அவாண்ட் நாடகக் குழு இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், ஆங்கில நாடகத்துறைகளில் கணிசமானப் பங்காற்றிவரும் ஒரு கலை அமைப்பு. அது "பல்வேறு கலை வடிவங்களை ஒன்றிணைக்கவும், வளர்க்கவும் பரவலாக்கவும் ஒரு தளமாக" செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவாண்ட் குழுவின் தோற்றுவாய் ஆஸ்திரேலியாவில் உள்ளது. குழுவின் நிறுவனரும் இயக்குநருமான க. செல்வானந்தன் அங்கு வசித்தபோது, 2001-இல் குழு நிறுவப்பட்டது. சுமார் பத்தாண்டுகளுக்குப்பிறகு, 2011-இல், சிங்கப்பூரில் உத்தரவாதத்திற்குட்பட்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. செல்வா நிறுவனத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார்.
தொடக்கத்தில் இருந்தே சிங்கப்பூர்க் கலைஞர்களுடனும் ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுடனும் அவாண்ட் இணைந்து பணியாற்றி வருகிறது. மெல்பர்ன் ஃப்ரிஞ்ச் விழாவில் 2002-இல் அதன் தயாரிப்பு இடம்பெற்றது. கலைஞர்களை இணைப்பதோடு மட்டுமின்றி, ஜப்பானின் புட்டோ, இந்தோனேசியாவின் வாயாங் குலிட், இந்தியாவின் பரதநாட்டியம் உள்ளிட்ட ஆசியக் கலை வடிவங்களையும் அவாண்ட் உள்வாங்கிச் செயல்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள உத்திபூர்வ சுற்றுச்சூழல் கல்வி, ஆராய்ச்சி மையம், இந்தியாவின் மானு ஆர்ட்ஸ், மலேசியாவின் ஃபெனோமினா செனி புரொடக்சி, சிங்கப்பூரின் ரவீந்திரன் நாடகக் குழு எனப் பல்வேறு கலை அமைப்புகளுடன் இணைந்து திறன்களை மேம்படுத்திக்கொள்கிறது.
உலகளாவிய கலைகளுக்கான அனைத்துலக மையமாக விளங்கமுனையும் சிங்கப்பூரின் முயற்சிகளுடன் அவாண்ட்டின் கலைநோக்கு ஒத்துப்போகிறது. அந்நோக்கை முன்வைத்துப் புதிய தொழில்நுட்பங்களையும் உத்திபூர்வச் செயல்பாடுகளையும் இணைத்து வருகிறது. வணிக ரீதியாக வெற்றிகரமான படைப்புகளைத் தொழில்முறையில் தயாரிக்கும் ஒரு தளமாக விளங்க இவ்வமைப்பு விரும்புகிறது. இளம் திறனாளர்களை வளர்த்தெடுக்கும் பட்டறைகள், ஆழ்ந்து கற்கும் திட்டங்கள், பயில்நிலைப் பயிற்சிகள் ஆகிய முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. உள்நாட்டு, அனைத்துலகப் பார்வையாளர்களைச் சென்றடைய சமூக ஊடகத் தளங்களிலும் இறங்கியுள்ளது.
அவாண்ட், சிங்கப்பூரில் தனது 10-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2011-இல், தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரண்டு நாடகங்களை முறையே பிதாமகர் பீஷ்மர், Bhishma the Grandsire ஆகிய பெயர்களில் வழங்கியது. அவை 15 நிமிட இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேற்றப்பட்டன. அத்தயாரிப்புகள் இந்தியா, மலேசியா, இலங்கை நாடுகளிலும் படைக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றன. ஷேக்ஸ்பியரின் ரோமியோ & ஜூலியட் நாடகத்தின் தமிழ் மாற்றுருவாக்கப் படைப்பான ரோம்ஸ் & ஜூல்ஸ் குறிப்பிடத்தக்க மற்றொரு தயாரிப்பு. நாடகக் கலைவடிவத்தின் முழுமையான அனுபவத்தை அளிக்கும் நோக்கில், மேடைக்குப் பின்னால் நடக்கும் நிகழ்வுகளையும் பார்வையாளர்கள் காணும்படிப் புத்தாக்கத்துடன் அப்படைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
அவாண்ட் நாடகக் குழு தன் 20-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, குழுவின் வளர்ச்சிப் பயணத்தைக் காட்சிப்படுத்திய ஒரு நூலைத் தயாரித்தது. பல்லாண்டுகளாகத் தமிழ் நாடகத்துறைக்குச் சேவை செய்தவர்களுக்கு 50 விருதுகளையும் வழங்கியது.
மேல்விவரங்களுக்கு
“Avant Theatre: 20th Anniversary Coffee Table eBook.” Avant Theatre, 2021. https://avanttheatre.com/wp-content/uploads/2021/03/avanttheatre-ebook-20th-anniversary-coffee-table-ebook-version-hi.pdf
Avant Theatre. “Avant Publications.” Avant Innaiya Medai. Accessed on 1 August 2025. https://avanttheatre.com/avant-innaiya-medai/avant-publications/
Avant Theatre. YouTube. Accessed on 1 August 2025. https://www.youtube.com/user/avanttheatre2011/featured
Avant Theatre Facebook. Accessed on 1 August 2025. https://www.facebook.com/avanttheatre/
Avant Theatre (@avanttheatre). TikTok. Accessed on 1 August 2025. https://www.tiktok.com/@avanttheatre?_t=8VbgP8j7fdJ&_r=1
Avant Theatre and Language (@avanttheatreandlanguage). Instagram. Accessed on 1 August 2025. https://www.instagram.com/avanttheatreandlanguage/?igshid=YmMyMTA2M2Y%3D
Avant Theatre. Vimeo. Accessed on 1 August 2025. https://vimeo.com/user14930929
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |