தர்மன் சண்முகரத்னம் (பி. 1957) சிங்கப்பூர்க் குடியரசின் ஒன்பதாம் அதிபர். அப்பதவியை வகிக்கும் இரண்டாவது தமிழர். அதிபராகவும் அதற்குமுன் அமைச்சர், மத்திய வங்கியாளர், அனைத்துலக ஆலோசகர் முதலிய பதவிகளிலும் ஆற்றிய பணிகளுக்காகப் பலதரப்பினராலும் போற்றப்படுபவர். அரசாங்கத்திலிருந்தபோது, நாட்டின் பொருளாதார மீள்திறனை உறுதிப்படுத்தவும் அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் மதிப்பும் வாய்ப்புகளும்கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் முனைப்புடன் செயற்பட்டார்.
தர்மன் சிங்கப்பூரில் யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர், சிங்கப்பூர் ‘நோயியலின் தந்தை’ எனக் கருதப்படும் கே. சண்முகரத்னத்தின் மகன். ஆங்கிலோ-சீனப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த தர்மன், பின்னர் லண்டன் பொருளியல் கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். அதன்பின் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்டு கென்னடி கல்விக் கழகத்தில் அரசாங்க நிர்வாகத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். அங்குக் கல்வியிலும் தலைமைத்துவத் திறனிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் லூசியஸ் என். லிட்டாவர் கல்விமான் விருதைப் பெற்றார்.
தர்மன் 1982-இல் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் பொருளியலாளராகச் சேர்ந்து, பின் அதன் பொருளியல் இயக்குநரானார். இடையில், 1995 முதல் – 1997 வரையிலான காலக்கட்டத்தில் கல்வி அமைச்சில் பணிபுரிந்த அவர், 2001 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் பணியாற்றினார். இறுதியில், அதன் நிர்வாக இயக்குநரானார்.
தர்மன் 2001 பொதுத் தேர்தல்மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஜூரோங் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் ஐந்து வேட்பாளர்களுள் ஒருவராகக் களம் கண்ட அவர், ஏறக்குறைய 80% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் அணியை வழிநடத்தி அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
அடுத்த 22 ஆண்டுகளில் அவர் கல்வி, நிதி எனப் பல துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். துணைப் பிரதமராகவும் பொருளியல், சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், இறுதியில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதோடு, 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
தர்மன் 1990-இல் இந்தியர் கல்விச் செயற்பாட்டுக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். அக்குழுவின் அறிக்கையே 1991-இல் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) நிறுவப்பட வழிவகுத்தது. பின்னர் 2008 முதல் 2023 வரை சிண்டாவின் அறங்காவலர் குழுவுக்கும் அந்தச் சுய உதவி அமைப்பின் பல முயற்சிகளுக்கும் தலைமை தாங்கினார். அவற்றுள், ஒற்றைப் பெற்றோரான இந்தியத் தாய்மார்கள் சொந்தக்காலில் நின்று சுதந்திரமாக வாழ வழியமைக்கும் ‘அதீனா திட்டமும்’ அடங்கும். மேலும், மூத்த வணிக, தொழில்துறைத் தலைவர்கள் அர்த்தமுள்ள வகையில் சமூகத்திற்குப் பங்களிக்க வகைசெய்யும் இந்தியத் தொழில்துறைத் தலைவர்கள் வட்டமேசை அமைப்பையும் அவர் 2011-இல் தொடங்கினார். மேலும், கல்வி அமைச்சராகப் பதவி வகித்தபோது, 2005-இல், அன்றைய சிம் பல்கலைக்கழகத்தில் (தற்போது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்) தமிழில் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். அது பல்கலைக்கழகங்களில் தமிழ்க்கல்வி அதிகரிக்க வழிவகுத்தது.
தர்மன், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜூலை 2023-இல் மக்கள் செயல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நாடாளுமன்றத்திலிருந்தும் அரசாங்கப் பதவிகளிலிருந்தும் விலகினார். தேர்தல் பிரசாரத்தின்போது, ‘ஒருவருக்கொருவர் மரியாதை’ என்னும் முழக்கவரியை முன்வைத்தார். அது, அனைத்துத் திறன்களையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கவும் இன நல்லிணக்கம், பல்லினப் பண்பாட்டுப் பரிமாற்ற நடைமுறைகளை ஆழப்படுத்தவும் அவர் நீண்ட காலமாக வலியுறுத்திவந்ததைப் பிரதிபலித்தது. தேர்தல் சின்னமாக அவர் தேர்ந்தெடுத்த அன்னாசிப் பழம், அதன் எளிமைக்காகப் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
தர்மன் 1 செப்டம்பர் 2023 அன்று, 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் பெரும் வெற்றிபெற்று, சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நெடுங்கால அடித்தள, அரசாங்கச் சாதனைகள், மக்கள் அவரைத் தம்மில் ஒருவராகக் கருதுவது ஆகியவற்றைச் சுட்டி, “தர்மன் விளைவு”தான் வெற்றிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
அனைத்துலக அளவில், தர்மன், நிதிச் சீர்திருத்தங்கள், எதிர்காலப் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ளும் தயார்நிலை, நீடித்த நிலைத்தன்மைமிக்க நீர் மேலாண்மை, கல்வியையும் நல்ல வேலைகளையும் அனைவரும் அடைய வழிசெய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்திய பல உயர்நிலைக் குழுக்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார். அனைத்துலக நிதிக் கழகம் 2019-இல் அவருக்கு அதன் முதல் தனிச்சிறப்புமிக்க தலைமைத்துவ, சேவை விருதை வழங்கியது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில், 30 நாடுகள் குழுவின் அறங்காவலர் குழுத் தலைவர், நீர்ப் பொருளியலுக்கான உலக ஆணையத்தின் இணைத் தலைவர், உலகப் பொருளியல் மன்ற அறங்காவலர் குழு உறுப்பினர், ஐக்கிய நாடுகள் மனித மேம்பாட்டு அறிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர் என நான்கு அனைத்துலக நியமனங்களைத் தர்மன் ஏற்றிருந்தார். அதிபரும் அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில், தேசிய நலன்களுடன் ஒத்துப்போகும் அனைத்துலகப் பதவிகளை வகிக்க ஏதுவாக, அரசமைப்பில் ஒரு திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியதால், அதிபரான பிறகும் முதல் மூன்று பதவிகளை அவர் தொடர்ந்து வகித்தார். உலக வங்கிக் குழுமம் 2024-இல் வேலைவாய்ப்புகளுக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகத் தர்மனை நியமித்தது.
தமது இளமைக்காலத்தில் ஒரு விளையாட்டு வீரராகத் திகழ்ந்த தர்மன், தம் பிற்கால வாழ்க்கையைச் செதுக்கியதில் விளையாட்டின் பங்கைப்பற்றி அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். அவர் ஒருங்கிணைந்த பள்ளிகளுக்காகவும் பின்னர் பிரீமியர் லீக் மன்றங்களுக்காகவும் ஹாக்கி விளையாடினார். மேலும், காற்பந்து, திடல்தட, கிரிக்கெட் விளையாட்டுகளில் தம் பள்ளிக்காகவும் ஹாக்கி, ஸ்குவாஷ் விளையாட்டில் பல்கலைக்கழகத்திற்காகவும் விளையாடினார். மீள்திறன், பரஸ்பர மரியாதை, பல்லினத்துவம் ஆகியவற்றை விளையாட்டு மேம்படுத்தும் என்பதால், விளையாட்டில் பங்கேற்கும் பண்பாட்டை வளர்க்கவேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பண்பாட்டுப் பரிமாற்றத்தில் மிகுந்த அக்கறையுள்ள தர்மன் சண்முகரத்னம், பிப்ரவரி 2024-இல், “நம்முடைய சிங்கப்பூர்ப் பண்பாடுகளில் நம்மால் நிச்சயமாக இன்னும் அதிக அக்கறைகொள்ள முடியும். அவ்வாறு முனையும்போது, பண்பாடுகளுக்கு இடையிலான ஊடாட்டங்களை வலுப்படுத்தவும் நமது தேசிய அடையாளத்தைச் செறிவுமிக்கதாய் ஆக்கவும் நம்மால் முடியும் என நான் நம்புகிறேன். அது ஒரு தொடர்பயணம். ஆயினும், சிங்கப்பூரின் உயிர்த்துடிப்பை வலுவாக்குவதைக் காட்டிலும் வேறு எப்பயணமும் அதிக அர்த்தமுள்ளதாக இராது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேல்விவரங்களுக்கு
“President In Office,” Istana Singapore. Accessed 10 July 2025. https://www.istana.gov.sg/The-President/President-In-Office
“Highlights: Tharman elected Singapore's next President after landslide victory,” Channel NewsAsia (CNA), 2 September 2023. https://www.channelnewsasia.com/singapore/singapore-presidential-election-live-tharman-elected-president-results-3729556
“President Tharman to co-chair World Bank’s new high-level advisory council on jobs,” The Straits Times, 12 August 2024. https://str.sg/pDrs
“Landslide win due to ‘Tharman effect’, voters did not treat election as referendum on PAP: Analysts,” The Straits Times, 14 November 2024. https://str.sg/iSV
“A schoolboy athlete with a love and respect for sport - President Tharman,” The Straits Times, 30 July 2024. https://str.sg/rRL8
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |