எஸ். ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் ஈஸ்வரன் (பி. 1962), சிங்கப்பூர் அரசாங்கத்தில் பல அமைச்சுகளில் பணியாற்றிய அமைச்சர், 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்தவர். சென்னையில் பிறந்த ஈஸ்வரன், சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த பின்னர் செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியிலும் தேசிய தொடக்கக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்புக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்ற அவர், பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
அரசியலில் நுழைவதற்கு முன், ஈஸ்வரன் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், நிர்வாக இயக்குநர், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட முக்கியப் பொறுப்புகளில் இருந்தார். ஜே.ஒய். பிள்ளையின் தலைமைத்துவத்தின்கீழ் 1991-இல் சிண்டாவின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று அதன் கட்டமைப்பு, சேவை நோக்கு ஆகியவற்றுக்கு வித்திட்டார். ஈஸ்வரனின் அரசியல் நுழைவு 1997-இல் நிகழ்ந்தது. அவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணியின் நால்வரில் ஒருவராகப் போட்டியிட்டார். குழு 70% வாக்குகளைப் பெற்று வென்றது.
தொடர்ந்து ஈஸ்வரன் பல அரசுப் பதவிகளில் நியமிக்கப்பட்டார்: 2004 முதல் 2006 வரை நாடாளுமன்றத் துணை நாயகராக இருந்தார்; 2006-இல் வர்த்தக, தொழில் துணையமைச்சரானார்; 2008-இல் அதே துறையின் மூத்த துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்; 2009-இல், கல்வியமைச்சின் மூத்த துணையமைச்சராகக் கூடுதல் பொறுப்பை ஏற்றார்; 2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முழு அமைச்சரானார். பிரதமர் அலுவலக அமைச்சர், இரண்டாம் உள்துறை அமைச்சர், இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் முதலிய பதவிகளை ஏற்றார். பின்னர், 2015 பொதுத் தேர்தலை அடுத்து, வர்த்தக, தொழில் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்காக முன்னர் வகித்த பதவிகளைத் துறந்தார். வர்த்தக அமைச்சை மேற்பார்வையிட்ட லிம் ஹெங் கியாங்குடன்இணைந்து பணியாற்றினார். அடுத்து 2018-இல் தொடர்பு, தகவல் அமைச்சராக நியமிக்கப்பட்டபோதும், வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும் தொடர்ந்தார். அமைச்சரவை 2021-இல் மாற்றம் கண்டபோது, வர்த்தக அமைச்சில் தொடர்ந்தபடியே போக்குவரத்து அமைச்சரானார்.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அவர் பலநிலைகளில் பங்காற்றியுள்ளார். தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவராக 2006 முதல் 2016 வரை இருந்தார். சில ஆண்டுகள் பிரதமரின் தேசிய தினச் செய்தியை தமிழில் வழங்கினார். இணைய வர்த்தகம், இணையக் கட்டண முறை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் அனுபவத்தை மேம்படுத்த லிட்டில் இந்தியாவை உருமாற்றும் திட்டத்தை 2018-இல் தொடங்கினார். மின்னிலக்கப் பொருளியல் செழித்து வளரும் சூழலில் லிட்டில் இந்தியாவின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவளித்து அவற்றின் போட்டித்தன்மையை வலுப்படுத்தினார்.
ஈஸ்வரன் 2024 ஜனவரியில், தம்மீது சுமத்தப்பட்ட 27 ஊழல் குற்றச்சாட்டுகளை மறுதளித்தார். அதற்கு இரு தினங்கள் முன்னதாக, மக்கள் செயல் கட்சி உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளைத் துறந்தார். எனினும் செப்டம்பரில் குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை ஈஸ்வரன் ஒப்புக்கொண்டார். தாம் நண்பர்களாகக் கருதிய தொழிலதிபர்கள் இருவரிடமிருந்து ஏழு ஆண்டுகளில் சுமார் 403,000 வெள்ளி மதிப்புள்ள அன்பளிப்புகளைப் பெற்றதற்காக அக்டோபரில் ஈஸ்வரனுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முன்னரே சுமார் 380,000 வெள்ளியைத் தாமாகவே அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஜூன் 2025-இல் அவர் விடுதலையானார்.
மேல்விவரங்களுக்கு
Lin, Kareyst. “Little India merchants in Singapore thrive with digitalisation support.” Connected to India, 8 October 2019. https://www.connectedtoindia.com/little-india-merchants-in-singapore-thrive-with-digitalisation-support/
Wong, Shiying and Wong, Andrew. “Iswaran arrives at State Courts for start of 12-month jail term after deciding not to appeal.” The Straits Times, 7 October 2024. https://str.sg/qbyV
“S. Iswaran.” Wikipedia. Accessed 1 August 2025. https://en.wikipedia.org/wiki/S._Iswaran
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |