வை.தி. அரசு என்று பலராலும் அறியப்பட்ட வை. திருநாவுக்கரசு (1926-2008) பத்திரிகையாளர், சமூகத் தலைவர், அரசு ஊழியர் என்று பல்வேறு துறைகளில் பேரும் புகழும் பெற்றவர். தமிழ் முரசு, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், வளர்தமிழ் இயக்கம் ஆகிய அமைப்புகளின் தலைவராக அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவின் மயிலாடுதுறையில் பிறந்த அரசு, சேலம் கல்லூரியில் பொருளியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். மாணவர் பருவத்தில் பூந்தோட்டம் எனும் மாத இதழை நடத்தினார். தமிழகத்தின் பிரபலமான தினத்தந்தி நிறுவனத்தின் தொடக்கக்காலப் பத்திரிகைகளான தினத்தந்தி, தினத்தாள், தினத்தூது, ஈ.வெ. ராமசாமியின் விடுதலை ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர் 1951-இல், தம் 25-ஆம் வயதில், தமிழ் முரசு நாளிதழின் துணையாசிரியராகச் சிங்கப்பூர் வந்தார். அவர் முரசில் பணியாற்றிய அடுத்த எட்டு ஆண்டுக் காலத்தில் அவர் சாதித்தவை பல. மாணவர்களுக்காக மாணவர் மணி மன்றம், வாசகர்களுக்காகச் சங்கப் பலகை என்னும் பகுதிகளைத் தொடங்கினார். அவர் தலைமையில் 1952-இல் தொடங்கப்பட்ட முரசு எழுத்தாளர் பேரவை சிங்கப்பூர் எழுத்தாளர் வளர்ச்சிக்கு உதவியது. ஆசிரியர் கோ. சாரங்கபாணியும் அவரும் உடனிருந்த காலத்தில் தமிழ் முரசு பெரும் வளர்ச்சி கண்டு மலாயா - சிங்கப்பூரில் முதன்மைச் செய்தி இதழானது. சாரங்கபாணி நடத்திய இந்தியன் டெய்லி மெயில் ஆங்கில இதழிலும் அரசு எழுதினார்.
சாரங்கபாணியின் சமுதாயப் பணிக்கு 1950களிலும் 1960களிலும் பேருதவி செய்தவர்களில் அரசு முக்கியமானவர். தமிழர் பிரதிநிதித்துவ சபை அமைக்கப்பட்டது, தமிழர் திருநாள் உருவானது, தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கமைக்கப்பட்டது முதலிய முக்கிய முன்னெடுப்புகள் அக்காலக்கட்டத்தில் நடந்தேறின. ஆக்கபூர்வமான எழுத்தை ஊக்குவித்தல், தமிழர் திருநாள் ஏற்பாடு, தமிழ்ப்பள்ளிகளை நிர்வகித்தல், பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவுவதற்கான விளக்கவுரைகள் ஆகியவை அரசுவின் பணிகளில் குறிப்பிடத்தக்கவை.
அவர், 1958-இல் தமிழ் முரசு நிறுவனத்திலிருந்து விலகிக் கலாசார அமைச்சில் சேர்ந்தார். அங்கு, கண்ணோட்டம், ஆங்கிலத்தில் வெளிவந்த மிரர் ஆகிய நடப்பு விவகார ஏடுகளிலும் தமிழ் வெளியீடுகளிலும் அவருடைய பணி முக்கியமாக இருந்தது. அமைச்சின் ஊடகத் தொடர்புப் பிரிவின் தலைவராகவும் அவ்வப்போது பிரதமரின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டார்.
கலாசார அமைச்சின் ஏனைய வெளியீடுகளான சிங்கப்பூர் புலட்டின், சிங்கப்பூர் இயர் புக், சிங்கப்பூர் ஸ்ட்ரீட் டைரெக்டரி ஆகிய வெளியீடுகளுக்கும் அவர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதிகப் பிரதிகள் விற்பனையான சிங்கப்பூர்: ஆன் இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்டரி – 1941-1984 வரலாற்று நூலின் இணையாசிரியராகவும் ஆசியான் இலக்கிய வரிசையில் 1985-இல் வெளிவந்த த பொயிட்றி ஆஃப் சிங்கப்பூர் நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளார். அவர், தமிழ் முரசு நாளிதழிலும் கலாசார அமைச்சிலும் பணிபுரிந்தபோது அரசாங்கச் செய்திகளிலும் அறிக்கைகளிலும் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியவர். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பத்திரிகைத் துறைகள் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை.
சாரங்கபாணி 1974-இல் மறைந்தபிறகு தமிழ் முரசு சரியான தலைமைத்துவமின்றித் தடுமாறியது. நாளிதழைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்ட வேளையில், அரசாங்கச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அரசு, சாரங்கபாணியின் குடும்பத்தினர் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, 27 டிசம்பர் 1988 அன்று தமிழ் முரசு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் தானும் ஊதியம் பெறாமலேயே அரும்பாடுபட்டுத் தமிழ் முரசு மக்களின் வாழ்வோடு நெருங்கியதாகவும் அவர்களுக்குப் பயன்தரும் ஏடாகவும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்தார். தமிழ் முரசு வெளியீட்டை 1990-இல் கணினி மயப்படுத்தியதும் 1995-இல் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (Singapore Press Holdings) நிறுவனத்தின் (தற்போது எஸ்.பி.எச். மீடியா) வெளியீடுகளில் ஒன்றாக அதனை இடம்பெறச் செய்ததும் அவருடைய மிகப்பெரும் சாதனைகள். தமிழ் முரசு பத்திரிகையின் மதிப்பையும் செல்வாக்கையும் மீண்டும் நிலைநாட்டியபின், 2000-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பத்திரிகையாளராகவும் கலாசார அமைச்சிலும் தமிழ் முரசிலும் ஆற்றிய பணிகள்போக, முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் தேவன் நாயர் உருவாக்கிய தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தில் 1984-இல் தலைமையேற்ற அரசு, திருக்குறள் விழா ஆண்டுதோறும் நாட்டின் இலக்கிய, குடும்ப நிகழ்ச்சியாக நடைபெற வழிவகுத்தார். "உங்கள் பிள்ளையால் முடியும்" என்னும் நாடளாவிய கல்வி ஊக்குவிப்பு இயக்கம், நாடாளுமன்ற குழுத்தொகுதி தேர்தல் திட்டத்தில் இந்தியருக்கு இடமளிப்பதுபற்றி பொறுக்குக் குழு முன் வாதாடி ஏற்கச் செய்த முயற்சி ஆகியவை கழகத்தின்வழி அவர் செய்த பிற சாதனைகள்.
சிங்கப்பூர்த் தாய்மொழிகளின் புழக்கத்தைப் பரப்ப மொழிவாரியான அமைப்புகளை அரசாங்கம் நிறுவியபோது, வளர் தமிழ் இயக்கம் எனும் அமைப்பிற்கு அரசு தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இருந்த காலக்கட்டத்தில் அமைப்பு தெளிவான நோக்கத்தோடு செயற்பட்டுத் தமிழ்ச் சமூகத்திற்குப் பயனளித்தது. மேலும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
அரசுவின் பிற பொதுச்சேவைகளுள், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) அறங்காவலர் குழு உறுப்பினராகவும் (1991-2000) இந்து ஆலோசனை மன்ற உறுப்பினராகவும் (1974–1976) ஆற்றிய பணிகள் அடங்கும்.
தமிழ், இந்தியச் சமூகங்களுக்கு அப்பால், தேசியத் துறைகளிலும் அரசு பங்களித்துள்ளார். தேசிய நினைவுச்சின்ன பாதுகாப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் (1975-1992), 13 ஆண்டுகள் அதன் ஆய்வு, தகவல் பரப்புக் குழுவின் தலைவராகவும், தேசிய ஆவணக் காப்பக வாய்மொழி வரலாற்றுக் கழகத்தின் உறுப்பினராகவும், நாடளாவிய கலை, இலக்கிய, சமூகக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கம் அவருடைய சேவைகளைப் பாராட்டி, 1985-இல் செயல்திறன் பதக்கத்தையும் 1999-இல் பொதுப் பணிப் பதக்கத்தையும் வழங்கியது.
தமிழ் முரசு பொறுப்பை ஏற்றது குறித்து 2003-இல் அவ்விதழுக்கு அளித்த நேர்காணலில் அரசு கூறியது இங்கு நினைவுகூறத் தக்கது:
தமிழ்முரசு இக்கட்டான நிலையில் இருக்கிறது, அதனுடைய மூச்சுத் திணறுகிறது என்று சாரங்கபாணியின் குடும்பம் என்னிடம் சொல்லி அழைத்தபோது, சில மாதங்கள் தயங்கினேன். ஒத்திவைத்தேன்.
ஆனால் சாரங்கபாணியின் மகன்கள், ‘நீங்கள் வரவில்லை என்றால் செய்தித்தாளை மூடுவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று சொன்னபிறகு என்னால் தட்டமுடியவில்லை. அவர்களிடம் சில உறுதி மொழிகளைப் பெற்றபின் பணியை ஏற்றேன்.
முரசின் மதிப்பை உயர்த்தி, விற்பனையைப் பெருக்கியபிறகு, யாராவது விலை கொடுத்து வாங்குமாறு முயல்கிறேன். அப்போது உங்கள் குடும்பம் செய்தித்தாள் உரிமையை விட்டுக்கொடுக்கவேண்டும். அதற்கு இணங்கினால் ஒழிய பாடுபடுவதில் பலனில்லை என்பது முதல் கோரிக்கை.
இரண்டாவதாக உடனடியாகத் தமிழ் முரசை நவீன முறைப்படுத்தவேண்டும். அதற்கு முதலீடு செய்யவேண்டும் என்றேன். அவர்கள் ஒத்துக்கொண்டனர்.
பலரது உதவியுடன் மேற்கொண்ட முயற்சிக்குப்பின் தமிழ் முரசை வாங்கச் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் முன்வந்தது. ‘நிறுவனர் கோ.சாரங்கபாணி’ என்பது தமிழ் முரசில் தொடர்ந்து இடம்பெறவும் ஒத்துக்கொண்டது. அச்சமயத்தில் சிலர் முரசை விற்றது குறித்து மனவருத்தம் கொண்டாலும் இது எனக்கு மனநிறைவளித்த பணி. எஸ்.பி.எச். போன்ற பெரிய நிறுவனம் தமிழ் முரசை வாங்கியிராவிட்டால், சிங்கப்பூரில் தமிழ் நாளிதழ் இல்லாது போயிருக்கும். நாளேட்டின் நீண்ட கால நிலைத்தன்மைக்கும் மேம்பாட்டுக்கும் இந்த மாற்றம் வழிவகுத்தது.
மேல்விவரங்களுக்கு
Gunavalli A. Sundaraju. The Tamil Murasu: The Evolution of a Local Tamil Newspaper 1935-1974. ScholarBank@NUS Repository, 1990.
Thirunavukkarasu, Vaidyanathan (V. T. Arasu). Oral history interview by Dr. Jason Lim, 5 May 2000. Transcript and MP3 audio, 15:39. National Archives of Singapore (accession no. 002307)
Ng Wei Kai. “Two ST Journalists Honoured at Inaugural Singapore Press Club Awards,” The Straits Times, 11 June 2022. https://www.straitstimes.com/singapore/two-st-journalists-honoured-at-inaugural-singapore-press-club-awards
“V. T. Arasu,” Wikipedia. Accessed 1 August 2025. https://en.wikipedia.org/wiki/V._T._Arasu
“081105 VT Arasu,” Singapore Obituaries, 18 January 2009. https://singaporeobituaries.blogspot.com/2009/01/081105-vt-arasu.html
Sankaran, Chitra and Thinnappan, Subramanian P. First Step: Tamil in an International Arena: Conference Proceedings. Singapore: The Centre for the Arts, National University of Singapore, 2004.
பாலபாஸ்கரன். கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை. சொந்த வெளியீடு, 2016.
“தமிழ் முரசு.” Tamil Wiki. Accessed on 1 August 2025. https://tamil.wiki/wiki/தமிழ்_முரசு
தமிழ் முரசு. Accessed on 1 August 2025. https://www.tamilmurasu.com.sg
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |