நாட்டின் அறிவியல் முன்னோடிகளுள் ஒருவரான கனகரத்னம் சண்முகரத்னம் (1921-2018), சிங்கப்பூர் மருத்துவச் சமூகத்தால் “நோயியலின் தந்தை” எனப் போற்றப்படுபவர். மக்கள்தொகையை அடிப்படையாகக்கொண்ட புற்றுநோய்ப் பதிவகத்தைத் தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக உருவாக்கியவர். மேல் மூச்சுக்குழாய்ப் புற்றுநோய் வகைப்பாட்டு வழிகாட்டிகளை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியபோது, அப்பணிக்குத் தலைமை வகித்தவர். நோயியல் கழகங்களின் அனைத்துலக மன்றம் (1974-78), புற்றுநோய்ப் பதிவகங்களின் அனைத்துலகச் சங்கம் (1984-88) உள்ளிட்ட பல அனைத்துலக அமைப்புகளிலும் அவர் தலைமைப் பொறுப்பு வகித்திருக்கிறார்.
சிங்கப்பூரில் பிறந்த சண்முகரத்னம், 1938-இல் சிங்கப்பூரின் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரில், சிங்கப்பூர் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு உள்ளானபோது, அவருடைய படிப்புத் தடைப்பட்டது. போருக்குப்பின் படிப்பைத் தொடர்ந்த அவர், 1947-ஆம் ஆண்டு மாணவர்களுள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றதற்காக லிம் பூன் கெங் பதக்கம் பெற்றார். பின்னர் அவருக்குப் பிரித்தானிய அரசியார் ஆய்வூதியம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் 1957-இல் நோயியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக, 1947-இல், பிரிட்டிஷ் உயர்கல்வி ஆணையத்துடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி, ராஃபிள்ஸ் கல்லூரி ஆகியவற்றின் நிலையை மேம்படுத்த ஆணையம் அளித்த பரிந்துரைகளில் சண்முகரத்னம் முக்கியப் பங்காற்றியதாக அதன் தலைவர் கார்-சாண்டர்ஸ் பிரபு குறிப்பிட்டார். அவ்விரு கல்லூரிகளும் இணைந்து மலாயாப் பல்கலைக்கழகமாக உருவெடுக்க ஆணையம் பரிந்துரைத்தது. அதுவே பின்னாளில் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகம் ஆனது.
சண்முகரத்னம், அரசாங்க மருத்துவச் சேவையில் 1948 முதல் 1960 வரை நோயியல் மருத்துவராகப் பணியாற்றியபின், 1960-இல் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் (பின்னாளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்) பேராசிரியரானார். ஏராளமான மருத்துவ மாணவர்களுக்கு வழிகாட்டினார். மருத்துவக் கல்விப்புலத் தலைவராக 1962 முதல் 1964 வரை பணியாற்றினார். மருத்துவக் கழகத்தின் தலைவராக 1960-களின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் மருத்துவப் பட்டமேற்படிப்பை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். லீ அறநிறுவனம் - தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது முதன்முதலில் அவருக்குத்தான் 2001-இல் வழங்கப்பட்டது. என்.யு.எஸ். தலைசிறந்த சேவை விருதை 2002-இல் பெற்றார்.
அவர் அரசாங்க நோயியல் துறையில் பணியாற்றும்போது, திசுவியல் அடிப்படையில் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட அனைத்துப் புற்றுநோய்களையும் அட்டவணைப்படுத்தித் தொகுத்தார். பின்னர் 1967-ஆம் ஆண்டுவாக்கில் அது தேசிய அளவிலான புற்றுநோய்ப் பதிவகமாக வளர்ச்சி கண்டது. அவர் சிங்கப்பூர்ப் புற்றுநோய்ப் பதிவகத்தின் இயக்குநராக அது நிறுவப்பட்டதிலிருந்து 2002 வரை சேவையாற்றினார்.
நோயியல் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டிருந்த அவர், தம் 94-ஆம் வயதில் ஓய்வுபெறும்வரை கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். சுமார் 70 ஆண்டுகள் சேவைக்குப்பின் அவர் தம் 97-ஆம் வயதில் காலமானார். கனகரத்னம் சண்முகரத்னம் தம் தொழில்முறைச் சாதனைகளுக்காக மட்டுமின்றி, தலைசிறந்த அறிஞராக இருந்தபோதும், அவர் காட்டிய பணிவுக்காகவும் வாழ்நாள் முழுதும் தம் செயற்பாடுகளில் தொடர்ந்து உன்னத நிலையைக் கடைப்பிடித்ததற்காகவும் நினைவுகூரப்படுகிறார். சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்த தர்மன் சண்முகரத்னம் அன்னாரின் மகன்.
மேல்விவரங்களுக்கு
Sim Shuzhen. 2018. “Renowned Pathologist K. Shanmugaratnam Dies at 97 (in Memoriam) – Asian Scientist Magazine.” Asianscientist.com. 2018. https://www.asianscientist.com/2018/07/features/kanagaratnam-shanmugaratnam-obituary-pathology/
NUS. Accessed on 14 July 2025. https://sph.nus.edu.sg/2019/12/commemorating-50-years-of-the-singapore-cancer-registry-and-the-legacy-of-professor-k-shanmugaratnam/
Gene, Ng Keng, “Founder of Singapore Cancer Registry K. Shanmugaratnam Dies Aged 97,” The Straits Times, July 29, 2018. https://www.straitstimes.com/singapore/founder-of-singapore-cancer-registry-k-shanmugaratnam-dies-aged-97
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |