குழுத்தொகுதி



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

குழுத்தொகுதி என்பது சில தேர்தல் தொகுதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் ஒரு தேர்தல் தொகுதி. ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் குழுவாகவோ சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு குழுவாக இணைந்தோ குழுத்தொகுதியில் போட்டியிடலாம். ஒவ்வொரு குழுவும் மலாய்ச் சமூகத்தில் இருந்தோ இந்தியர் மற்றும் பிற சிறுபான்மைச் சமூகங்களிலிருந்தோ ஓர் உறுப்பினரை நிறுத்தவேண்டும். அவ்வகையில் குழுத்தொகுதி தனி வேட்பாளர்கள் களமிறங்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதியிலிருந்து வேறுபடுகிறது. நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதே குழுத்தொகுதித் திட்டத்தின் அடிப்படை நோக்கம். 

பொதுத் தேர்தலுக்கு முன்பாகக் குழுத்தொகுதி, சிறுபான்மை வேட்பாளர்களை ஆய்வுசெய்வதற்கும் அவர்கள் அந்தந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைச் உறுதிசெய்வதற்கும் மலாய்ச் சமூகத்தினர் குழு, இந்திய மற்றும் மற்றச் சிறுபான்மைச் சமூகத்தினர் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் செயல் கட்சி (ம.செ.க.) பல்லின அடிப்படையில் நிறுவப்பட்டு, அதன் உறுப்பியம் சிங்கப்பூரின் பல்லினங்களைப் பிரதிபலிக்கும்வகையில் இருந்துவந்துள்ளது. ஆயினும், ஏறக்குறைய 30 ஆண்டு ஆட்சிக்குப்பின், 1988-இல், ம.செ.க. அரசாங்கம், "இளம் வாக்காளர்கள், தேர்தலில் பல்லினப் பங்கீட்டைக் குறித்த போதிய விழிப்புணர்வின்றி, தம் சொந்தத் தேவைகளை முன்னிட்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க விரும்பும் போக்கை" கவனித்தது. என்றாவது ஒரு நாள் ஒட்டுமொத்தமாகச் சீன இனத்தினர் மட்டுமேயுள்ள நாடாளுமன்றம் அமையக்கூடும் என்று அஞ்சியது. எனவே, முன்மொழியப்பட்ட குழுத்தொகுதித் திட்டத்தை ஆய்வுசெய்யப் பொறுக்குக் குழு ஒன்றை ஜனவரி 1988-இல் அமைத்தது. இந்தத் திட்டத்திற்குரிய மக்களின் ஆதரவைக் கணிப்பதோடு நாடாளுமன்றத்தில் பல்லினப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் இதர அனைத்துத் திட்டங்களையும் பரிசீலிக்குமாறும் குழு பணிக்கப்பட்டது. அப்போதைய நாடாளுமன்ற நாயகர் டான் சூ கூன் குழுவுக்குத் தலைமை வகித்தார். அக்குழுவில், அப்போதைய உள்துறை அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான எஸ். ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரதாஸ் ஆகிய இரு இந்தியப் பேராளர்கள் இடம்பெற்றனர்.

தெரிவுக் குழு பொதுமக்களிடமிருந்து 96 சமர்ப்பிப்புகளைப் பெற்றது. அவற்றுள் 50, குழுத்தொகுதித் திட்டத்தை ஆதரித்தன; 28 சமர்ப்பிப்புகள் பல்லின நாடாளுமன்றத்தை உறுதிசெய்வதற்கான அவசியத்தை ஆதரித்தபோதும் குழுத்தொகுதி அல்லாத பிற யோசனைகளையும் முன்மொழிவுகளையும் அளித்திருந்தன. சிறுபான்மைக் குழுக்களின் சமர்ப்பிப்புகள் குழுத்தொகுதி விஷயத்தில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தின. மக்கள் தொகையில் 76 விழுக்காட்டினராகிய சீனர்கள் 37% சமர்ப்பிப்புகளும் 15% விழுக்காட்டினராகிய மலாய்க்காரர்கள் 20% சமர்ப்பிப்புகளையும் அனுப்பியிருந்தனர். அதேவேளையில், 7 விழுக்காடேயுள்ள இந்தியர்கள் 37% சமர்ப்பிப்புகளைத் தாக்கல் செய்திருந்தனர். 

சீனச் சமூகத்தைப் பிரதிநிதித்த சிலர், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவது சிறுபான்மையினருக்கு அரசியல் கட்சிகள் மீது அதீத செல்வாக்கைக் கொடுக்கும் என்று கவலை தெரிவித்தனர். குழுத்தொகுதித் திட்டம், சிறுபான்மையினருக்கு வழங்கும் சலுகைகள் பெரும்பான்மைச் சமூகத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக உணரப்பட்டது. எனினும், ம.செ.க. அரசாங்கம், பல்லினச் சமூகத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் அந்நியப்படுத்தப்பட்டதாக உணர்வதைத் தடுப்பதற்கும் சலுகைகள் வழங்குவதைத் தவிர்க்க முடியாது என்றும் குழுத்தொகுதியே தக்க தீர்வு என்றும் கருதியது.

மலாய்ச் சமூகத்திற்கு, குழுத்தொகுதியில் மலாய்க்காரர்களுக்குரிய சிறப்புச்சலுகை, பிற இனத்தவரின் பார்வையில் அச்சமூகத்தை வலுவற்றதாகக் காட்டக்கூடும் என்னும் கவலை இருந்தது. குழுத்தொகுதித் திட்டத்தின் முந்தைய வடிவம், 1982-இல், ஒரு மலாய் வேட்பாளரை மலாய் அல்லாத வேட்பாளருடன் இணைத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வாய்ப்புகளை மேம்படுத்த முன்மொழிந்தபோது, மலாய்ச் சமூகத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்தது. அப்போது, சமூக விவகார அமைச்சராக இருந்த முனைவர் அகமது மத்தாரும், இந்த யோசனைக்கு ஆதரவாக இல்லை. அவர் பிரதமர் கோ சோக் டோங்கிடம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், இத்தகைய சலுகைகள் அவசியம் என்று ம.செ.க. அரசாங்கம் உறுதியாக நம்பியதால் 1988-இல் குழுத்தொகுதியை உருவாக்க முடிவுசெய்தது, 

இந்தியச் சமூகத்தைப் பொறுத்தமட்டில், அது மலாய்ச் சமூகத்தைப்போலத் தனியாக அங்கீகரிக்கப்படாது, “பிற சிறுபான்மைச் சமூகங்களுடன்” ஒரு "கூட்டாக" குழுத்தொகுதியில் குறிப்பிடப்பட்டது ஆக முக்கியப் பிரச்சினையாக இருந்தது. “பிற சிறுபான்மைச் சமூகங்கள்” என்னும் வரையறையில் இந்தியர்களுக்குத் தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தனிநபர்களும் அமைப்புகளும் வலியுறுத்தினர். 

தமிழ்ச் சமூகத்தின் துடிப்பான பிரதிநிதிகளுள் ஒன்றான வளர்தமிழ் இயக்கம், இந்தியச் சமூகத்திற்குரிய ஏற்பாடு மலாய்ச் சமூகத்தைப்போன்றே தனி அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்று வாதிட்டது. 

மற்றொரு பிரதிநிதியான சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், குழுத்தொகுதித் திட்டத்தில் இந்தியர்கள் தனிச் சமூகமாகக் கருதப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தது. மேலும், பன்மொழிக் கொள்கை மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் இந்திய வேட்பாளர்கள் தமிழில் உரையாடக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்றும் அது வாதிட்டது.

வளர்தமிழ் இயக்கத்தின் பிரதிநிதியான வை.திரு. அரசுவிடம் தெரிவுக் குழு குறிப்பாக இரண்டு முக்கிய விஷயங்களைக் குறித்துக் கேள்வி எழுப்பியது. முதலில், "இந்தியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்" என்று வரையறுப்பதை இயக்கம் ஏற்குமா என்று கேட்கப்பட்டபோது, அது இந்தியச் சமூகத்தின் நலன்களைக் காக்கும் என்பதை ஆமோதித்து ஏற்பைத் தெரிவித்தார். இரண்டாவதாக, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் வேண்டுகோளின்படி, குழுத்தொகுதி இந்திய வேட்பாளர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, “தமிழ்ச் சமூகம் போதிய அளவுக்குத் திறனாளர்களை உருவாக்கி அனுப்பும் என எதிர்பார்க்கிறேன். அதனால் இயல்பாகவே தமிழ் பேசும் வேட்பாளர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால், தமிழ் தெரிந்திருப்பதை ஒரு முன்நிபந்தனையாக நான் வலியுறுத்தமாட்டேன். ஏனெனில், அது மற்றப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்,” என்று அரசு பதிலளித்தார்.

அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ, "சிறுபான்மை இனத்தவர் என்னும் குறையைச் சமாளிக்கப் போதிய வலுவுள்ள இந்திய வேட்பாளர்களைச் சிங்கப்பூர் எப்போதும் அடையாளங்காண முடியும். ஆனால், மலாய்க்காரர்களிடையே அது கடினம்,” என்று விளக்கினார். முதன்முதலில் வரையப்பட்ட குழுத்தொகுதித் திட்டம் இந்தியர்களை உள்ளடக்கியதாக இல்லை என்றும் "இந்திய எதிர்வினை" எழுந்தபோது, அப்போதைய துணைப் பிரதமர் கோ சோக் டோங் இந்தியர்களையும் மற்றொரு சிறுபான்மைச் சமூகமாகச் சேர்க்கும்வகையில் திட்டத்தைத் திருத்தினார் என்றும் லீ பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர்க் குடியரசின் அரசமைப்புச் சட்டத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் செய்ய அதிபரின் ஒப்புதலைப் பெற்றபின், குழுத்தொகுதித் திட்டம் 27 மே 1988 அன்று சட்டமாக்கப்பட்டது.



மேல்விவரங்களுக்கு
“Team-MP bill gets presidential assent,” The Straits Times, 1 June 1988, 1. (From NewspaperSG)
Ong, C. C. et al. “GRC is the best way of doing it,” The Straits Times, 13 January 1988, 10. (From NewspaperSG)
“Team MPs: The key features,” The Straits Times, 11 May 1988, 12. (From NewspaperSG)
“PM and Chok Tong first discussed bill in ’82,” The Straits Times, 12 January 1988, 10. (From NewspaperSG)
“GRCs for next general election,” The Straits Times, 15 June 1988, 1. (From NewspaperSG)
“Group Representation Constituencies,” Singapore Infopedia. Accessed 11 June 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=55ce6567-039d-412f-96b7-c704fe8b5983
“Group Representation Constituencies are legislated,” Singapore Infopedia. Accessed 11 June 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=3828e9b9-f9e5-4943-874a-bbb7fef19104
Group representation constituencies : a summary of the report of the Select Committee. Singapore: National Library Board, 1988. (RSING 324.63095957 SIN) https://www.nlb.gov.sg/main/book-detail?cmsuuid=45e9940f-8ca5-4c00-9245-9077a1b8fcfd
“Types of Electoral Divisions,” Elections Department of Singapore, last updated 1 February 2025. https://www.eld.gov.sg/elections_type_electoral.html
Tham Yuen-C. “GRC system used for benefit of PAP and should be abolished, say PSP’s Leong Mun Wai and Hazel Poa,” The Straits Times, 6 July 2023. https://www.straitstimes.com/singapore/politics/grc-system-used-for-benefit-of-pap-and-should-be-abolished-say-psp-s-leong-mun-wai-and-hazel-poa
Chia, Priscilla. “Revisiting the GRC system’s ‘guarantee’ of minority representation,” Academia SG, 1 June 2021. https://www.academia.sg/academic-views/revisiting-the-grc-systems-guarantee-of-minority-representation/

To read in English     

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA