சிங்கப்பூரின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கும் கொண்டாட்டக் காலத்திற்கும் அப்பால் சமூகத்திற்குப் பயன் தருவதற்குமான ஒரு திட்டத்தை உருவாக்கும் முனைப்பில் தமிழ் ஆர்வலர் குழு ஒன்று 2013-இல் கூடிப் பேசியதன் விளைவாக உருவானதே தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் (த.மி.தி.). சிங்கப்பூர் சுதந்தரம் அடைந்த 1965-ஆம் ஆண்டிலிருந்து பொன்விழா ஆண்டான 2015 வரையிலான அரை நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகளை மின்னிலக்கமயமாக்குவது திட்டத்தின் முதல் படி. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய மரபுடைமையை ஓரளவாவது பேணிக்காப்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
நூல் வெளியீட்டாளர்கள் நூல் பிரதிகள் எதனையும் தேசிய நூலக வாரியத்தில் கொடுத்து வைக்காததாலும் அவை வேறு எந்தப் பொதுத்தொகுப்பிலும் இல்லாததாலும் பல நல்ல தமிழ் வெளியீடுகள் ஏற்கனவே பொதுவெளியிலிருந்து மறைந்துவிட்டன. மேலும், சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தகங்களுக்குப் பெரிய சந்தை இல்லாததால், புத்தகக் கடைகளிலும் பல நூல்கள் இல்லாமற்போயின. இந்தச் சூழ்நிலையில், சிங்கப்பூரர்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள வாசகர்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் புத்தகங்களை மின்னிலக்கமயமாக்குவதே சிறந்த வழி என்பதை த.மி.தி. குழு உணர்ந்தது. அது தேசிய நூலக வாரியத்தை அணுகி அது இத்திட்டத்தின் இணை வெளியீட்டாளராக இருக்கவும் வாரியத்தின் தளத்தில் மின்தொகுப்புகளை வைத்திருக்கவும் ஏற்பாடு செய்தது.
இந்த இலக்கிய மின்தொகுப்பில், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எனச் சுமார் 350 நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பில், சுமார் 80 முக்கிய தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இடம்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்கு ஆதரவாகத் தங்கள் படைப்புகளுக்கான மின் உரிமைகளை உடனடியாகக் கையொப்பமிட்டு இலவசமாகக் கொடுத்த நூலாசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிராது. இந்தத் திட்டத்திற்கு 250-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவினர். பெரும்பாலும் தமிழாசிரியர் சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் மெய்ப்புப்பார்த்தல், சிறுகுறிப்பு எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக நன்கொடை வழங்கினர். அதில் மிகப்பெரிய தொகையான $40,000, கொடைவள்ளல் ஹாஜி ஜலீலிடமிருந்து வந்தது. தேசிய மரபுடைமை வாரியம், தேசியக் கலை மன்றம், தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றம் ஆகியவற்றின் கூட்டு ஆதரவையும் த.மி.தி. குழு பெற்றது.
தமிழ் நூல்களை மின்னிலக்கமயமாக்கும் பணி பெருஞ்சவாலாக இருந்தது. இந்தப் பணிக்கான மென்பொருள் அந்தக் காலகட்டத்தில் முழுமையாக உருவாக்கப்படவில்லை. ஆனால் தேசிய நூலக வாரியமும் மென்பொருளை உருவாக்கிய தனியார் நிறுவனமும் பெருமுயற்சி செய்து ஒரு தரமான மின்மயமாக்கத்தை அடைவதில் வெற்றிகண்டன. திட்டம் தொடங்கிய 15 மாதங்களுக்குப்பிறகு, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய மின்தொகுப்பு 22 ஆகஸ்ட் 2015 அன்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் அலுவலக அமைச்சரும் உள்துறை, வர்த்தக, தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ஈஸ்வரன் தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தின் புரவலரும் ஆவார்.
தர்மன் தம் உரையில், த.மி.தி. குழுவின் பணியை ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த "தமிழ்த் தாத்தா" என்று அழைக்கப்படும் உ.வே. சுவாமிநாத ஐயரின் உழைப்புடன் ஒப்பிட்டார். உ.வே.சா. தமிழகம் முழுவதும் பனையோலை வடிவில் சிதறிக்கிடந்த பழம்பெரும் தமிழ்க் காப்பியங்கள் பலவற்றையும் சேகரித்து அச்சுக்குக் கொண்டுவந்தவர். சிங்கப்பூர் இலக்கிய மின்தொகுப்பின் வெற்றியைத் தொடர்ந்து, சிங்கப்பூர்த் தமிழ் நாடக மின்தொகுப்பு, சிங்கப்பூர்த் தமிழ் இசை மின்தொகுப்பு, சிங்கப்பூர்த் தமிழ் நடன மின்தொகுப்பு ஆகியவை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.
For more information
Sankaran, Chitra. “Pay It Forward: The Tamil Digital Heritage Project,” Biblioasia, 1 October 2015. https://biblioasia.nlb.gov.sg/vol-11/issue-3/oct-dec-2015/payitforward/
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |