ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயில்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சிங்கப்பூரின் மிகப்பழமையான இந்துக் கோயில்களுள் ஒன்று. சிராங்கூன் ரோட்டில், 1855-இல் கட்டப்பட்ட அக்கோயில், தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிள்ளை, கூத்தப்பெருமாள் பிள்ளை, ராமசாமிப் பிள்ளை, அப்பாசாமிப் பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை, ராமசாமி ஜமீன்தார் உள்ளிட்ட தமிழ்ச் சமூகத் தலைவர்கள் குழு, பொதுவாகப் பெருமாளை வழிபடும் வைணவர்களுக்கு ஒரு கோயில் கட்டும் நோக்கத்துடன் சுமார் 87,000 சதுர அடி நிலத்தை 1851-இல் வாங்கியது. பிறகு, 1885-இல் கட்டி முடிக்கப்பட்ட அக்கோயிலின் மூலவர் நரசிம்மப் பெருமாளாக இருந்ததால் அது நரசிங்கப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்பட்டது.

கோயிலின் கட்டமைப்பு 1960-களின் முற்பகுதி வரை மாறாமல் இருந்தது. அச்சமயத்தில், கோயிலை நிர்வகித்து வந்த முகமதிய, இந்து அறக்கட்டளை வாரியம், வள்ளல் பி. கோவிந்தசாமிப் பிள்ளையின் கணிசமான நிதியுதவியுடன், கோயிலை மறுசீரமைத்தது. இரண்டு மாடிக் கட்டடமாகத் திருமண மண்டபம் ஒன்றைக் கோயில் வளாகத்திற்குள்ளேயே கட்டியது. அம்மண்டபத்தை, 19 ஜூன் 1965 அன்று, சிங்கப்பூரின் முதல் அதிபராக இருந்த யூசோஃப் பின் இஷாக் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார்.

மறு ஆண்டே, கோயில் முக்கிய மாற்றத்திற்கு உட்பட்டது. உக்கிரமான சிங்கத் தலையுடன் காட்சியளித்த நரசிங்கப் பெருமாளுக்குப் பதிலாக, கருணை வடிவமான ஸ்ரீநிவாசப் பெருமாள் மூலவராக மாற்றப்பட்டார். அதனால், கோயிலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இன்றைய இந்து அறநிலைய வாரியத்தால் நிர்வகிக்கப்படும் நான்கு இந்துக் கோயில்களுள் ஒன்றான கோவில், தைப்பூசத் திருவிழாவின்போது காவடி ஊர்வலம் தொடங்கும் இடமாகவும் செயல்படுகிறது. பங்குனி பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனி ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் சில முக்கிய திருவிழாக்கள்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் 1978-ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்யப்படும் இந்துப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, 1979, 1992, 2005-ஆம் ஆண்டுகளில் பெரிய அளவில் குடமுழுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக, 2018-இல் நடைபெற்ற குடமுழுக்கு விழா, பல இனங்களையும் சேர்ந்த சுமார் 40,000 பக்தர்களை ஈர்த்தது. கோயில் அதன் சமய நடவடிக்கைகளுக்கும் மேலாக, இலவச ஹோமியோபதி சேவைகளையும் வசதியற்ற இந்துக் குழந்தைகளுக்கான கல்விக்கொடைத் திட்டங்களையும் வழங்குகிறது.



மேல்விவரங்களுக்கு
“Sri Srinivasa Perumal Temple.” Hindu Endowments Board. Accessed 1 August 2025. https://heb.org.sg/sspt/
Sri Srinivasa Perumal Temple. Accessed 1 August 2025. https://sspt.org.sg/
“Sri Srinivasa Perumal Temple.” Roots.sg. Accessed 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/national-monuments/sri-srinivasa-perumal-temple
Renuka, M and Ang, Mervin. “Sri Srinivasa Perumal Temple.” Singapore Infopedia. Accessed 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=ba6a69ad-b513-4889-848f-064f1c542912
Ng Jun Sen. “164-year-old Sri Srinivasa Perumal Temple restored in consecration ceremony witnessed by PM Lee.” The Straits Times, 22 April 2018. https://www.straitstimes.com/singapore/164-year-old-hindu-temple-restored-in-consecration-ceremony-witnessed-by-pm

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA