சிங்கப்பூரில், கிறிஸ்துமஸ் சமய ரீதியாகவும் சமயச்சார்பற்ற முறையிலும் கொண்டாடப்படுகிறது. வீடுகளிலும் பணியிடங்களிலும் மக்கள் ஒன்றுகூடிக் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது வழக்கமாகியுள்ளது. இந்தக் கொண்டாட்டங்களில், தனித்துவமிக்க ஒரு பிரிவினராகிய தமிழ்க் கிறிஸ்துவர்கள் சிங்கப்பூரின் பன்முகத்தன்மைகொண்ட சமூகத்திற்குள் தங்கள் பண்பாட்டையும் சமய மரபுகளையும் பாதுகாத்து வெளிப்படுத்துகிறார்கள்.
சிங்கப்பூர்த் தமிழ்க் கிறிஸ்துவச் சமூகங்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளைப் பல வாரங்களுக்குமுன்பே தொடங்குகின்றன. தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம், லூர்து அன்னை தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்கள், கிறிஸ்துமஸ் பாடல்கள், யேசு பிறப்பு நாடகங்கள், பிரார்த்தனைக் கூட்டங்கள் முதலியவற்றைத் தமிழிலேயே நடத்துகின்றன. அந்த நிகழ்வுகள் ஆன்மீக உணர்வையும் சமூகப் பிணைப்பையும் வளர்க்கின்றன.
தமிழ்க் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவது கொண்டாட்டத்தின் முக்கிய அங்கம். ஆங்கில மரபார்ந்த பல கிறிஸ்துமஸ் பாடல்களைத் தமிழில் பாடுகிறார்கள். பிரபலமான "பக்தரே வாரும்", "கேள் ஜென்மித்த ராயர்க்கே!" “ஆர்ப்பரிப்போம் இந்நன்னாளில்” ஆகியவை அவற்றுள் அடங்கும். அவற்றோடு, உள்ளூர்த்தன்மைமிக்கப் பாரம்பரியக் கிறிஸ்துமஸ் பக்திப் பாடல்களையும் தமிழில் பாடுகிறார்கள். அவை, தமிழ்க் கிறிஸ்துவர்களின் வளமான பண்பாட்டுப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேற்கத்திய உணவுகளுடன் பிரியாணி, கோழிக் குழம்பு, ஆப்பம், முறுக்கு முதலிய பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்படுகின்றன. உணவுடன் குடும்ப ஒன்றுகூடல்கள் கொண்டாட்டங்களின் மையமாக அமைந்து சமூக, குடும்பப் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன. கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் நள்ளிரவுத் திருப்பலி, தமிழ்க் கிறிஸ்துவர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வு. விளக்குகள், மலர்கள், குழந்தை இயேசு பிறப்புக் காட்சிகள் முதலியவற்றால் அலங்கரிக்கப்படும் தேவாலயங்கள், பல்வேறு பின்னணிகள்கொண்ட வழிபாட்டாளர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கின்றன. சமயம் சார்ந்த தமிழ்ப் பாடல்களும் சங்கீதமும் வழிபாட்டின் இன்றியமையாத அங்கங்கள். கொண்டாட்டத்தின்போது அணியப்படும் புடவைகள், ரவிக்கைகள் முதலிய பண்டிகைக்கால உடைகளும் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் இதர முக்கியக் கூறுகளாகச் சமூக நலத்திட்டங்களும் தொண்டு நடவடிக்கைகளும் அமைகின்றன. தேவாலயக் குழுக்கள் உதவி தேவைப்படுவோர்க்கு உணவு, உடை, அத்தியாவசியப் பொருள்கள் முதலியவற்றை வழங்குகின்றன. இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்துமஸ்கால உணர்வை அது பிரதிபலிக்கிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிங்கப்பூர்த் தமிழ்க் கிறிஸ்துவர்களிடையிலான பண்பாட்டுப் பன்முகத்தன்மையையும் சமூகப் பிணைப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், அவை பண்டிகைக் காலத்தைச் சமய நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றிச் சமூக ஒற்றுமைக்கான ஒரு வாய்ப்பாகவும் மாற்றுகின்றன.
மேல்விவரங்களுக்கு
“Christmas.” Roots.sg. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/ich-landing/ich/christmas
Vasu, Suchitthra. “Christmas rites and rituals.” Singapore Infopedia. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=f06d310c-4f95-445d-8e78-01105ee8d5b3
Tamil Methodist Church Singapore. Accessed on 1 August 2025. https://tamilmethodist.sg
“கிறிஸ்துமஸ் உணர்வைத் தூண்டும் துதிப்பாடல்கள்.” Mediacorp செய்தி, 24 December 2022. https://seithi.mediacorp.sg/watch/kairaisataumasa-unaravaaita-taunatauma-tautaipapaatalakala-636566
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |