சிங்கப்பூரில் கிறிஸ்துவச் சமூகத்தின் தொடர்ச்சியான வரலாறு, 1819-இல் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்சின் வருகையை ஒட்டியே தொடங்குகிறது. சிங்கப்பூர் நகரத்தை உருவாக்குவதற்காக ராஃபிள்ஸ் 1819 அக்டோபரில் ஒரு குழுவை அமைத்தார். அதே மாதத்தில் லண்டன் மிஷனரி சொசைட்டியும் சிங்கப்பூரில் நிறுவப்பட்டு கிறிஸ்துவ மார்க்கம் பரவ வழிகோலியது. வரலாற்றுக் குறிப்புகளின்படி, 1821-இலிருந்தே கத்தோலிக்கத் தமிழர்கள் சிங்கப்பூரில் இருந்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர், புரோட்டஸ்டன்ட் பிரிவில் காணப்படும் ஆங்லிக்கன், மெத்தடிஸ்ட், பென்டகோஸ்ட், லூத்தரன், பிரஸ்பிடேரியன் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளூர்த் தமிழரிடையே வேரூன்றின. தொடக்கக்காலத்தில், பொருளீட்டும் நோக்கில் தற்காலிகக் குடியேறிகளாக வந்த தமிழர், அந்நோக்கம் நிறைவேறியதும் தம் தாயகம் திரும்பிவிடுவதாலும், கிறிஸ்துவம் வெள்ளைக்காரர்களின் மார்க்கம் என்ற கருத்து சிங்கப்பூர்த் தமிழரிடையே நிலவியதாலும் அவர்களைச் சென்றடைவது பெரும் சவாலாக அமைந்ததாகக் கிறிஸ்துவ ஊழியக்காரர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், காலவோட்டத்தில், தமிழ்க் கிறிஸ்துவர்களின் அடையாளம் உருப்பெற்று 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூர்த் தமிழ்க் கிறிஸ்துவச் சமூகம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி கண்டிருந்தது.
ஆங்லிக்கன், கத்தோலிக்கப் போதகர்கள் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரளவில் சிங்கப்பூருக்கு வருகை தந்தனர். இத்தகைய ஊழியக்காரர்களில் பலரும் தமிழர்களுக்குச் சேவையாற்றினர். திருச்சபை ஆராதனைகள் தமிழ்மொழியில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பென்டகோஸ்ட் உள்ளிட்ட இதரப் பிரிவுகளைச் சார்ந்தோர் சிங்கப்பூருக்கு வருகையளித்து தமிழ்க் கிறிஸ்துவர்களுக்கான தேவாலயங்களை நிறுவினர். வில்லியம் எஃப். ஓல்தமும் இந்தியப் போதகர்கள் சிலரும் இணைந்து 1887-இல் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயத்தை நிறுவினர். புனித லூர்து அன்னை ஆலயம் 1888-இல் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து, பாசிர் பாஞ்சாங் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயம் (1927), செம்பவாங் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயம் (1928), சிலேத்தார் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயம் (1935) உள்ளிட்ட தேவாலயங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஓல்தம் தமக்கிருந்த தமிழ் மொழியறிவைக்கொண்டு, 1885 செப்டம்பரில் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகளுக்கான ஊழியத்தைத் தொடங்கினார். பிராஸ் பாசா-பென்கூலன் சாலைகளின் சந்திப்பில் அமைந்திருந்த சிறைச்சாலையில் கைதிகளுக்கான ஆராதனை நடத்தப்பட்டது.
சமய வளர்ச்சிக்கு மட்டுமன்றி, கல்வி வளர்ச்சிக்கும் கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் பெரும் பங்காற்றி வந்திருக்கின்றனர். அவர்களால் துவங்கப்பட்ட முன்னோடிப் பள்ளிகளில் ஒன்று புனித ஃப்ரான்சிஸ் சேவியர் மலபார் பள்ளி. தமிழ்ச் சிறார்களுக்குக் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் இப்பள்ளி 1859-இல் ரோமன் கத்தோலிக்க மிஷன் அமைப்பால் நிறுவப்பட்டது. பின்னர் 1862-இல் கிறிஸ்டோஃபர் முருகப்பா பிள்ளை பள்ளி திறக்கப்பட்டது. பின்னர், 1885-இல் ரங்கூனிலிருந்து ஞானமுத்து என்ற தமிழ் உபதேசியார் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளி ஒன்றினை நிறுவியதும் 45 மாணவர்கள் அப்பள்ளியில் சேர்ந்தனர். பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே பல ஆண்டுகள் அப்பள்ளி, தமிழரின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
ஆஸ்திரேலிய ஊழியக்காரர் சோஃபியா பிளாக்மோர் ஒன்பது தமிழ்ச் சிறுமிகளுடன் 1887-இல் 'தமிழ்ப் பெண்கள் பள்ளி'யைத் தொடங்கினார். ‘சிறுமியர் மற்றும் மகளிர் மத்தியில் பணி’ எனும் திட்டத்தின்கீழ் துவக்கம் கண்ட இப்பள்ளியே பின்னாளில் மற்றொரு ஆங்கிலப் பள்ளியோடு சேர்க்கப்பட்டு, மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியாக மாறியது. யாழ்ப்பாணத்திலிருந்து 1887-இல் சிங்கப்பூருக்கு வந்த சி.டபுள்யூ. அண்டர்வுட் என்ற தமிழ்ப் போதகரும், ஓல்தமும் இப்பள்ளியை உருவாக்கியதில் முக்கிய பங்களித்தனர். கிறிஸ்துவப் போதகர்களால் நிறுவப்பட்ட இப்பள்ளிக்காக ஷார்ட் ஸ்ட்ரீட்டில் இருந்த சிறிய கடைத்தொகுதியை வாடகை ஏதுமின்றி ராமகிருஷ்ண ராவ் என்பவர் கொடுத்து உதவியளித்தார். பள்ளி ஆசிரியருக்கு ஊதியம் வழங்க முருகேசு என்பவர் 60 வெள்ளி ரொக்கம் தந்திருக்கிறார்.
மெத்தடிஸ்ட் மிஷன் அமைப்பு துவங்கிய மிஷன்ஸ் எஸ்டேட் பள்ளி 1913-இல் தொடங்கப்பட்டது. அதுவே அக்காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டிருந்த ஒரே தமிழ்ப் பள்ளி. பின்னர், கம்போங் பாருவைச் சுற்றியுள்ள குடும்பங்கள் பயனடைய, குழந்தை ஏசுவின் சகோதரிகள் 1929-இல் அங்கிருந்த புனித தெரசா தேவாலய வளாகத்திற்குள்ளாகவே தமிழ்ச் சிறுமியர்க்கென்று வகுப்புகளைத் தொடங்கினர். இப்பள்ளி, நாளடைவில், தொடக்கநிலை மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் வழி கல்வி கற்பிக்கும் ஒருங்கிணைந்த பள்ளியாக வளர்ச்சியடைந்தது. தற்போதைய புனித தெரசா கான்வென்டின் முன்னோடி இந்தத் தமிழ்ப்பள்ளிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாகச் சிங்கப்பூரில் நான்கு மிஷன் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில், உள்ளூர்த் தேவாலயப் பிரதிநிதிகளான முனைவர் டேவிட் டி. செல்லையா, அருட்திரு எஸ்.எம். தேவதாசன் உள்ளிட்ட தலைவர்களும் போதகர்களும் இணைந்து சமூகநலத் திட்டங்கள், தேவாலய ஒன்றியச் சொற்பொழிவுகள், வேதாகம வகுப்புகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்தனர். இவை அனைத்தும் ஜப்பானியர்களின் அனுமதியுடன் நடந்தேறின.
சிங்கப்பூர்த் தமிழரின் குறிப்பிடத்தகுந்த வழிபாட்டுத் தலங்களுள் ஆங்லிக்கன் தேவாலயமும் ஒன்று. இந்தத் தேவாலயத்தின் இந்திய, தமிழ் ஊழியங்கள், புனித ஆண்ட்ரு மிஷன் சிற்றாலயம் அமைக்கும் பணியோடு துவங்கியது. அந்த ஆலயமே பிற்காலத்தில் புனிதர் பீட்டர் தேவாலயமாக மறுபெயர் பெற்றது. ஸ்டாம்ஃபோர்ட் ரோட்டில் அமைந்திருந்த சிற்றாலயத்தில் 1856-இல் தமிழ்த் தேவாலயம் அமைக்கப்பட்டது. அப்பணியை முன்னெடுத்துச் சென்றவர் சென்னைப் பட்டணத்தில் இருந்து சிங்கப்பூர் வந்திருந்த தமிழ் மக்களின் போதகர் பீட்டர் டியூஹிக்கஸ் என்பவர். டியூஹிக்கஸின் ஊழியப் பணி, தமிழ்ப் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் நடைபெற்றது. சிங்கப்பூரின் தமிழ் பேசும் மக்களிடையே கிறிஸ்துவ நற்செய்திப் பிரசுரங்களை விநியோகிக்கவும் அவர் நியமிக்கப்பட்டார். அவருடன் அவரின் மனைவியும் மகளும்கூட ஈடுபட்டிருந்தனர். தேவாலயப் பள்ளிகளில் பயின்று, பட்டதாரிகளானவர்கள் முக்கியத் தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்துள்ளனர். அத்தகைய முன்னோடிகளில், செல்லையா, பேராயர் டி.ஆர். துரைசாமி ஆகியோர் சிங்கப்பூரில் சிறந்த கல்வியாளர்களாகத் திகழ்ந்தனர். செல்லையா இருமொழிக் கல்விக் கொள்கை முறையை 1940-ஆம் ஆண்டு தம் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையில் பரிந்துரைத்தவர். துரைசாமி 1960-களின் பிற்பகுதியில் சிங்கப்பூர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராகப் பதவி வகித்தவர்.
இந்திய சிங்கப்பூரர்களுள் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சுமார் 7 விழுக்காட்டினரும் இதர புரோட்டஸ்டன்ட் பிரிவுகளைச் சுமார் 5 விழுக்காட்டினரும் பின்பற்றுகின்றனர். கத்தோலிக்கம், புரோட்டஸ்டன்ட் என்னும் பெருவட்டங்களுக்குள் சேராது, தனி இறையாண்மை அதிகாரத்தோடு இயங்கும் சுயாதீனத் திருச்சபைகளிலும் தமிழ்க் கிறிஸ்துவர்கள் சபை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். தொடக்கக் காலத்தில் சீன, ஆங்கில மொழிகளில் மட்டும் இறைவழிபாடுகளை நடத்திவந்த பல கிறிஸ்துவத் தேவாலயங்களில் இன்று தமிழிலும் இறைவழிபாடுகள் நடத்தப்படுவது சிங்கப்பூர்த் தமிழ்க் கிறிஸ்துவச் சமூகத்தின் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிக்குச் சான்றாகும். சிறுபான்மையினரான இச்சமூகத்தினர் அரசியல், கல்வி, கலை, வர்த்தகம், தொண்டூழியம் எனப் பற்பல துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்புகளை அளித்து வருகின்றனர்
மேல்விவரங்களுக்கு
Doraisamy, T.R., ed. Forever Beginning: One Hundred Years of Methodism in Singapore. Singapore: The Methodist Church in Singapore, 1985. (Call no.: RSING 287.095957 FOR).
Methodist Girls’ School (MGS). (n.d.). Our Heritage. Accessed on August 1, 2025. https://www.mgs.moe.edu.sg/about-us/our-heritage/
Tambiah, Joseph. The History of Anglicanism in Singapore 1819-2019: The Bicentenary of Divine Providence. Singapore: Armour Publishing, 2020.
Thirst. (n.d.). Young and brave: Who were the missionaries who founded our schools?. Accessed on 2August 1, 2025. https://thirst.sg/mission-school-founders/
Wikipedia. (n.d.). Christianity in Singapore. Accessed on August 1, 2025. https://en.wikipedia.org/wiki/Christianity_in_Singapore
Wong, James. Singapore: The Church in the Midst of Social Change. Singapore: Church Growth Study Centre, 1973. (Call no.: RSING 275.957 WON).
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |