இந்து அறக்கட்டளை வாரியம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

இந்து அறக்கட்டளை வாரியத்தின் வரலாறு 1905-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அன்றையக் காலனித்துவ அரசாங்கம், முஸ்லிம், இந்து வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்காக ஒரு சட்டத்தை இயற்றி, முகமதிய, இந்து அறக்கட்டளை வாரியத்தை ஒரு நிர்வாக அமைப்பாக நிறுவியது. பல பள்ளிவாசல்கள், இந்துக் கோயில்கள், சீக்கிய, பார்சி சொத்துகள், இடுகாடுகள் ஆகியவை வாரியத்தின்கீழ்க் கொண்டுவரப்பட்டன. ஆனால், பல்வேறு சமய அமைப்புகளை நிர்வகிப்பதில் அதிகரித்துவந்த சிக்கல்கள் காரணமாக, காலப்போக்கில் இக்குழுவின் பணிகள் பிரித்தளிக்கப்பட்டன. குறிப்பாக, 1968-இல், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தோற்றுவிக்கப்பட்டு, பள்ளிவாசல்கள் அதன்கீழ் கொண்டுவரப்பட்டபிறகு, 1969-ஆம் ஆண்டில், ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின்மூலம், இந்து அறக்கட்டளை வாரியம் நிறுவப்பட்டது. அதன்மூலம், நான்கு இந்துக் கோயில்களை உள்ளடக்கிய இந்து அறக்கட்டளைகளின் நிர்வாகப் பொறுப்புகளும், சொத்துக்களும், இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் வந்தன.

ஸ்ரீ மாரியம்மன் கோயில் (சவுத் பிரிட்ஜ் ரோடு), ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் (சிராங்கூன் ரோடு), ஸ்ரீ சிவன் கோயில் (கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2), ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (தோ பாயோ) ஆகியவையே அந்த நான்கு இந்துக் கோயில்கள். இவற்றுள் முதல் இரண்டு கோயில்கள் முறையே 1973, 1978-ஆம் ஆண்டுகளில் தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தக் கோயில்களின் காப்பாளராக, இந்து அறக்கட்டளை வாரியம் அவற்றின் புதுப்பிப்பு, பராமரிப்புப் பணிகளில் முக்கியப் பங்காற்றுகின்றது. சிங்கப்பூரில் நடைபெறும் ஆகப்பெரிய இரண்டு இந்து விழாக்களான தைப்பூசத்திற்கும் தீமிதித் திருவிழாவுக்கும் அது பொறுப்பு வகிக்கின்றது. மேலும், வாரியத்தின்கீழ் இயங்கும் கோயில்களில் ஆண்டுதோறும் சுமார் 40 முக்கிய விழாக்களும் 300-க்கும் அதிகமான சமயச் சடங்குகளும் நடத்தப்படுகின்றன.

இந்து அறக்கட்டளை வாரியம், கலாசார, சமூக, இளையர் அமைச்சின்கீழ் இயங்கும் ஒரு சுயநிதி அமைப்பு. வாரியம், கோயில் மேலாண்மைக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களை கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் நியமிக்கிறார். இந்த உறுப்பினர்கள் கோயில் செயல்பாடுகள், திருவிழாக்கள், பக்தர்களை ஈடுபடுத்துதல் பற்றிய கொள்கைகள், நீண்டகாலத் திட்டங்கள், நிர்வாகம் ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறார்கள். வாரியத்தால் வழிநடத்தப்படும் சமுதாயத் திட்டங்களையும் அவர்கள் கவனித்துக் கொள்கின்றனர்.

காலனித்துவ அரசாங்கம் 1918-இல் இந்து ஆலோசனை மன்றத்தை நிறுவியது. இந்துக் கோயில்களில் விழாக்கள், சமயச் சடங்குகள் பற்றி அரசாங்கம் முடிவெடுக்க உதவிய மன்றம், திருவிழா நாட்களின் முக்கியத்துவம், பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு ஆகியவை பற்றியும் ஆலோசனை வழங்கியது. காலப்போக்கில், இந்துக் கோயில்களில் மனிதவளத் தேவைகள், கோயில்களுக்கான நில ஒதுக்கீடு, இடுகாடு, தகன நிலங்கள் நிர்ணயிப்பது, பலதரப்பட்ட இந்து சமூகத்தினரிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவது என மன்றத்தின் பணி விரிவடைந்து. மன்றமும் வாரியமும் சில வேளைகளில் ஒரே மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுவதுபோல் இருந்ததால், 1983-இலிருந்து, இருகுழுக்களும் சேர்ந்தே மேலாண்மைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. இதன்வழி இந்து சமூகத்தின் தேவைகளை இன்னும் நேர்த்தியாக நிறைவேற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

பல்பண்பாட்டுச் சிங்கப்பூரில், சமயங்களுக்கு இடையில் மேலும் அதிகப் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் சமயக் கூட்டுறவு அமைப்பில் வாரியத்தின் நீண்டகாலப் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எடுத்துக்காட்டாக, வாரியம், பிற சமயச் சமூகங்களுடன் இணைந்து கூட்டுக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துவருகிறது. ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வருடாந்திரச் சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் விருந்து நிகழ்ச்சி, ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் இடம்பெறும் நோன்புப் பெருநாள், பெளத்த சமூகத்துடன் விசாக தினக் கொண்டாட்டங்கள், கத்தோலிக்கச் சமூகத்துடன் கிறிஸ்துமஸ் கூட்டு வழிபாடு ஆகியவை அவற்றுள் அடங்கும்.

இந்து அறக்கட்டளை வாரியம் ஒரு சமய அமைப்பாக மட்டுமல்லாமல், கல்வியிலும் சமுதாய மேம்பாட்டிலும்கூட முக்கியப் பங்கை ஆற்றுகின்றது. எடுத்துக்காட்டாக, 1999-ஆம் ஆண்டு முதல், அது நடத்திவரும் ஆசிரமத்தைக் குறிப்பிடலாம். சிங்கப்பூரில் உள்ள ஒரே இந்திய, இந்து இடைவழி இல்லம் அது. தண்டிக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் மறுவாழ்வு பெற்று, சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைவதற்கு அது உதவி வருகின்றது. இந்து அறக்கட்டளை வாரிய அமைப்புச் சட்டம், 2010-ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டது. அதன்மூலம், கல்வி, சமுதாய, நல்வாழ்வுத் திட்டங்களில் ஈடுபட வாரியத்திற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த மாற்றம், வாரியம் நடத்தும் உள்ளத்திலிருந்து ஓர் அன்பளிப்பு முதலிய சமூகத் திட்டங்களை மேலும் விரிவாகச் செயல்படுத்த உதவியது. இத்திட்டம், சிங்கப்பூர் முழுவதும் உள்ள 200-க்கும் அதிகமான பின்தங்கிய குடும்பங்களுக்கு மாதாந்திர உணவுப் பொட்டலங்களை அல்லது உணவுப் பற்றுச்சீட்டுகளை வழங்குகிறது. வாரியம், உயர்கல்வி நிலையங்களில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவியையும் வழங்குகின்றது. சிவதாஸ் – இந்து அறக்கட்டளை வாரியக் கல்விநிதித் திட்டம், மானியங்கள், கல்விக் கட்டண நிதியுதவிகள் என 2,000க்-கும் அதிகமான மாணவர்களுக்கு $5 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளது. மற்றொரு கல்வி உதவித் திட்டமான ராம அருணாசலம் – ஏ.ஆர். மங்கையர்க்கரசி ஆச்சி நிதி, டிஸ்லெக்சியா எனும் வாசிப்புக் குறைபாடு உள்ளிட்ட, சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டது. பிள்ளைகளுக்கு அறநெறிகளையும் விழுமியங்களையும் போதித்தல், பொதுமக்களிடையே சுகாதார நல்வாழ்வை ஊக்குவித்தல் ஆகியவை வாரியத்தின் பிற முக்கிய இலக்குகள். இத்தகைய நடவடிக்கைகள், இந்து அறக்கட்டளை வாரியத்தை வெறும் கோயில் நிர்வாக அமைப்பு என்னும் நிலையிலிருந்து, பொதுச் சமுதாயத்தின் சமயம் சார்ந்த, சமயம் சாராத் தேவைகளையும் கவனித்துக்கொள்ளும் துடிப்பானதொரு சமுதாய அமைப்பாகவும் உயர்த்தியுள்ளன. 

 


மேல் விவரங்களுக்கு
இந்து அறக்கட்டளை வாரியம். (n.d.). Accessed 1 August 2025. https://heb.org.sg/
பாலச்சந்திரன், லாவண்யா, கோ, சில்வியா (பதிப்பு.), சிங்கப்பூரில் இந்து மதம் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம். சிங்கப்பூர்: இந்து அறக்கட்டளை வாரியம், [2022]. (Call no. 294.5095957 HIN)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA