வே. பக்கிரிசாமி பிள்ளை என அறியப்பட்ட வேலுப்பிள்ளை பக்கிரிசாமி பிள்ளை (1894-1984) இருபதாம் நூற்றாண்டுச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத் தலைவர்களுள் ஒருவராகவும் கொடையாளராகவும் விளங்கியவர். இந்தியச் சமூகத்தின் பொறுப்புகளுக்கு அப்பால், அவர் சீனச் சமூக அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். சிங்கப்பூரின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இன, சமயப் புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் முக்கியமானவை என்பதை வலியுறுத்தியவர்.
பக்கிரிசாமி பிள்ளை சிங்கப்பூரின் கேர்ன்ஹில் பகுதியில் பிறந்தவர். சிங்கப்பூரின் இந்திய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் அவரது தந்தை, கு. வேலுப்பிள்ளை, தம் பிள்ளைகள் தொடக்கக் கல்வியைத் தமிழில் பயிலவேண்டும் என்ற விருப்பம்கொண்டு தமிழாசிரியர் ஒருவரை நியமித்து வீட்டுத் திண்ணைப்பள்ளியை உருவாக்கினார். இதர மாணவர்களும் அதில் சேர்ந்து கல்வி பயின்றனர். அப்போது சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் இல்லை. பக்கிரிசாமி பிள்ளை பத்து வயதில் ஆங்கிலோ சீனப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு கல்வி பயின்றதோடு எழுத்தர் பணிக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகக்கணக்கு ஆகியவற்றையும் கற்றுக்கொண்டார். பிறகு, 1915-இல், அரசுத்துறையில் எழுத்தராகச் சேர்ந்தார். அடுத்த ஆண்டில் பிரபல தனியார் சட்ட நிறுவனமான அலென் & கிளெட்ஹில் நிறுவனத்தில் சேர்ந்து அங்கு 25 ஆண்டு காலம் எழுத்தராகப் பணியாற்றி 1941-இல் விருப்ப ஓய்வுபெற்றார்.
எழுத்தராகப் பணியாற்றியபோதே, 1935-இல் வாட்டர்லூ ஸ்ட்ரீட் ஶ்ரீகிருஷ்ணன் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். காலாங் மன்மத காருணீஸ்வரர் ஆலய அறங்காவலர்களுள் ஒருவராக 1937-இல் நியமிக்கப்பட்டார். ஆலயத்தின் மறுகட்டுமானத்திற்குக் கணிசமாகக் கொடையளித்தார். அவ்விரு கோவில்கள் மட்டுமின்றி ஶ்ரீமாரியம்மன் கோயில், ஶ்ரீ ஶ்ரீ நிவாசப் பெருமாள் கோவில், ஶ்ரீ விரமாகாளியம்மன் கோவில் ஆகிய ஆலயங்களின் நிர்வாகத்திலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார். பக்கிரிசாமி பிள்ளை 1930-களிலிருந்து 1950-கள் வரையிலான காலக்கட்டத்தில் சிங்கப்பூர் நகராட்சி ஆணையத்தின் உறுப்பினராகவும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவராகவும் இராமகிருஷ்ணா மிஷன் அமைப்பின் துணைத் தலைவராகவும் சேவையாற்றினார். மிஷனின் நோரிஸ் ரோடு தலைமையகத்தில் தம் தந்தை பெயரில் மண்டபம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார். சிங்கப்பூரில் 1948-இல் அவசரநிலை நடப்பில் இருந்தபோது, பக்கிரிசாமி அவசரநிலை ஆலோசனைக் குழுவின் ஒரே இந்திய உறுப்பினராக இருந்தார். சமயக் கூட்டுறவு அமைப்பின் தலைவராக 1951-ஆம் ஆண்டிலும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக 1954-ஆம் ஆண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்து திருமணப் பதிவிற்கும் 1955-இல் பதிவு சட்டமாக ஆக்கப்படுவதற்கும் முக்கியப் பங்காற்றினார். இந்து பஞ்சாயத்து சபையின் முதல் செயலாளராகப் பணியாற்றியபோது, அவர் வீடுகள் பற்றாக்குறை, கள்ளச் சந்தை ஆகியவற்றை எதிர்த்து வாதாடினார்.
பக்கிரிசாமி பிள்ளை தம் சேவைகளுக்காக 1947-இல் சமாதான நீதிபதியாக அங்கீகரிக்கப்பட்டார். சிங்கப்பூருக்கும் இந்தியச் சமூகத்திற்கும் விசுவாசமான, மதிப்புமிக்க சேவையாற்றியதற்காக இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜிடமிருந்து உன்னத விருது 1950-இல் வழங்கப்பட்டது. நீண்ட காலச் சமுதாய, சமூக சேவைக்கான பொதுச் சேவை நட்சத்திர விருதை 1970-இல் பெற்றார்.
மேல்விவரங்களுக்கு
“Vayloo Pakirisamy Pillay.” Wikipedia. Accessed 1 August 2025. https://en.wikipedia.org/wiki/Vayloo_Pakirisamy_Pillay.
“MR. V. Pakirisamy to Contest Seletar District.“ Indian Daily Mail, 6 March 1951. (From Newspaper SG)
“Golden Wedding Joy for Leader of Tamil Community.” Singapore Free Press, June 8, 1961. (From Newspaper SG)
அ.வீரமணி, மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம், தொகுப்பாசிரியர்கள். சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர். சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் வெளியீடு, 2019.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |