தமிழ் முரசு



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு 1935 முதல் வெளிவருகிறது. சிங்கப்பூரில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் நாளிதழ்களில் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழ், சாவ் பாவ் சீன நாளிதழ் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, நாட்டின் மூன்றாவது ஆகப்பழமையான நாளிதழ் தமிழ் முரசு.

தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் கொள்கை ஏடாக, எண் 20 கிள்ளான் ரோட்டிலிருந்த சங்க இல்லத்தில் 6 ஜூலை 1935 அன்று தமிழ் முரசின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. சீர்திருத்தச் சங்கத்தின் செயலாளராக இருந்த கோ. சாரங்கபாணி இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஓ. ராமசாமி நாடார், அ.சி. சுப்பையா, கோ. சாரங்கபாணி உள்ளிட்ட சிலர் இணைந்து 1932-இல் தொடங்கிய சங்கம், சீர்திருத்தம் மாத இதழை வெளியிட்டுவந்த நிலையில், வார இதழாகத் தமிழ் முரசு தொடங்கப்பட்டது.

ஒரு காசு விலைக்கு சாரங்கபாணியும் தொண்டர்களும் தெருத்தெருவாகச் சென்று பத்திரிகை விற்றனர். விளைவாக ஆகஸ்ட் 1935-இல் சுமார் 2000 படிகள் விற்றன. வார இதழாகத் தொடங்கப்பட்ட முரசு மூன்று மாதங்களில் வாரம் மும்முறை வெளிவரத் தொடங்கியது. விற்பனை 3,000 படிகளாக உயர்ந்திருந்தபோதும், சங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பால், தமிழ் முரசைக் கைவிடும் முடிவுக்குச் சங்கம் வந்தது. இதழின் அவசியத்தை உணர்ந்த சாரங்கபாணி, இழப்பை விலையாகக் கொடுத்து, 2 மே 1936 அன்று முதல் தமிழ் முரசைத் தமது பொறுப்பில் ஏற்றார். அதன்பின் பெரிய அளவில் எட்டுப் பக்கங்களுடன் மூன்று காசு விலையில் வெளிவரத் தொடங்கியது. விலை கூடியபோதும் பத்திரிகையின் விற்பனை 5,000 படிகளாக உயர்ந்தது. அதற்கடுத்த ஆண்டு, 1937-இல், நாளிதழானது.

ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் (1942-45) நின்றுபோன தமிழ் முரசு, போருக்குப்பின் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. மலாயா 1957-இல் சுதந்திரம் பெற்றதும் மலாயா பதிப்பைத் தனியாக வெளியிடத் தொடங்கியது. சில ஆண்டுகள் மலேசியாவில் காலைப் பதிப்பாகவும் சிங்கப்பூரில் மாலைப் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. தமிழ் முரசு 1960இல் வெள்ளிவிழா கண்டபோது அன்றாடம் 12 பக்கங்களுடன் வெளிவந்த உலகின் முதல் தமிழ் நாளேடாகத் திகழ்ந்தது.

தமிழ் முரசு ஊழியர்கள், சம்பள உயர்வுவேண்டி, 13 ஜூலை 1963 முதல் 10 ஜூலை 1964 வரை ஓராண்டுக்கு வேலை நிறுத்தம் செய்தபோது பத்திரிகை வெளியீடு இரண்டாம் முறையாகத் தடைப்பட்டது. அந்த 1963-64 காலக்கட்டம் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்தே இருக்கப்போகிறதா தனிநாடாகப் பிரியப்போகிறதா என்ற அரசியல் நெருக்கடி மிகுந்த காலக்கட்டம் என்பதால் தமிழ் நாளிதழ் ஒன்றின் தேவை அதிகமாக இருந்தது. அத்தேவையை முன்னிட்டு, 1 மார்ச் 1964 அன்று, தமிழ் மலர் நாளிதழ் உதயமானது. சிங்கப்பூரில் தமிழ் முரசு, தமிழ் மலர் என இரு தமிழ் நாளிதழ்கள் 1964-1980 காலக்கட்டத்தில் வெளிவந்தன. தமிழ் மலர் 1980-இல் நின்றுபோனது. அதன்பின் சிங்கப்பூரின் ஒரே நாளிதழாகத் தமிழ் முரசு தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தது.

சாரங்கபாணி 1974-இல் காலமானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இதழை நடத்தினர். தகுந்த தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் இன்றி, தமிழ் முரசின் விற்பனையும் வீச்சும் பெரிதும் வீழ்ச்சியடைந்து, அன்றாட விற்பனை 5,000 படிகளுக்கும் குறைவானது. வை. திருநாவுக்கரசு 1988-இல் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவரது தலைமையின்கீழ் தமிழ் முரசு அதன் உள்ளடக்கம், தோற்றம், செயல்பாட்டு முறைகளில் கணிசமாக மாற்றம் பெற்று, நட்டத்திலிருந்து மீண்டது. அதன்பின், 1993-இல், சாரங்கபாணியின் குடும்பத்தினரும் திருநாவுக்கரசும் பங்குதாரர்களாக இருந்த ‘ஹைப்ரோ பிரிண்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் உரிமையானது.

தமிழ் முரசின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் பொருட்டு சிங்கப்பூரின் செய்தித்தாள் வெளியீட்டு நிறுவனமான சிங்கப்பூர் ப்ரஸ் ஹோல்டிங்சுடன் இணைக்க விரும்பிய திருநாவுக்கரசு அம்முயற்சியில் வெற்றிகண்டார். எஸ்பிஎச் நிறுவனத்தின் நாளிதழ்களுள் ஒன்றாக 1 நவம்பர் 1995 முதல் தமிழ் முரசு வெளிவரத் தொடங்கியது. தமிழ் முரசு 1990-களில் இருந்தே இணையத்தில் செய்திகளைப் பதிவேற்றிவருகிறது. முனைவர் சித்ரா ராஜாராம் 1999-இல் தமிழ் முரசின் ஆசிரியராகி, சிங்கப்பூரில் பத்திரிகை ஆசிரியரான முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றார். ஆலோசக ஆசிரியராக நீடித்த திருநாவுக்கரசு 2000-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.

எஸ்பிஎச் நிறுவனம் தனது ஊடக விளம்பர வருமானம் பெருமளவு குறைந்ததால் ஊடகத் தொழிலைத் தனியாகப் பிரிக்கப் போவதாக 2021-இல் அறிவித்தது. உத்தரவாதத்திற்குட்பட்ட நிறுவனமாக எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் 2021-இல் உருவாக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அந்த அறநிறுவனம் நடத்தும் எஸ்பிஎச் மீடியா எனும் ஊடகப் பிரிவால் 1 டிசம்பர் 2021 முதல் தமிழ் முரசு வெளியிடப்படுகிறது. 

ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காகப் பாலர் முரசு (2017 முதல்), தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாணவர் முரசு (1952-இல் மாணவர் மணிமன்றம் என்ற பெயரில் தொடங்கியது), இளையர்களுக்கு இளையர் முரசு (1999 முதல்) ஆகிய இணைப்புகளையும் தப்லா! (2008 முதல்) எனும் இலவச ஆங்கில வார இதழையும் தமிழ் முரசு வெளியிடுகிறது. தமிழ் முரசு “சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் குரலாக” நீடிப்பதாக இதழின் 85-ஆம் ஆண்டு நிறைவின்போது, 2020-இல், பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.

தமிழ் முரசு தன் 90-ஆவது ஆண்டுநிறைவை 6 ஜூலை 2025 அன்று கொண்டாடியது. விழாவின் சிறப்பு விருந்தினராகச் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோஸஃபின் டியோ முதலியோர் கலந்துகொண்டனர். தமிழ் முரசின் நீண்டகாலச் சேவையைப்பற்றிப் பேசும்போது, “சிங்கப்பூர் கடந்து வந்த முக்கிய மைல்கற்களை ஆவணப்படுத்தியது மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்தினர் தங்களது கருத்துகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்கான இடத்தைத் தந்துள்ளீர்கள். மேம்பாடுகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றைச் செதுக்கியுள்ளீர்கள்,” என்று அமைச்சர் கூறினார்.




மேல்விவரங்களுக்கு
பாலபாஸ்கரன். கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை. சொந்த வெளியீடு, 2016
தமிழ் முரசு. (n.d.). முக்கியச் செய்திகள். Accessed on August 1, 2025. https://www.tamilmurasu.com.sg 
Tamil Wiki. (2022, November 15). தமிழ் முரசு. Accessed on August 1, 2025. https://tamil.wiki/wiki/தமிழ்_முரசு
Sundaraju, Gunavalli A. The Tamil Murasu: The Evolution of a Local Tamil Newspaper 1935-1974. Singapore: ScholarBank@NUS Repository, 1989. (Call no.: 079.5957 GUN)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.






Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA