு முதலிய பின்னடைவுகள் தமிழர் சீர்திருத்தச் சங்கம் முடங்கிப்போக வழிவகுத்தன. சாரங்கபாணி காலமான 30 ஆண்டுகளுக்குப்பின் தமிழர் சீர்திருத்தச் சங்கம், 2003-இல், சிங்கைத் தமிழ்ச் சங்கமாக மாறியது. 



மேல்விவரங்களுக்கு
Baskaran, Bala. Tamil Journalism in Singapore and Malaya (1875-1941) Filling Up the Gap. Unpublished Manuscript.
“Arrival in Singapore of an Indian Social Reformer,” Malayan Saturday Post, 28 December 1929, 5. (From Newspaper SG)
“Tamils’ Meeting,” The Straits Times, 31 May 1932, 17. (From Newspaper SG)
“Tamils Reform Association,” The Straits Times, 16 August 1932, 5. (From Newspaper SG)
“Tamils’ New Premises,” The Straits Times, 8 July 1935, 12. (From Newspaper SG)
“Singapore Tamils’ Affairs,” The Straits Times, 1 May 1936, 12. (From Newspaper SG)
“Tamils Reform Association,” Malaya Tribune, 7 July 1936, 7. (From Newspaper SG)
“Tamils Demand Removal of Toddy Shops,” Malaya Tribune, 15 February 1940, 5. (From Newspaper SG)
“Reformed Tamil Wedding,” Malaya Tribune, 24 February 1940, 14. (From Newspaper SG)
“Tamils Want Their Own Library,” The Straits Times, 17 April 1940, 11. (From Newspaper SG)
“Malayan Tamil Conference Here,” The Straits Times, 10 April 1941, 10. (From Newspaper SG)
“End Hindu Self Torture Say Tamil Reformers,” The Straits Times, 14 March 1950, 7. (From Newspaper SG)
“TRC Will Help You To Get Citizenship Here Centre Opened In Market St.,” Indian Daily Mail, 27 July 1954, 1. (From Newspaper SG)
“5,000 went to see him,” The Straits Times, 3 January 1955, 7. (From Newspaper SG)
“Tamil association leadership dispute goes to court,” The Straits Times, 21 March 1971, 12. (From Newspaper SG)
“Sarangapany lived for his newspaper and community,” The Straits Times, 30 June 1995, 29. (From Newspaper SG)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA