தமிழர்களின் இறைவழிபாட்டில் காவடிக்குத் தனி இடம் உண்டு. முருகக் கடவுளுக்குரிய தைப்பூச, பங்குனி உத்திரத் திருவிழாக்களில் முன்னிற்பது காவடி. காவடி என்றால் சுமை என்று பொருளுண்டு. காவடி தூக்கிக் காணிக்கை செலுத்துவது பக்தி மரபு.
காவடிகள் பல வகை. மிக எளிமையான, பரவலாகச் சுமக்கப்படும் வடிவம் பாற்காவடி அல்லது பாற்குடக் காவடி. ஒரு மரக்கட்டையின் மேல் மர வளைவை அமைத்து, அதன் இரு முனைகளிலும் பக்தர்கள் சிறிய குடங்களைக் கட்டி அதனுள் காணிக்கையாகச் செலுத்தவிருக்கும் பாலை ஊற்றுவர். காவடிகளைப் பெரும்பாலும் முருகனின் உருவப்படமும் மயிலிறகும் அலங்கரிக்கும். ஒவ்வொரு முக்கியக் கடவுளுக்கும் ஒரு சிறப்பு விலங்கை வாகனமாகக் குறிப்பிடும் புராண மரபின்படி, மயில் முருகனின் வாகனம்.
அலகுக் காவடி மற்றொரு புகழ்பெற்ற வடிவம். அலுமினியச் சட்டத்தில் பெரிய காவடியைப் பொருத்தி, அதனூடாகச் சிறுசிறு வேல்களை இடுப்புக்கு மேலே உள்ள உடற்பாகங்களில் குத்திக்கொண்டு எடுப்பதுதான் அலகுக் காவடி. சிலர் மூன்று அடி நீளம்வரை உள்ள வேலை வாய்க்குக் குறுக்காகப் பொருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு.
மற்றொரு வடிவம் சங்கிலிக் காவடி. வேல்களுக்குப் பதிலாகப் பக்தரின் உடலில் சங்கிலிகள் இணைக்கப்படும். இரண்டு வகையான காவடிகளும் அவற்றின் அளவையும் வடிவத்தையும் பொறுத்து 20 முதல் 40 கிலோ வரை எடை உள்ளவை. அரிகடம் காவடி தனித்துவமானது, அது பக்தரின் இடுப்பில் துளைக்கப்பட்ட நான்கு துருப்பிடிக்காத எஃகுக் கம்பிகளால் தாங்கப்படுகிறது. அதற்கு இடுப்புப் பட்டைபோட்டுக் கொள்வதில்லை.
ரதக் காவடி என்றொரு வகையும் உண்டு. இதில் ஒரு சிறிய அளவிலான தேர் பக்தரின் முதுகில் கொக்கிகள்மூலம் இணைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும்.
சிங்கப்பூரில் பொதுவாகத் தைப்பூசத் திருவிழாவிலும் பங்குனி உத்திரத் திருவிழாவிலும் பக்தர்கள் காவடியெடுக்கின்றனர். இரு விழாக்களின்போதும் முருக பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் இறையருளைப் பெறவும் காவடியெடுக்கின்றனர்.
தொடக்கக்காலத்தில், காவடிகள் சிங்கப்பூரில் இருந்த உள்ளூர்க் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில், இந்தியாவிலிருந்து பாகங்களைப் பெற்று இங்கே காவடிகளை உருவாக்குவது சிக்கனமாக ஆனதால், அவ்வாறே பல காவடிகள் செய்யப்படுகின்றன. வடிவங்கள் சிங்கப்பூரில் முடிவுசெய்யப்பட்டுப் பாகங்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்றன. உள்ளூரில் காவடி இறுதிவடிவம் காண்கிறது.
காவடிகளைத் தயாரித்து அவற்றைக் காணிக்கையாக எடுத்துச்செல்லும் மரபு இந்தியாவில் தோன்றி, புலம்பெயர்ந்த சமூகங்கள்மூலம் உலகெங்கும் பரவியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ்ச் சமூகங்கள் உடலைத் துளைக்கும் பழக்கத்தைத் தொடர்கின்றன. உடல் வதையைப் பொறுத்துக்கொள்வது, இந்துச் சமயத்தில் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்கு உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் பக்தி மார்க்கமாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் அலகுக் காவடிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் 2025-ஆம் ஆண்டுத் தைப்பூசத்தின்போது நேர்த்திக்கடனைச் செலுத்திய மொத்தம் 16,000 பக்தர்களில் சுமார் 300 பேர் அலகுக்காவடி எடுத்தனர். காவடி எடுக்கும் பண்டைய மரபு சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி நீடித்திருக்கும் ஒன்று.
மேல்விவரங்களுக்கு
“Kavadi-Making.” Roots.sg. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/ich-landing/ich/kavadi-making.
Gopal, Nalina. “The Divine Lance: Thaipusam and Murugan Worship in Singapore.” BiblioAsia 18, no. 4 (Jan–Mar 2023). https://biblioasia.nlb.gov.sg/vol-18/issue-4/jan-mar-2023/thaipusam-murugan-singapore.
Krishnasamy, Janarthanan. “Almost 16,000 Devotees Take Up Milk Pots and Kavadis at Thaipusam 2025.” The Straits Times, 11 February 2025. https://www.straitstimes.com/singapore/almost-16000-devotees-take-up-milk-pots-and-kavadis-at-thaipusam-2025.
Vardni, Vishnu. “Thaipusam 2024 drums up cheer and hope for 18,000 devotees.” The Straits Times, 25 January 2024. https://www.straitstimes.com/singapore/thaipusam-2024-drums-up-cheer-and-hope-for-18000-devotees.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |