சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரான நடேசன் பழநிவேலு (1908 - 2000) நாடக ஆசிரியர், கவிஞர், சிறுகதையாளர் என எழுத்துத் துறையில் 50 ஆண்டுகளும் ஒளி, ஒலிபரப்புத்துறையில் 20 ஆண்டுகளும் பணியாற்றியவர். கலாசாரப் பதக்க விருதாளர். இந்தியாவின் சிக்கல் என்ற ஊரில் பிறந்த பழநிவேலு அங்கேயே தொடக்கக்கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக்கல்வியையும் கற்றார். மலாயாவுக்கு 1927-இல் வந்தவர், தெலுக் ஆன்சனில் ஒரு தோட்டத்தில் எழுத்தர் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்த தோட்டப்பள்ளி ஒன்றில் பகுதிநேரத் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பிறகு 1930-இல் சிங்கப்பூரில் குடியேறி, சிங்கப்பூர் டிராக்ஷன் கம்பெனியில் எழுத்தராகச் சேர்ந்தார். இக்காலக்கட்டத்தில் அவரது படைப்பிலக்கிய ஆர்வம் அதிகரித்தது. முதல் கவிதை ‘வலிமை’, 1931-இல் நவநீதம் வார இதழில் வெளியானது. சமூகப்பணிகளிலும் ஆர்வமாகச் செயல்பட்டவர், கோ. சாரங்கபாணியால் ஈர்க்கப்பட்டு தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் 1932-இல் உறுப்பினராகச் சேர்ந்தார். சங்க உறுப்பினர்களுக்கு வசன, பாட்டுப் பயிற்சிகளை அளித்து சங்கத்தின் வருமானத்திற்காக நாடகங்களை நடத்தினார். இவரது முதல் நாடகம் ‘ஜானி ஆலம்’ 1934-இல் அரங்கேறியது. பிறகு, அவரது சுகுண சுந்தரம் (1936), கௌரி சங்கர் (1937) ஆகிய சீர்திருத்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் முரசு 1935-இல் சாரங்கபாணியின் பொறுப்புக்கு வந்தபோது அதில் கதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். பழநிவேலுவின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளை கவிதை மலர்கள் என்ற தொகுப்பாக 1947-இல் சாரங்கபாணி வெளியிட்டார்.
அதே ஆண்டு, ரேடியோ மலாயாவின் சிங்கப்பூர்ப் பிரிவில் (பின்னாளில், ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர்) பகுதிநேர எழுத்தாளராகச் சேர்ந்த பழநிவேலு, 1949-இல் முழுநேர ஊழியரானார். அங்கேயே 20 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி 1969-இல் ஓய்வுபெற்றார். பின்னர் முழுநேர எழுத்தாளரானார். காதற்கிளியும் தியாகக்குயிலும் என்ற சிறுகதைத்தொகுப்பு 1977-இல் வெளிவந்தது. கவிஞர் ந. பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் என்ற தலைப்பில் அவரது படைப்புகளின் தொகுப்பு இரு பகுதிகளாக 1997இல் வெளிவந்தது. இறுதிவரை எழுத்தும் வாசிப்புமாக இருந்த பழநிவேலு தம் 92-ஆம் வயதில் மறைந்தார். அன்றைய சிங்கப்பூரின் மக்கள்மொழி எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துகொள்ளக்கூடிய ஆவணமாகப் பழநிவேலுவின் படைப்புகள் விளங்குவதாக வை.திரு. அரசு குறிப்பிட்டுள்ளார்.
பழநிவேலுவின் நாடக, இலக்கியப் பங்களிப்புக்காகக் கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் (1987) அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது சில கவிதைகள் சிங்கப்பூர்ப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. பாவலர் ந பழநிவேலுவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில முத்துக்கள் என்ற நூலை ஆங்கில மொழியாக்கத்துடன் (மொழிபெயர்ப்பு: ஆ. பழநியப்பன்) தேசிய நூலக வாரியம் 2013-இல் வெளியிட்டது.
மேல்விவரங்களுக்கு
Balasubramaniam, Sundari. “N. Palanivelu.” Singapore Infopedia. National Library Board Singapore. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=fe27640b-4a0b-4aec-b78c-1bc8f55767c3
The Straits Times, “Living by his pen,” The Straits Times, 9 November 1984. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitstimes19841109-1.2.91.37.7
“N.Palanivelu,” Off Stage, 12 October 2016. https://www.esplanade.com/offstage/arts/n-palanivelu
Natesan, Palanivelu. Oral History Interview by Daniel Chew (Dr.), 10 October 1985. Transcript and MP3 audio, 06:06:57. National Archives of Singapore (accession no. 000588). https://www.nas.gov.sg/archivesonline/oral_history_interviews/record-details/71576ffc-115f-11e3-83d5-0050568939ad
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |