சந்திர தாஸ், எஸ்.



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

எஸ். சந்திர தாஸ் என அறியப்படும் சீதாராம் சந்திர தாஸ் (பி. 1939), 40 ஆண்டுகளுக்கும் மேலான பொது, அரசியல் வாழ்வில் அரசாங்கம், வணிகத் துறை, இந்திய சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தவர். மக்கள் செயல் கட்சியின் சோங் பூன் தனித்தொகுதி (1980-1988), செங் சான் குழுத்தொகுதி (1988-1996) ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாஸ், 19 அக்டோபர் 1939 அன்று, சிங்கப்பூரில் பிறந்தார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத் துறையில் 1965-ஆம் ஆண்டு இளநிலை (சிறப்புத் தேர்ச்சி) பட்டம் பெற்றார். பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் அரசாங்கப் பணியைத் தொடங்கிய அவர், பின்னாளில் வர்த்தக வளர்ச்சிக் கழகத்தின் தலைவரானார். அரசியல் ஈடுபாடு காரணமாக 1980-இல் அரசாங்கப் பணியிலிருந்து விலகி, தனியார் துறையில் பணியாற்றத் தொடங்கினார். உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களில் தொடர்ந்து உயர் பதவிகளை வகித்தார். தாம் உருவாக்கிய நூர் இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். நெப்டியூன் ஓரியண்ட் லைன்ஸ், செம்பவாங் ஷிப்யார்டு, ஜூரோங் ஷிப்யார்டு எனப் பல பெரிய நிறுவனங்களில் உயர்நிலைப் பொறுப்பில் பணியாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றிய 16 ஆண்டுகளில், பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளின் அரசாங்க நாடாளுமன்றக் குழுத் தலைவர், அரசாங்கக் கருத்தறியும் பிரிவின் தலைவர் என முக்கியப் பதவிகளை தாஸ் வகித்தார். அவரின் பரந்த வணிக அனுபவம், 1972-இலிருந்து, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புகொள்ள வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து 1993-இலிருந்து 2005 வரை என்டியுசி ஃபேர்ப்ரைஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். மேலும் 2007-ஆம் ஆண்டு முதல் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சார்புநிலை வேந்தராகவும் இருந்து வருகிறார்.

அரசநயத் துறையில், சோவியத் ஒன்றியத்திற்கான சிங்கப்பூரின் முதல் வர்த்தகப் பிரதிநிதியாகவும் (1970-1972) துருக்கிக்கான வெளியுறைத் தூதராகவும் (2006-2015) அவர் பணியாற்றினார். இலங்கைக்குரிய வெளியுறைத் தூதராக 2015-இல் நியமிக்கப்பட்டார்.  இந்தியச் சமுதாயத்தினரிடையே நன்கு அறிமுகமான தாஸ், சிங்கப்பூர் இந்தியர் நல்வாழ்வுச் சங்கத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். சங்கத்தின் நோக்கம், இந்தியர்களின் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் அவர்களை மேம்படுத்துவதுமே. பின்னர், அவர் இந்திய சுய உதவிக் குழுவான சிண்டாவின் ஆயுள் அறங்காவலராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசுவுக்கும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான், தமிழ்மொழி அறியா இந்தியர்களுக்காக, ஆங்கில வார நாளிதழான தப்லா! வெளியிடப்பட்டது. தாஸ் ஆற்றிய பல்வேறு பொதுச்சேவைகளுக்காக, அவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள், அரசாங்கம் அளிக்கும் பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் வழங்கும் தொழிலாளர் தோழர் விருது, மேன்மைக்குரிய சேவை விருது உள்ளிட்ட விருதுகள் அடங்கும். 




மேல்விவரங்களுக்கு
NUS Faculty of Arts and Social Sciences. “Distinguished Arts and Social Sciences Alumni Award 2019.” (n.d.). https://fass.nus.edu.sg/about-us/stars/stars-2019/
Ministry of Foreign Affairs Singapore. “MFA Press Statement: Appointment of High Commissioner to the Republic of South Africa and Singapore’s Non-Resident High Commissioner to the Democratic Socialist Republic of Sri Lanka.” May 28, 2015. https://www.mfa.gov.sg/Newsroom/Press-Statements-Transcripts-and-Photos/2015/05/MFA-Press-Statement-Appointment-of-High-Commissioner-to-the-Republic-of-South-Africa-and-Singapores


To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.

 





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA