[இப்பதிவில் பல செய்திகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. சில தகவல்கள் சரியாகத் தெரியவில்லை. அவை குறித்து அறிந்தவர்கள் est_mysay@singaporetamil.org என்னும் முகவரிக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.]
சிங்கப்பூரில் முதலில் தோன்றிய தமிழ்ப் பள்ளிகள் அன்றைய அரசின் முயற்சியால் தோன்றவில்லை. மாறாக, 1980-களிலிருந்து கிறிஸ்துவத் திருச்சபைகளும் தமிழார்வலர்களும் தொழிற்சங்கங்களுமே அவற்றுக்கு அடித்தளமிட்டன. (பார்க்க: தமிழ்க் கல்வி) மேலும், அன்றைய ஆசிய மக்களுள் பெரும்பாலோர் (மலாய், சீனர், இந்தியர்) பெண்களுக்குக் கல்வி அவசியமற்றது என்னும் மனப்போக்குடையவர்களாய் இருந்தனர். அத்தகு தடையைக் மேற்கத்திய கிறிஸ்துவ அமைப்புகள் தொடங்கிவைத்த இருபாலருக்குமான தனித்தனிப் பள்ளிகள் அகற்றின. குறிப்பாக, ஆங்கில மொழிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு தாய்மொழியையும் (தமிழ்/சீனம்) இணைத்துக் கற்பித்த ஆங்கிலோ-தமிழ்/சீனப் பள்ளிகளே தொடக்கத்தில் இந்நாட்டில் துளிர்த்தன. அத்தோடு, இந்த அணுகுமுறை அரசாங்கத்திடமிருந்து மானியம்பெற உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைய அரசு ஆங்கில, மலாய்ப் பள்ளிகளுக்கே உதவித்தொகை வழங்கிவந்தது.
கிறிஸ்துவ அமைப்புகளைத் தொடர்ந்து காலனித்துவ ஆட்சியின்போது இந்து, இஸ்லாமிய அமைப்புகளும் தமிழ்ப் பள்ளிகளைத் தொழிலாளர்தம் பிள்ளைகளுக்காகச் சிறு அளவில் ஆங்காங்கே அவர்களது குடியிருப்புப் பகுதிகளில் ஆரம்பித்தன. அவர்களுடன் பாட்டாளி மக்களைப் பிரதிநிதித்தத் தொழிற்சங்கங்களும் தமிழார்வலர்களும் ஒன்றிணைந்து தனித்தனிக் குழுக்களை அமைத்துக்கொண்டு, அவரவர் குடியிருப்புப் பகுதிகளில் சிறிய அளவிலான பள்ளிகளையும் தொடங்கி நடத்திவந்தன. பெரும்பாலான பள்ளிகள் ஒற்றை ஆசிரியரைக்கொண்ட ஓரறைப் பள்ளிகளாகவே இருந்தன. சில திண்ணைப் பள்ளிகளும் இருந்துள்ளன. அப்பள்ளிகளைத் தொடங்கியவர்களுள் பெரும்பான்மையோர் கல்வி கற்றவர்களல்லர்; கற்றிருந்தாலும் தொடக்கக் கல்விக்குமேல் பயிலாதவர்கள்; நிர்வாகத்திறனும் அற்றவர்கள். மேஸ்திரி, மண்டோர், ஓவர்சீயர், கிராணி என்று தங்கள் தொழிலில் தலைமைப்பதவியை வகித்தவர்களே அன்று பள்ளி நிர்வாகிகள். எனினும், அவர்கள் தமிழார்வம் மிக்கவர்களாக இருந்தனர்.
அன்று பள்ளிக்கூடங்கள், பள்ளிகள் ஆகிய சொற்களைவிடப் பாடசாலை என்னும் சொல்லே பெருவழக்காக இருந்துள்ளது. பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட தமிழிலும் அன்றைய சூழலையொட்டி வடமொழிப் புழக்கம் பரவலாக இருந்துள்ளது. இந்நாட்டில் இயங்கிய தமிழ்ப் பள்ளிகள் பெரும்பாலும் இந்தியத் தேசியவாதிகள், தமிழ்க் கவிஞர்கள், புலவர்கள், இந்தியப் பொதுவுடைமைவாதிகள் முதலியோரின் பெயர்களைக்கொண்டிருந்தன. தாய்நாட்டுடனான தங்கள் தொப்புள்கொடி உறவைத் தக்க வைத்துக்கொள்ளவே பள்ளி நிறுவனர்கள் விரும்பினர்.
தொடக்கக்காலத்தில் கிறிஸ்துவத் திருச்சபைகளால் நிர்வகிக்கப்பட்டப் பள்ளிகளுக்கு மட்டிலும் அரசாங்க மானியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், 1938-இல், பதிவுசெய்யப்பட்டத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னர், இந்நாட்டில் 18 தமிழ்ப் பள்ளிகள் மொத்தமாகச் சுமார் 1000 மாணவர்களைக்கொண்டு இயங்கிவந்துள்ளதாகத் தெரிகிறது. அவற்றுள் ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்துவ அமைப்பால் ஆரம்பிக்கப்பட்ட இரு பள்ளிகளே அரசாங்க நிதி உதவிபெற்ற பள்ளிகளாக இருந்துள்ளன. ஆனால், எந்தத் தமிழ்ப் பள்ளியும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டதன்று.
ஒருசில தமிழ்ப் பள்ளிகளைத் தவிர, பெரும்பான்மையானவை சுகாதாரமற்ற, துர்நாற்றமிக்க, ஈக்கள் மொய்த்த, அறுப்புக் கொட்டகைகளுக்கு அருகிலும் மருத்துவமனை வளாகங்களிலும் பண்டகசாலைகளிலும் செயற்பட்டு வந்தன. மேலும், ஆசிரியர்களின் குறைந்த கல்வித் தகுதி, பயிற்சியின்மை; பொருத்தமான பயிற்றுக்கருவிகளும் பாடத்திட்டமும் இல்லாமை; குறைவான மாணவர்கள் எண்ணிக்கை; ஆசிரியர்களுக்கு ஊதியம் தர முடியாமை; பள்ளிகளை மேற்பார்வையிடப் பயிற்சிபெற்ற மேற்பார்வையாளர் நியமிக்கப்படாமை; பள்ளிகளுக்கிடையே தொடர்பின்மை; கல்விக்குப் பெற்றோர் முக்கியத்துவம் தராமை; பிரிட்டிஷாரது பாராமுகம் எனப் பல பிரச்சினைகளை அவை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தன. ஆயினும், அத்துணை இடர்ப்பாடுகளையும் கடந்து தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வந்துள்ளன.
போருக்குப் பின்னர்ப் பிரிட்டிஷார் மலாயா, சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தனர். அத்தறுவாயில்தான் தொழிற்சங்கங்கள் பல தமிழ்ப் பள்ளிகளைத் தமது சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காகத் தொழிலாளரது குடியிருப்புப் பகுதிகளில் தொடங்கின. அதுவும் ஜப்பானியர் மூன்றரையாண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தபோது, அவர்களது மொழியான நிப்பான்-கோவைப் பரப்ப எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பின்விளைவு எனலாம்.
பிரிட்டிஷார் கம்யூனிச இயக்கத்திற்கெதிராக 1948-இல் அவசரக்காலப் பிரகடனத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தபோது, தொழிற்சங்கவாதிகளுள் பலர் நாடு கடத்தப்பட்டனர்; தலைமறைவாகினர்; சுட்டுக்கொல்லப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர். அவர்களுள் பலர் இந்தியப் பொதுவுடைமைவாதிகளின் பெயர்களைத் தாங்கியிருந்த பள்ளிகளை அதுவரை ஆதரித்து வந்தனர். அவர்களின் ஆதரவு நின்றதும் பள்ளிகள் நிர்க்கதியாயின. மேலும், அவசர அவசரமாகப் பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்பட்டன. இக்கட்டான அக்காலக்கட்டத்தில்தான், 1948-ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ்க் கல்விக் கழகம், கோ. சாரங்கபாணியின் தலைமையின்கீழ் அமைக்கப்பட்டு, தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவிக்கரத்தை நீட்டியது. கழகம், தகுதிவாய்ந்த ஆசிரியர்களைப் பணிகளில் அமர்த்துவதும் பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர்களை நியமிப்பதும் பள்ளிகளை மேற்பார்வையிடுவதும் கணக்குவழக்குகளைப் பார்ப்பதும் மருத்துவ விடுப்பிலிருக்கும் ஆசிரியர்களுக்கு மாற்று ஆசிரியரை நியமிப்பதுமான பணிகளை ஆற்றியது. கழகம் 1960-கள் வரை செயற்பட்டுத் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பல திட்டங்களைக் கொண்டுவந்தது.
தொடக்கக்காலத் தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு. முதலாவது, நிதித் தட்டுப்பாடு. நாள் சம்பள ஊழியரிடம் பணபலம் இருந்ததில்லை. பள்ளியில் கற்பித்த ஒரே ஆசிரியர்க்குக்கூட மாதந்தோறும் ஊதியம் வழங்க முடியாத நிலையில், வீடுவீடாகச் சென்று வசூல்செய்து சம்பளத்தை வழங்கியுள்ளனர். கற்பித்த ஆசிரியர்களிடம் கடன்பட்டிருந்தனர். பள்ளியைச் சீரமைக்கவும் அவற்றுக்கான மேசை, நாற்காலிகள் வாங்கும் பொருட்டும் பூவிற்றல், உண்டியல் ஏந்தல் போன்ற நடவடிக்கைகள்வழி நிதி சேர்த்தது மட்டுமல்லாமல் அப்போது இங்கு இயங்கிய தமிழ் நாடகக்குழுக்களின் உதவியை நாடி, நாடகங்களை அரங்கேற்றியும் நிதி திரட்டியுள்ளனர். சீனச் செல்வந்தர் சிலர் மனமுவந்து தமிழ்ப் பள்ளிகளுக்குப் பண உதவி செய்துள்ளனர். சாரங்கபாணியின் தமிழ் முரசு நாளேடும் தவறாது அறிக்கைகளை வெளியிட்டு நிதி சேர்க்கக் கைகொடுத்துள்ளது. இரண்டாவது, தமிழ் மாணவர் எண்ணிக்கை எந்தப் பள்ளியிலும் போதுமானதாக இல்லாததால், அவர்களுக்கென்று தனிப் பள்ளிகளைத் தொடங்குவது எளிதான முயற்சியாக இருக்கவில்லை.
ஆரம்பக்காலத்தில் பிழைப்புத் தேடி வந்தவர்கள் தனியாகவே இங்கு வந்தனர். அவர்கள் படிப்படியாகத் தங்கள் ஆண்மக்களையும் பின்னர்க் குடும்பங்களையும் இங்கு அழைத்துவந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். சிறுவர்கள் வீடுகளிலோ தெருக்களிலோ சுற்றித் திரிவதை விரும்பாத பெற்றோர், அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் பள்ளிக்கூடமே என்பதை உணர்ந்து, அவர்களைப் படிக்கவைப்பதற்குப் பள்ளிகளைத் தொடங்கினர். போட்டாபோட்டி மனப்பான்மையில் அன்று அத்தொழிலாளர்கள் தமிழ்ப் பள்ளிகளை அருகருகே தோற்றுவித்துள்ளனர் என்று கருத இடமுண்டு.
இனி, அன்று இயங்கிய சில தமிழ்ப் பள்ளிகளின் சுருக்கமான வரலாறு:
லூர்து மாதா (Our Lady of Lourdes) தமிழ்ப் பள்ளி
லூர்து மாதா தமிழ்ப் பள்ளி சிங்கப்பூரில் தோன்றிய மிகப்பழமையான தமிழ்ப் பள்ளிகளுள் ஒன்று. அப்பள்ளி, 50, ஒஃபிர் ரோட்டில் இன்றும் அங்கு இயங்கிவருகின்ற லூர்து மாதா தேவாலயத்தின் வளாகத்தில் செயற்பட்டு வந்தது. அதில் ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனிப் பிரிவுகள் செயற்பட்டன. தேவாலயம் கிறிஸ்துவத் தமிழ்க் கத்தோலிக்கர்களுக்காகக் கட்டப்பட்டது. பாண்டிச்சேரியிலிருந்து இங்கு வந்த தமிழ்க் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் இதற்கு நிதி உதவி அளித்துள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் ரோச்சோர் கெனலுக்கு அருகிலிருந்த சதுப்புநிலத்தை ஆலயம் கட்டக் கொடுத்து உதவியது. இதன் கட்டுமானப் பணி 1886-க்கும் 1888-க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது.
லூர்து மாதா தமிழ்ப் பள்ளியின் அதிகாரபூர்வத் தொடக்கவிழா 1888-ஆம் ஆண்டே நடைபெற்றுள்ளது; தேவாலயத்துக் கன்னித்துறவியரும் போதகர்களும் தங்கள் கல்வியை மேம்படுத்திக்கொள்ளத் தமிழ் படித்துப் பின்னர், தமிழாசிரியர் கிடைக்காதபோது அவர்களே பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்துள்ளனர். பிற்காலத்தில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலப் பள்ளிகளில் கற்பதை விரும்பத் தொடங்கியதும், மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைய, தமிழ்ப் பள்ளி மூடப்பட்டது. எனினும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், ஆங்கிலப் பள்ளியாகச் செயற்பட்டு வந்துள்ளது.
அப்பள்ளியில் படித்த ஒரு சிலர் பின்னர்த் தமிழ்சார்ந்த துறைகளில் பணியாற்றி வந்துள்ளனர். தமிழ் வானொலி அறிவிப்பாளரும் தயாரிப்பாளாருமான கமலா துரை, பல்லாண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஜோசஃபின் ஜோஃசப், வானொலிக் கலைஞர் ராஜமணி ஃபிரான்சிஸ் ஆகியோர் அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள்.
செயிண்ட் திரேசா கான்வெண்ட் (St. Theresa Convent)
கத்தோலிக்கக் கிறிஸ்துவத் திருச்சபை, தமிழ்ப் பாட்டாளிகளின் பிள்ளைகளுக்காகத் தொடங்கிய தமிழ்ப் பள்ளிகளுள் மற்றொன்று செயிண்ட் திரேசா தமிழ்ப் பள்ளி. பெண்களுக்கான அப்பள்ளி 1892-இல் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் அது ஒரு வாடகை வீட்டில் செயிண்ட் திரேசா தேவாலயத்திற்குப் பின்புறம் செயற்பட்டு வந்தது. கம்போங் பாரு ரோட்டில் தொடங்கிய அப்பள்ளி, இன்றும் அதே இடத்தில் ஆங்கிலப் பள்ளியாக இயங்கிவருகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆங்கிலப் பிரிவும் தமிழ்ப் பிரிவும் தனித்தனி இடங்களில் நடைபெற்றுவந்துள்ளன. இன்றைய லோவர் டெல்டா ரோட்டில் இயங்கிவரும் அப்பள்ளி வளாகம், 1951-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. கன்னித்துறவியரும் கத்தோலிக்கச் சமயத்தைத் தழுவியவருமே பெரும்பான்மையான ஆசிரியர்களாகப் பணியாற்றினர். லூர்து மாதா தமிழ்ப் பள்ளியில் கற்ற ஜோசஃபின் ஜோசஃப் அப்பள்ளியாசிரியருள் ஒருவர்.
செயிண்ட் திரேசா பள்ளி முதலில் ஆங்கில வகுப்புகளும் தமிழ் வகுப்புகளும் ஒரே கூரையின்கீழ் இயங்கிய ஒருங்கிணந்த பள்ளியாக இருந்துள்ளது. ஆங்கிலப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்த் தமிழ் வகுப்புகளும் ஆங்கில வகுப்புகளும் ஒரே கூரையின்கீழ்ச் செயற்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப்போர் தொடங்கும்வரை அது ஒரு சிறிய பள்ளியாக இருந்தது. பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாள் 33 மாணவர்களே சேர்ந்தனர். ஆரம்பக்காலத்தில் பள்ளியில் வசதிகள் குறைவு. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 1948-இல் பள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டுக் கட்டுமானப் பணி 1951-இல் முடிவடைந்தது. ஒரு குன்றின்மீது எழுப்பப்பட்ட அப்பள்ளிக்குப் பக்கத்தில் முக்கியமான சாலைகள் கிடையாது. பள்ளியை அடைவதற்குக் குன்றின் ஊடே ஒரு பாதையை வெட்டிப் படிகள் அமைக்கவேண்டியிருந்தது. தனியார்ப் பள்ளியாக இருந்த அப்பள்ளி, 1952-இல் அரசாங்க உதவிபெறும் பள்ளியாக மாற்றம் கண்டது. எனினும், தமிழ் மாணவிகள் பற்றாக்குறையால் தமிழ்ப் பிரிவு 1953-இல் மூடப்பட்டது. அப்பள்ளியில் ஞானாம்பாள், சுவாமிநாதன், ஜோசஃபின் ஜோசஃப் ஆகியோர் தமிழ் கற்பித்துள்ளனர். ஸ்ரீதேவி குமார் (ஓய்வுபெற்ற தமிழாசிரியர்), கிருஷ்ணவேணி நாராயணன் (வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர்) முதலியோர் அப்பள்ளியில் படித்துள்ளனர்.
இராமகிருஷ்ணா மிஷன் நடத்திவந்த பள்ளிகள்
சிங்கப்பூரில் இராமகிருஷ்ணா மிஷன், 7 ஆகஸ்டு 1928 அன்று இயங்கத் தொடங்கியது. மலாயா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் நிராதரவாக விடப்பட்ட ஆண்பிள்ளைகளைப் பராமரிக்கத் தங்குவிடுதிகளையும் தமிழ்ப் பிள்ளைகளுக்கெனத் தமிழ்ப் பள்ளிகளையும் இராமகிருஷ்ண மடாலயம் தோற்றுவித்தது. கிறிஸ்துவத் திருச்சபைகள் இந்நாடுகளில் செய்த அளவுக்குப் பள்ளிகளையும் விடுதிகளையும் இன்னபிற சேவைகளையும் மடம் அளிக்காவிடினும் அதன் சமூகப் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது.
எண் 38, நோரிஸ் ரோடு என்ற முகவரியில் ஓர் இரண்டு மாடிக்கட்டடத்தில் இராமகிருஷ்ணா மிஷனின் பள்ளிகள் இயங்கின. அக்கட்டடம் இன்றும் அதே இடத்திலுள்ளது. அதனுள் ஆறு வகுப்பறைகள் இருந்தன. காலையில் ஆண்கள் பள்ளியும் பிற்பகலில் பெண்கள் பள்ளியும் செயற்பட்டு வந்தன. பள்ளிக்குப் பக்கத்திலிருந்த ஒரு சிறிய திடலில் உடற்பயிற்சிப் பாடம் கற்பிக்கப்பட்டது. இன்று அதே இடத்தில் கம்போங் கபூர் அக்கம்பக்கக் காவல்நிலையம் உள்ளது. பெற்றோர் தினம், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாராதாமணி ஆகியோரின் பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டுள்ளன. பாடத்திட்டத்திற்கு அப்பால் பொதுமக்களையும் ஈர்க்கும் வகையில் சமயச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையிலிருந்த ரங்கூன் ரோடு ஆங்கிலப் பள்ளித் திடலில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள் ஆண்டுதோறும் சமூக உண்டியலுக்கு ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கு நிதி சேர்த்தனர்.
விவேகானந்தா ஆண்கள் தமிழ்ப் பாடசாலை 1929-இல் தொடங்கப்பட்டது. த. பாவாடைசாமி, கோ. பெருமாள், துரைராஜ், வி.கு. சாமிநாதன், வீ.கே. சாமிநாதன், பொ. அண்ணாதுரை, தங்கவேலு எனப் பல ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். அப்பள்ளியில் கற்ற மாணவர் மா. இராஜிக்கண்ணு தொடர்ந்து பயின்று முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மாணவர் பற்றாக்குறையால் இப்பள்ளி 1975-இல் மூடப்பட்டது.
சாரதாமணி பெண்கள் தமிழ்ப் பாடசாலையை, 38 நோரிஸ் ரோடு என்ற முகவரியில், சிங்கப்பூர், லாபுவான் நாடுகளுக்கான பள்ளி ஆய்வாளராக இருந்த எச்.ஆர். சீஸ்மன், சுவாமி விவேகானந்தரின் 75-ஆவது பிறந்த நாளான 2 பிப்ரவரி 1937 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். அப்பள்ளி 1932-இல் 32 மாணவர்களுடன் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீதேவி, கிருஷ்ணவேணி, சரஸ்வதி, ஜோசஃபின் ஜோசஃப், புஷ்பா பெருமாள், ஞானாம்பாள் அடைக்கலசாமி, பாப்பா ரத்தினம் எனப் பல ஆசிரியர்கள் அப்பள்ளியில் கற்பித்தனர். அப்பள்ளியும் மாணவர் பற்றாக்குறையால் 1980-இல் மூடப்பட்டது. அவ்விரு பள்ளிகளிலும் குமாரி சத்தீஸ்வரி சின்னதம்பி முழுநேர ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் அவ்விரு பள்ளிகளிலும் கற்ற மாணவர்கள் பலர் தமிழாசிரியர் பணியை மேற்கொண்டு தமிழ்க் கல்வி சிங்கப்பூரில் நிலைபெற அடித்தளமிட்டுள்ளனர்.
கலைமகள் தமிழ்ப் பள்ளி 1967-ஆம் ஆண்டு மடத்தின் மேற்பார்வையின்கீழ் வந்தது. தில்லைநாதன் என்ற இயற்பெயருடைய சுவாமி ஸ்த்தித்தானந்தா அப்பள்ளிகளின் மேற்பார்வையாளராக இருந்து தமிழ்க் கல்விக்குப் பணியாற்றியுள்ளார்.
செம்பவாங் மெதடிஸ்ட் (Sembawang Methodist) தமிழ்ப் பாடசாலை
செம்பவாங் வட்டாரத்தில் பிரிட்டிஷாரது கப்பற்படைத்தளம் 1930-களின் தொடக்கத்தில் செயற்படத் துவங்கியது. அதில் பிற இனத்தாரோடும் பிற இந்தியச் சமூகத்தாரோடும் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். செம்பவாங் மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளி 1947-ஆம் ஆண்டு செப்டம்பரில், ஜாலான் செம்பவாங் கிச்சில் என்னும் கிளைச் சாலையில் தமிழ் மெதடிஸ்ட் திருச்சபையால் தொடங்கப்பட்டது. அப்பள்ளி தொடங்க வித்துவான் வி. செல்வம், ஜெபமணி ஆகியோர் பெரும்பங்காற்றினர். இப்பள்ளியின் முதல் மேற்பார்வையாளர் அருள்திரு எஸ்.எம். தேவதாசன். செல்வம் 1974-இல் பணி ஓய்வு பெறும்வரை அதன் தலைமையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூரில் அச்சபையால் தோற்றுவிக்கப்பட்ட ஒரே முழுநேரத் தமிழ்ப் பள்ளி இதுவே. சபை, பள்ளி இயங்க நிதி உதவியையும் அளித்து வந்துள்ளது. பிற்காலத்தில், அது அரசு உதவிபெறும் பள்ளியாக மாறியது. வாரநாள்களில் அது பள்ளிக்கூடமாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலமாகவும் செயற்பட்டு வந்துள்ளது. செம்பவாங் வட்டாரத்தில் வாழ்ந்த தமிழ் மெதடிஸ்ட்டுக் கிறிஸ்துவர்களின் தேவாலயமும் இதுவே.
பள்ளிக் கட்டடம் மரத்தாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டுக் கூரை தகரத்தால் வேயப்பட்டிருந்தது. அதன் ஒரு பெரிய கூடம், நகரும் மரத்தடுப்புகள்கொண்டு வகுப்புகளாக மாற்றப்பட்டிருந்தன. அக்கட்டடம் பழுதுபட்டதால் புதிய கட்டடத்திற்கு நிதி சேர்க்கப் பைபிள் கதையான ‘கனவு காணும் ஜோஃசப்’ என்னும் நாடகத்தை செல்வம் எழுதி இருமுறை மேடையேற்றினார். மேலும், நன்கொடை திரட்ட 1961-இல் திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. அதன்மூலம் 1,500 வெள்ளி திரட்டப்பட்டது.
பள்ளி புதிய கட்டடத்தில் 1956-இல் செயற்படத் தொடங்கியது. பள்ளியில் தடுப்புகள் மறைக்கப்பட்ட மூன்று அறைகளே இருந்தாலும் தொடக்கநிலைக்குரிய வகுப்புகள் ஒன்று முதல் ஆறு வரை இருந்தன. வசதி குறைவாக இருந்த காரணத்தால் இரண்டு வகுப்புகளை இணைத்து ஒன்றாகக் கற்பித்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களுடன் ஆறு வகுப்புகளிலும் 66 பிள்ளைகள் படித்தனர். தனியே சிற்றுண்டி உணவகம் இல்லாமையால் பள்ளிக்குப் பக்கத்தில் வாழ்ந்த பெண்மணி ஒருவர் பலகாரங்களைத் தம் வீட்டிலேயே செய்துவந்து இடைவேளை நேரத்தில் மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். பள்ளித் தலைமையாசிரியர் செல்வத்துடன் பின்னாளில் காந்தலட்சுமி, கிரேஸ் மேரி ஜான், துரைசாமி தாயம்மாள் ஆகியோர் கற்பித்துள்ளனர். பள்ளி மூடப்படும் காலத்தில் தாயம்மாள் இராமசாமி தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார்.
உமறுப்புலவர் தொடக்கப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும்
தொடக்கப்பள்ளி
ஒருகாலத்தில் தஞ்சோங் பகார் வட்டாரத்தில் அதிகமான தமிழ் முஸ்லிம்கள் குடும்பங்களுடன் வசித்துவந்தனர். கடையநல்லூர் முஸ்லீம் லீக் 1946-இல் 72, தஞ்சோங் பகார் ரோடு என்னும் முகவரியில் கடைவீடு ஒன்றின் மேல்மாடியில் ஒரு சிறிய அறையை அதன் பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டது. அதன் செயலாளராக இருந்த அ.நா. மைதீன் அவ்விடத்தில் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தார். தொடக்கத்திலேயே அம்முயற்சிக்கு ஆதரவு கிட்டி, 54 மாணவர்கள் படிப்பதற்கு முன்வந்தார்கள். இடப்பற்றாக்குறை ஏற்பட, அங்கிருந்த இதர அறைகளில் குடியிருந்தவர்களை வேறோர் அறைக்கு இடம்பெயரவைத்து மேல்தளம் முழுவதும் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தப்பட்டது. மாணவர்கள் தரையில் அமர்ந்தே படித்துவந்தனர்.
தமிழ் வகுப்பு முதன்முதலாக 6 மே 1946 அன்று தொடங்கப்பட்டது. சுப்ரமணியம் என்பவர் மாதம் 50 வெள்ளிச் சம்பளத்தில் தமிழ் கற்பித்தார். ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பெர்னாண்டஸ் என்பவரைக் கொண்டு இரவு வேளையில் ஆங்கில வகுப்பினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே அப்பள்ளியை மேற்பார்வையிட்ட கல்வி இலாகா பள்ளி செயற்பட அது பொருத்தமான இடமில்லை என்று கருதி அருகிலிருந்த மெக்ஸ்வெல் ரோட்டில் ஒரு மேட்டுப்பகுதியில் பள்ளிக்கு மாற்றிடம் வழங்கியது.
புதிய பள்ளியை 17 மார்ச் 1950 அன்று அன்றைய கல்வி இயக்குநரான டபிள்யு. ஃபிரிஸ்பி திறந்துவைத்தார். இரண்டே வகுப்பறையில் தொடக்கநிலைக்குரிய வகுப்புகள் ஒன்று முதல் ஆறு வரை கற்பிக்கப்பட்டன. சுப்ரமணியம், ஜெபமாலை ஆகிய இருவரும் தமிழ் கற்பித்தனர். அந்தத் தமிழ்ப் பள்ளிக்குத் தொடக்கத்தில் எந்தப் பெயரும் இடப்படாமல் ‘சிறுவர் தமிழ்ப் பாடசாலை’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. பல மாதங்களுக்குப் பிறகு ச. சா. சின்னப்பனார் என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளிக்கூடம்’ எனப் பெயரிடப்பட்டது.
உயர்நிலைப்பள்ளி
இடநெருக்கடி மட்டுமல்லாது ஆறாம் வகுப்பை முடிக்கும் மாணவர்கள் மேற்கொண்டு தமிழில் பயில வாய்ப்பில்லாதிருந்தது. அப்பள்ளியின் நிர்வாகக் குழுவினர் உயர்கல்வி கற்றவரல்லர். என்றாலும், தொலைநோக்குடன் அப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற விரும்பினார்கள். அதற்குப் பெருந்தொகை தேவைப்படவே, சளைக்காமல் பல்வேறு நடவடிக்கைகள்மூலம் நிதி திரட்டினர். டத்தோ லீ கொங் சியான் 10,500 வெள்ளி வழங்கினார். சிங்கப்பூர் மக்கள் கூட்டணிக் கட்சி அரசாங்கமும் வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையில் நிதி ஆதரவு வழங்க முன்வந்தது. அப்பள்ளியின் அடிக்கல் நாட்டுவிழா 1959-ஆம் ஆண்டு அப்போதைய முதல் அமைச்சர் லிம் யூ ஹாக் தலைமையில் நடத்தப்பட்டது. அதே ஆண்டு மக்கள் செயல் கட்சி ஆட்சிக்கு வந்தபின், கல்வி அமைச்சர் யோங் நியுக் லின் மூன்று மாடிகள்கொண்ட புதிய கட்டடத்தை 30 மார்ச் 1960 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளி 1982-ஆம் ஆண்டுவரை இயங்கிவந்தது. தென்கிழக்காசியாவில் தோன்றிய ஒரே தமிழ் உயர்நிலைப்பள்ளி என்னும் சிறப்பும் அதற்கு உண்டு. இப்பள்ளியில் கற்ற மாணவர்களுள் பலர் தமிழாசிரியர் பணியை மேற்கொண்டனர்.
அரவிந்தர் தமிழ்ப் பள்ளி
அரவிந்தர் தமிழ்ப் பள்ளி 1946-இல் தொடங்கியது. இன்றைய சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை வளாகத்தில், மெக்காலிஸ்டர் ரோட்டில் பொது மருத்துவமனை ஊழியர்கள் வசித்த குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே அமைந்திருந்தது. நா. சோமசுந்தரம் தி.சு. மோகனம் ஆகியோர் ஆசிரியராகப் பணிபுரிந்தனர். ஒரு பண்டகசாலையே முதலில் பள்ளியாகச் செயற்பட்டுள்ளது. அப்பள்ளிக்குக் ‘கொட்டாயி’ (கொட்டகை) கோவிந்தசாமி நன்கொடை வழங்கியுள்ளார். பின்னர் 1959-இல் சிலாட் ரோடு ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டடத்தில் அரவிந்தர் தமிழ்ப் பள்ளி இயங்கியது. அப்போது அதன் தமிழ்ப் பிரிவுக்குச் சீ. வரதப்பன் தலைமையாசிரியராக இருந்தார். அது அரசாங்கப்பள்ளி என்னும் தகுதிபெற்ற பள்ளிகளுள் ஒன்று.
கலைமகள் தமிழ்ப் பாடசாலை
மருத்துவமனை வளாகங்களில் இயங்கிய மற்றொரு பள்ளி, இயோ ச்சூ காங் ரோட்டில் அமைந்திருந்த உட்பிரிட்ஜ் மனநோய் மருத்துவமனையில் வேலைசெய்த ஊழியர்களின் பிள்ளைகளுக்காகத் தோன்றிய கலைமகள் தமிழ்ப் பள்ளி. அப்பள்ளி 15 செப்டம்பர் 1946 அன்று அத்தாப்புக் கூரை வேய்ந்த, பலகைகளாலான குடிசையில் 40 மாணவ மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. இது மருத்துவமனையின் பிணக்கொட்டகைக்கு அருகே செயற்பட்டது. பள்ளி அங்குச் செயற்பட அனுமதி வழங்கியவர் அப்போது மருத்துவமனையில் வேலை செய்துவந்த டாக்டர் ஹோம் என்பவர். தொடக்கத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். ஓர் ஆசிரியர் காலையில் தமிழ் வகுப்புகளையும் மற்றோர் ஆசிரியர் பிற்பகலில் ஆங்கில வகுப்புகளையும் நடத்தினர். அதனால், ஒரே கூரையின்கீழ் வெவ்வேறு நேரங்களில் கலைமகள் தமிழ்ப் பள்ளியும் கலைமகள் ஆங்கிலப் பள்ளியும் இயங்கிவந்துள்ளன எனத் தெரிகிறது. மறு ஆண்டு தமிழ்ப் பள்ளி முறையாகக் கல்வி இலாகாவில் பதிவுசெய்யப்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளியாக மாறியுள்ளது. ஆங்கிலப் பள்ளி 1949-இல் ஆரம்பிக்கப்பட்டு அதுவும் கல்வி இலாகாவில் பதிவுசெய்யப்பட்டது. ஆங்கிலப் பள்ளியில் தமிழ்ப் பிள்ளைகளுடன் மற்ற இனப் பிள்ளைகளும் படித்துவந்துள்ளனர்.
மனநோய் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிய தா. ஆறுமுகம் பள்ளிக்காகப் பல நற்காரியங்களைச் செய்துவந்துள்ளார். பள்ளிக்காக மலாயாவின் அமைச்சர்களுள் ஒருவரான சர்டோன் பின் ஹாஜி ஜுபிர் மூலம் மூன்றரை ஏக்கர் அரசாங்க நிலத்தைக் குத்தகைக்குப் பெற உதவி நாடியுள்ளார். அதேபோன்று பள்ளிக்குத் தேவையான மேசை, நாற்காலிகள் போன்றவற்றை வழங்க டாக்டர் சார்ல்ஸ் பாக்லரை அணுகியுள்ளார்.
தமிழ்க் குடும்பங்களிலிருந்த பிள்ளைகள் பலருக்கு ஆங்கிலப் பள்ளிகளில் இடம் கிடைக்காதபோது கலைமகள் தமிழ்ப் பள்ளியே கைகொடுத்து உதவியுள்ளது. பின்னர் அப்பள்ளி இயோ சூ காங் ரோடு, 10-ஆவது கல்லுக்கு இடம்பெயர்ந்தது. அதில் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்புவரை செயற்பட்டன. அதே பள்ளியில் ஜனவரி 1953 முதல் நண்பகலில் செயற்படும் ஆங்கிலப் பள்ளி ஒன்றும் தனியாரால் தொடங்கப்பட்டது. பலகைகளாலான கட்டடம் பின்னர்ப் பல்வேறு வகைகளில் நிதி திரட்டப்பட்டுக் கற்கட்டடமாகியது. தமிழ்ப் பள்ளிகளுள் நல்ல தரமான கட்டடத்தையும் பரந்த விளையாட்டுத் திடலையும் அதிக மாணவரையும் கொண்டது அப்பள்ளியே. பல வகுப்பறைகளோடு சுமார் 600 பேர் அமரக்கூடிய கலையரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
கலைமகள் தொடக்கப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும் தொழிற்கல்விக் கூடமாகவும் மாற்றியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சிக்கு அரசாங்கம், பொதுமக்கள், தமிழர் பிரதிநிதித்துவ சபை, பிற தமிழ் நிறுவனங்கள், எல்லாவற்றுக்கும் மேலாகப் பிற இன மக்கள் எனப் பல தரப்பினரும் காட்டிய பேரார்வம் குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கு நிதி திரட்டும் முயற்சியில் குடும்பப் பெண்களும் ஈடுபட்டனர். துறைமுகத் தொழிலாளர்கள் மட்டும் 15,000 வெள்ளி வழங்கியுள்ளனர். சிங்கப்பூரிலேயே அப்பள்ளியில்தான் முதன்முதலில் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான ஒரு கட்டடமும் அருகிலேயே எழுப்பப்பட்டது. என்றாலும், அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்த இயலவில்லை. கலைமகள் பள்ளியில் தொடக்கப்பள்ளிக்குப் பிந்தியநிலை வகுப்பும் நடத்தப்பட்டது. தமிழ் உயர்நிலைப்பள்ளிக்கான தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு அவ்வகுப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ்ப் பள்ளிகளுள் தொடக்கப்பள்ளிக்குப் பிந்தியநிலை வகுப்பு நடைபெற்ற பள்ளி அது ஒன்றே.
பல்லாண்டுகள் கலைமகள் பள்ளியின் நிர்வாகக் குழுவில் உழைத்த தா. ஆறுமுகம் அப்பள்ளிக்குக் ‘கலைமகள் தமிழ்ப்பாடசாலை’ என்று பெயரைச் சூட்டியதாகக் குறிப்புள்ளது. பெயருக்கேற்ப, கல்விக்கு மட்டுமல்லாது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் உறைவிடமாய் இப்பள்ளி விளங்கியுள்ளது. அதில் படித்தவர்களுள் பலர் ஏதோ ஒரு வகையில் அக்கலைகளுள் ஒன்றிலாவது பின்னர்ச் சிறந்து விளங்கினர்; பலர் தமிழாசிரியர் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்பள்ளியில் கற்ற வசுந்தரா தேவி ரெட்டி தமது இளநிலைக் கல்வியைத் தமிழகத்தில் முடித்தபின்னர், ஆங்கிலத் தொடக்கப்பள்ளிகளில் துணைத் தலைமையாசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இப்பள்ளி, 1967-ஆம் ஆண்டுமுதல் ராமகிருஷ்ண மடத்தின் மேற்பார்வையின்கீழ் இருந்து பின்னர் 1975-இல் மூடப்பட்டது.
செம்பவாங் தமிழர் சங்கப் பாடசாலை
நேவல் பேஸ் ராணுவத் தளத்துக்குள்ளும் அதற்கு வெளியேயுள்ள பகுதியிலும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அவர்களின் பிள்ளைகளுக்காக வெஸ்ட் ஹில் ரோட்டில் சிலேத்தார் தமிழர் சங்க ஆதரவில் சிலேத்தார் தமிழ்ப் பாடசாலை சில மாதங்கள் செயற்பட்டு வந்த நிலையில், அப்பள்ளியிலுள்ள சில குறைபாடுகளைக் களையக் கல்வி இலாகா உத்தரவிட்டது. பழுதுபார்க்கும் வேலைகளுக்குப் பண உதவி செய்வதாகச் சிலர் வாக்குறுதி கொடுத்திருந்தபோதும் பின்னர் அவர்கள் முன்வரவில்லை. இருப்பினும், தமிழார்வலர்கள் சிலரின் உதவியுடன் அப்பழுதுபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுப் பாடசாலையின் திறப்புவிழா 1949-இல் இந்தியச் சுதந்திர தினமாகிய 15 ஆகஸ்ட் அன்று, சிலேத்தார் தமிழர் சங்கத் தலைவர் எ. அழகானந்தம் தலைமையில் நடைபெற்றது. பாடசாலையின் பொறுப்பாளராக ஆ. இராசுவும் ஆசிரியராகக் கே.பி. சந்திரசேகரும் பொறுப்பேற்றனர்.
சிலேத்தார் தமிழர் சங்கம் அப்பள்ளியை மட்டுமல்லாது, அவ்வட்டாரத்தில் வாழ்ந்த தமிழர்களின் கல்வி, அறிவு, கலை வளர்ச்சிக்கு உதவும்வகையில் ஒரு தமிழ் நூல்நிலையத்தையும் நிறுவியது. அதற்கான பொருளுதவியையும் புத்தக நன்கொடைகளையும் பொதுமக்களிடம் கேட்டுப் பெற்றனர். செம்பவாங் தமிழர் சங்கப் பாடசாலை 1971-இல் மூடப்பட்டது.
பாசிர் பாஞ்சாங் தமிழ்ப் பாடசாலை
சிங்காரவேலனார் தமிழ்ப் பள்ளி என 1946-இல் தொடங்கப்பட்டு, 1949 வரை அவ்வாறே அழைக்கப்பட்ட அப்பள்ளி பின்னர்ப் பாசிர் பாஞ்சாங் தமிழ்ப் பாடசாலை எனப் பெயர் மாற்றம் கண்டது. தொழிலாளர் சங்கத்தின் ஆதரவில் தொடங்கப்பட்ட பள்ளி, மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து வகுப்பறைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அவல நிலையில் இருந்ததால் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அப்புதுக் கட்டடத்தை 9 மே 1948 அன்று வழக்கறிஞர் ஜே.எ. முத்துசாமி தலைமையில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி ஜான் திவி திறந்துவைத்தார். பள்ளி, பாசிர் பாஞ்சாங் ரோட்டின் நாலே முக்கால் கல்லில் அமைந்திருந்தது. பள்ளியைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவுக்குள் வசித்த சுமார் 200 தமிழ்ப் பிள்ளைகளின் கல்வித் தேவையை அப்பள்ளி பூர்த்தி செய்துவந்துள்ளது. அதில் தொடக்கநிலை ஒன்றுமுதல் ஐந்துவரை வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. என்றாலும், நாளடைவில் அப்பள்ளியில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அப்பள்ளியில் காத்தபிள்ளை தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். பிற்காலத்தில் பள்ளியைச் சீர்ப்படுத்த அப்போதைய தலைமையாசிரியர் புஷ்பநாதன் தமிழ்ப் பெற்றோர்களைப் பாசிர் பாஞ்சாங் தமிழ்ப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும்படிக் கேட்டுக்கொண்டார். பள்ளி நீண்ட காலம் தனித்து இயங்க முடியவில்லை. பின்னர் 1961-இல் அப்பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட லேபரடோர் ஒருங்கிணந்த பள்ளியில் தமிழ்ப் பள்ளிக்கு மூன்று வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டன. பள்ளி 1967 அல்லது 1968-இல் மூடப்பட்டதாகத் தெரிகிறது.
சாங்கி தமிழ்ப் பள்ளி
சாங்கியில் இருந்த பிரிட்டிஷ் விமானத்தளத்தில் பணியாற்றிய தமிழர்களின் பிள்ளைகளுக்காகத் தமிழகப் பொதுவுடமைச் சிந்தனையாளரான ஜீவானந்தம் பெயரில் ஒரு தமிழ்ப் பள்ளி 1946-இல் தொடங்கப்பட்டது. சாங்கி இந்தியச் சமூக நலச் சங்கம் அப்பள்ளியை நிர்வகித்து வந்தது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் அவசரகாலம் அறிவிக்கப்பட்டபோது ஜீவானந்தம் தமிழ்ப் பள்ளி என்ற பெயர் சாங்கி தமிழ்ப் பள்ளி என்று மாற்றம்கண்டு 1952-இல் சீரமைப்புகள் தொடங்கின. பள்ளியில் சுமார் 80 மாணவர்கள் படித்து வந்துள்ளனர் என்றும் மலாய்ப் பிள்ளைகள் சிலரும் தமிழ் கற்று வந்துள்ளனர் என்றும் தெரிகிறது. பின்னாளில் ஒலிபரப்பாளராகப் புகழ்பெற்ற எம்.கே. நாராயணன் அப்பள்ளியில் படித்தவர். பிரதமர் லீ குவான் யூவின் 1963-ஆம் ஆண்டு வருகையைத் தொடர்ந்து, பள்ளி அதன் வசதிகளை விரிவுபடுத்த 10,000 வெள்ளி அரசாங்க மானியம் பெற்றது. லீ புதிய கட்டடத்தை 19 டிசம்பர் 1966 அன்று திறந்து வைத்தார். ஒய்.ஜி. கௌஸ் அப்போது அப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தார். மாணவர் பற்றாக்குறையால் அப்பள்ளி 1974-இல் மூடப்பட்டது.
வாசுகி தமிழ்ப் பாடசாலை
திருவள்ளுவரின் மனைவி என்று கருதப்படும் வாசுகி அம்மையாரின் பெயரில் வாசுகி தமிழ்ப் பள்ளி 1946-இல் ஜாலான் புசார் பகுதியில் செயற்படத் தொடங்கியது. அப்பகுதியில் வாழ்ந்த நகரசபைத் தொழிலாளரது ஆதரவில் பள்ளி செயற்பட்டு வந்தது. இரு அறைகளும் வராந்தாவுமே பள்ளிக்கூடம்; தொடக்கநிலைக்குரிய வகுப்புகள் ஒன்றுமுதல் ஐந்துவரை இயங்கின. மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவு. அதன் தலைமையாசிரியராக ஃபுளோரன்ஸ் டாசன், ஆசிரியராகக் கு. ஆறுமுகம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
பள்ளிக்கூடத்தின் அமைப்பும் சுற்றுச்சூழலும் சுகாதாரத்திற்கும் கல்விக்கும் முற்றும் ஏற்றதன்று எனக் கல்வி இலாகா கருதியது. அருகிலேயே ஆடுமாடுகளை வெட்டும் அறுப்புக்கொட்டகைகள் இருந்ததால் அவற்றிலிருந்து வீசும் துர்நாற்றம் பள்ளியைப் பாதிக்கிறது எனக் கருதி, கல்வி அமைச்சு பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றப் பரிந்துரைத்தது. தமிழ்க் கல்விக் கழகம் மாற்றிடமாகப் பிரெஞ்சு ரோட்டில் அதற்கு ஓர் இடத்தை ஒதுக்கக் கேட்டிருந்தது. ஆனால், அதன் கோரிக்கை நிறைவேறவில்லை. பள்ளி 1970-இல் மூடப்பட்டது.
நீலாம்பிகை தமிழ்ப் பாடசாலை
தஞ்சோங் பகார் துறைமுகத் தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்ட, கெப்பல் ரோட்டில் ஒரு பள்ளியை நிறுவினர். அதற்குத் துறைமுகத் தொழிலாளர் சங்கம் பக்கபலமாக இருந்து நிதி உதவியையும் அளித்தது. அதன் காரணமாகப் பள்ளி ‘சிங்கப்பூர்த் துறைமுகத் தொழிலாளர் சங்க நிர்வாகத் தமிழ்ப் பாடசாலை’ என்று அழைக்கப்பட்டது. பள்ளி தொடக்கத்தில் பிளேர் பிளெய்னிலிருந்த சிங்கப்பூர்த் துறைமுகக் காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்திருந்தது. பல்வேறு காலக்கட்டங்களில் துறைமுக மேம்பாட்டின் காரணமாகப் பல இடங்களுக்கு இப்பள்ளி இடம்பெயர்ந்துள்ளது. பின்னர் அப்பள்ளி நீலாம்பிகை தமிழ்ப் பாடசாலை எனப் பெயர்மாற்றம் கண்டது.
மறைமலை அடிகளின் மகளும் பெரும் தமிழறிஞருமான நீலாம்பிகை அம்மையாரின் பெயரில் அமைந்த நீலாம்பிகை தமிழ்ப் பள்ளி, 1946-இல் தொடங்கப்பட்டது. பள்ளிக்கு நிதி திரட்ட 1947-ஆம் ஆண்டு ஜூலையில் சிங்கப்பூர்த் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவில் நீலாம்பிகை தமிழ்ப் பாடசாலை நாடகக் குழுவினரால் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு நிதி திரட்டப்பட்டது. பள்ளித் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கமூட்டப் பரிசளிப்பு விழாக்களை நடத்திவந்துள்ளது. ஆண்டுதோறும் பெற்றோர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. சிங்கப்பூர்த் துறைமுகத் தொழிலாளர் சங்கம் பள்ளிக்குப் பேராதரவு அளித்துவந்துள்ளது. பள்ளியின் கல்விக் குழுவுக்குச் சமரசம் என்பார் தலைமையேற்றார். இப்பள்ளியின் தலைமையாசிரியாகப் ப. பகவதியும் மேற்பார்வையாளராக அ. கிருஷ்ணசாமியும் ஆசிரியராக ம.சி. திருநாவுக்கரசுவும் பணியாற்றியுள்ளார்கள். பெக் சியா ஸ்ட்ரீட்டில் 1966 முதல் இயங்கிய பெக் சியா ஒருங்கிணைந்த பள்ளியில் ஒரு பகுதியாகச் செயற்படத் தொடங்கியது. அப்பள்ளியில் கற்ற மாணவருள் ஒருவரான க. ராசப்பன் பல ஆண்டுகள் கல்வி அமைச்சின் தேர்வுப்பகுதியில் பணியாற்றியதுடன், முனைவர் பட்டத்தையும் பெற்றார். பெக் சியா ஒருங்கிணைந்த பள்ளியில் சி.அ. முத்தையா, பி. சிவசாமி ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். பள்ளி 1970-இல் மூடப்பட்டது.
இதற்கிடையே, மலேயன் ரயில்வேயில் வேலைசெய்த இந்திய ஊழியர்கள் தங்கமணி தமிழ்ப் பாடசாலை என்னும் பெயரில் ஒரு பள்ளியை நடத்திவந்தனர். அது செயற்பட்டுவந்த இடம் பொருத்தமற்றதாக இருந்ததால் நீலாம்பிகை பள்ளியுடன் இணைக்கப்பட்டது.
பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலை
பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலை 1948-இல் ஹெண்டர்சன் குன்றில் ஓர் அத்தாப்புக் குடிசையில் இயங்கிவந்தது. அதில் போதுமான வசதிகள் இல்லை என்பதால் புதிதாக ஒரு கட்டடத்தை எழுப்பத் தமிழ்த் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் ஓடின் ஸ்குவெர் என்னும் இடத்தில் அமைந்திருந்த நகரசபை நிலத்தில் ஓர் இடத்தைப் பள்ளி நிர்வாகம் குத்தகைக்குக் கேட்டது. சிங்கப்பூர் நகரசபையின் நிதி, பொதுக் காரியக் குழு, 29 பிப்ரவரி 1952 அன்று, நிலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிப்பதெனவும் ஆண்டொன்றுக்கு 10 வெள்ளி என்னும் குறைந்தபட்ச வாடகை வாங்குவதெனவும் தீர்மானித்தது. எனினும், நகரசபைக் குழு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. அவற்றுள் ஒன்று, புதிய பாடசாலைக் கட்டடம் கட்டப்பட்டவுடன் ஹாவ்லாக் ரோடு, ஹெண்டர்சன் ரோடு தமிழ்ப் பாடசாலைகள் இரண்டையும் மூடிவிட்டு அவற்றைப் புதிய கட்டடத்தில் ஒன்றாக இணைத்திட வேண்டும் என்பது. பிச்சைமுத்து என்பவர் பொறுப்பாளராகவும் மு. ரத்தினம், சி. முத்தையா ஆகியோர் இப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினர். இப்பள்ளியில் ஒரு சீனர் முழுநேர ஆங்கில ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். பள்ளி 1974-இல் மூடப்பட்டதாகத் தெரிகிறது.
நாகம்மையார் தமிழ்ப் பாடசாலை
‘பெரியார்’ என்றழைக்கப்பட்ட ஈ.வெ. ராமசாமியின் மனைவி நாகம்மையின் பெயரில் 1948-இல் புக்கிட் தீமா ரோட்டில் பதினொன்றரை மைல்கல் அருகே தொடங்கப்பட்டது. சுற்றுவட்டத்தில் பணியாற்றிய தொழிலாளரது பிள்ளைகளே பெரும்பான்மையாக அப்பள்ளியில் படித்தனர். பலகைகளாலும் தகரக்கூரையாலும் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு சாதாரண வீடுபோன்ற அமைப்புடன் தொடங்கப்பட்ட பள்ளி பலமுறை பழுதுபார்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் கட்டட நிதிக்கு 1967-இல் சுங் கியாவ் வங்கியின் நிர்வாகி டத்தோ லீ சீ ஷான் 24,000 வெள்ளி நன்கொடை வழங்கினார். அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரை பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அதன் தலைமையாசிரியராக அ. சந்தனசாமி பணியாற்றினார். அப்பள்ளிச் சீரமைப்புக்கு உதவும் பொருட்டு, சிங்கப்பூர் இந்தியத் திரை, நாடகக் கலைஞர்கள் நடந்தவரை சரி என்னும் நாடகத்தை விக்டோரியா அரங்கில் 20 ஆகஸ்ட் 1965 அன்று மேடையேற்றி அதில் கிடைத்த வசூலை அப்பள்ளிக்கு வழங்கினர். சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சிச் செய்திப் பிரிவில் பணியாற்றிய தி.சு. மோகனம் அப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். நாச்சியாரம்மை தவசிக்கண்ணுவும் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பள்ளி 1979-இல் மூடப்பட்டது.
செயிண்ட் ஜியார்ஜஸ் (St George’s) தெருத் தமிழ்ப் பள்ளி
செயிண்ட் ஜியார்ஜஸ் தெருத் தமிழ்ப் பள்ளி, சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் அரசாங்கத் தமிழ்ப் பள்ளி. (காண்க: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்) அப்பர் சிராங்கூன் ரோட்டின் ஒரு கிளைத் தெருவாக இருக்கும் செயிண்ட் ஜார்ஜஸ் ரோட்டில் அப்பள்ளி இருந்தது. செயிண்ட் ஜார்ஜஸ் ரோட்டிலும் அதன் சுற்றுவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் சொந்த வீடுகளிலோ வாடகைக்கோ குடியிருந்தனர். பொதுப் பணித் துறையில் வேலை செய்தோரின் குடியிருப்பும் அங்கிருந்தது. போக்குவரத்து வசதிகள் சீராக இல்லாத காலத்தில் தங்கள் பிள்ளைகள் பயிலப் பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்க அங்குள்ள சிலர் முயன்றனர். அவர்களுள் சுப்ரமணிய மண்டோர், சோ. வைரப்பன் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். அப்பகுதியில், தொடக்கத்தில் மிகச் சிறிய இரு பள்ளிகள் தமிழ் கற்பித்தன. அவை அப்பகுதிவாழ் பாட்டாளி மக்களால் தொடங்கப்பட்டவை. பின்னர், அரசாங்கம் செயிண்ட் ஜியார்ஜஸ் தெருத் தமிழ்ப் பள்ளியைக் கட்டிக் கொடுத்தது.
பள்ளி ஜனவரி 1950-இல் தொடங்கப்படவிருந்ததால் உடனடியாக இரு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் தேவைப்பட்டுள்ளனர். பள்ளிக்குப் பொறுப்பு வகிக்கும் தலைமையாசிரியர் பயிற்சிபெற்றவராகவும் கற்பித்தலில் அனுபவசாலியாகவும் திட்டமிடுவதில் திறன் உள்ளவராகவும் இருக்கவேண்டும் என்று இந்தியன் டெய்லி மெயிலில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அவர்களது அனுபவத்திற்கேற்பச் சம்பளம் வழங்கப்படுவதாகவும் தகுதியுடையோர் 71, சிலிகி ரோட்டிலுள்ள தமிழ் முரசு அலுவலகத்திலிருந்த தமிழ்க் கல்விக்கழகத் தலைவருக்கு விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சிங்கப்பூர்க் கல்வி இயக்குநர் எ.டபிள்யு. ஃபிரிஸ்பி திங்கட்கிழமை, 9 ஜனவரி 1950 அன்று பள்ளியைத் திறந்துவைத்தார்.
பள்ளிக்குத் தனியே கட்டடம் இருந்தது. அதில் மரத்தாலான மேசை, நாற்காலிகளுடன் நான்கு வகுப்பறைகள் இருந்தன. மாணவரது எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் இரண்டு வெவ்வேறு நிலை வகுப்புகளை ஒன்றாகவே சேர்த்துக் கற்பித்துள்ளனர். பள்ளிக்குப் பின்புறம் ஓர் அலுவலகம் இருந்தது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் கழிப்பறை வசதிகளும் இருந்தன. இடைவேளையின்போது, பள்ளிக்கு வெளியே திடலுக்குப் பக்கத்தில் அங்காடிக்காரர்கள் அவர்கள் வீடுகளில் செய்த வடை, ஐஸ் கச்சாங், மீ கோரங் முதலிய உணவுப் பதார்த்தங்களைக் கொண்டுவந்து விற்றார்கள். தென்னை, வாழை, மா போன்ற மரங்களும் மல்லிகை முதலிய பூச்செடிகளும் பள்ளிக்கு அழகு சேர்த்தன. பள்ளிக்கு முன்புறம் ஒரு பெரிய திடல் இருந்தது. அப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தவர் கி. வி. பாலையா. எம் ஏ. பீட்டர், எஸ். டேனியல், கமலா எட்வர்ட்ஸ், சிவகாமசுந்தரி கல்யாணராமன், கே. சந்திரமூர்த்தி ஆகியோரும் கற்பித்துள்ளனர். அப்பள்ளியில் கற்ற சி.அ. முத்தையா பின்னர் உயர்நிலைப்பள்ளிப் பாடநூலாக்கக் குழுவின் இயக்குநராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை, ஜூ சியாட் பிளேசில் நகரச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களது குடியிருப்புப் பகுதியில் 26 நவம்பர் 1946 அன்று தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரே வகுப்பறையில் ஒரே ஆசிரியரைக் கொண்டு பாடம் கற்பிக்கப்பட்டது. பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்தது. வகுப்புகள் ஒன்றுமுதல் ஐந்துவரை இருந்துள்ளன. இரண்டு மூன்று வகுப்புகளை இணைத்தே ஆசிரியர்கள் கற்பித்துள்ளனர். பள்ளியில் கணிசமான தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பயின்றுள்ளனர். காத்தபிள்ளையும் மார்டின் பாலும் தலைமையாசிரியர்களாய்ப் பணியாற்றியுள்ளனர். மார்ட்டின் பால் மாணவர்களுக்குச் சீருடையை அறிமுகப்படுத்தினார். அப்பள்ளி மாணவரான பொன். சுந்தரராசு பின்னாளில் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றியதோடு, எழுத்தாளராகவும் புகழ் பெற்றார். பள்ளி 1973-இல் மூடப்பட்டது.
சுதந்திரோதயம் தமிழ்ப் பள்ளி
புக்கிட் தீமா 9-ஆம் மைலில் டெய்ரி ஃபார்ம் ரோட்டின் அருகில் அமைந்திருந்த சுதந்திரோதயம் தமிழ்ப் பள்ளி 1946-இல் தொடங்கப்பட்டது. அவ்வட்டாரத்தின் பால்பண்ணைத் தொழிலாளர்கள், கல்லுடைக்கும் தொழிலாளர்கள், தொழிலாளர் விடுதியில் தங்கியிருந்த இதர தொழிலாளர்கள் ஆகியோரின் பிள்ளைகள் சுமார் 25 பேர் அப்பள்ளியில் படித்தனர். பள்ளியின் முதல் ஆசிரியர் தம்புசாமி. ஆசிரியராக இராமசாமி என்பாரும் பணியாற்றியதாகத் தெரிகிறது. பிள்ளைகளின் எண்ணிக்கை சரிந்ததால் 1952-இல் பள்ளி மூடப்பட்டது.
பெரியார் ஈ.வெ.ரா. சமதர்மம் தமிழ்ப் பாடசாலை
பெரியார் ஈ.வெ.ரா. சமதர்மம் தமிழ்ப் பாடசாலை 1946-இல் பிரெஞ்சு ரோட்டில் தொடங்கப்பட்டது. பொதுப்பயனீட்டுத் துறை, நகர மன்றம் ஆகியவற்றில் வேலைசெய்த தொழிலாளர்கள் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் பெயரில் பள்ளியைத் தொடங்கினர். அவர்கள் பிள்ளைகள் அப்பள்ளியில் படித்தனர். 1947-48 காலக்கட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டு ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்புவரை கற்பித்துள்ளனர். பள்ளி 1952-இல் மூடப்பட்டு மாணவர்கள் வாசுகி தமிழ்ப் பாடசாலைக்கும் வேறுசில பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளப் பள்ளிகளைத் தவிர, சில திண்ணைப்பள்ளிகளும் இயங்கி வந்துள்ளன. குடியிருந்த வீடுகளில் ஓரறைப் பள்ளிகள் செயற்பட்டுள்ளன. பெரும்பான்மையான பள்ளிகளில் இடநெருக்கடி காரணமாக நான்கு அல்லது ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டனர். ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று வகுப்புகளைச் சேர்த்தே கற்பித்துள்ளார். பலர் தமிழ்க் கல்வியை அத்தோடு முடித்துக்கொண்டனர். அன்று உச்ச வரம்பான தொடக்கநிலை ஏழாம் வகுப்பு விவேகானந்தர் ஆண்கள் பாடசாலையிலும் கலைமகள் தமிழ்ப் பாடசாலையிலும் கற்பிக்கப்பட்டது. மற்றவற்றில் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு வரையிலும் கற்பிக்கப்பட்டுள்ளது. தூரம் கருதியோ, போக்குவரத்துச் சீராக இல்லாததாலோ பலர் கல்வியைக் கைவிட்டனர். பெண்கள் பூப்பெய்தியவுடன் பள்ளிக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டனர்.
தமிழ் முரசு 17 ஜனவரி 1947 அன்று, அதன் தலையங்கச் செய்தியில் 10 ஏக்கர் நிலத்தில் 16 வகுப்பறைகள் கொண்ட பள்ளி உருவாக வேண்டும்; அதன் வளாகத்திலேயே 200 மாணவர்கள் தங்கிப் பயில அனைத்து வசதிகளுடன்கூடிய தங்குவிடுதியும் அதன் மேற்பார்வையாளரும் ஊழியர்களும் தங்க வீட்டுவசதியும் செய்து தரப்படவேண்டும்; 20 ஆசிரியர்களுடன் பள்ளி இயங்க வேண்டும் என்றும் மாதம் இதற்கான செலவு 5,000 வெள்ளி ஆகும் என்றும் அப்போது சிங்கப்பூரிலிருந்த தமிழ்ச் செல்வந்தர்கள் தலா 10,000 வெள்ளி கொடுத்தால் இக்கனவு நனவாகும் என்றும் ஒரு பெருந்திட்டத்தை முன்வைத்தது. ஆனால், திட்டம் நிறைவேற்றப்படவேயில்லை. எனினும், 1983-முதல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் மட்டும் சிறு பள்ளியாகத் தொடங்கிப் பெரும் மையமாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு
பின்வரும் பள்ளிகளைப்பற்றிப் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் தகவல்கள் தெரிவிக்க விரும்புவோர் est_mysay@singaporetamil.org முகவரியில் தெரிவிக்கலாம்:
காளமேகம் தமிழ்ப் பாடசாலை, மறுமலர்ச்சித் தமிழ்ப் பாடசாலை, மோகன் குமாரமங்கலம் பாடசாலை, தங்கமணி தமிழ்ப் பாடசாலை, ஒளவையார் தமிழ்ப் பாடசாலை. கமலா நேரு தமிழ்ப் பாடசாலை, ஹாவ்லாக் சாலைத் தமிழ்ப் பாடசாலை, தெலுக் பிளாங்கா தமிழ்ப்பள்ளி, சிங்கைமகா தமிழ்ப்பள்ளி, பகவத்சிங் தமிழ்ப்பள்ளி, தாலமுத்து தமிழ்ப் பாடசாலை, கள்ளர் தமிழ்ப் பாடசாலை. சரஸ்வதி தமிழ்ப் பாடசாலை, இராமமூர்த்தி தமிழ்ப் பாடசாலை, தமிழ்ச் சிறுவர் பாடசாலை, சன்மார்க்க சங்கப்பள்ளி, சிதம்பரனார் தமிழ்ப்பள்ளி, கம்பர் தமிழ்ப்பள்ளி, தண்டாயுதபாணி தமிழ்ப்பள்ளி, சுபாஷ் சந்திரபோஸ் தமிழ்ப்பள்ளி, பாரதியார் தமிழ்ப்பள்ளி, இந்துசபைப் பள்ளி, சின்னப்பனார் தமிழ்ப்பள்ளி, விநாயகநந்த தமிழ்ப்பள்ளி, பொத்தோங் பாசிரில் இருந்த தமிழ்ப்பள்ளி, தெம்பனிசில் ஜாலான் ஒக்சாயிலிருந்த தமிழ்ப்பள்ளி, ஆர்.ஏ.எப். சிவிலியன் தமிழ்ப்பள்ளி, சுவா சூ காங்கிலிருந்த தமிழ்ப்பள்ளி.
மேல்விவரங்களுக்கு
Dass, Danapaul Savery. Tamil Education in Singapore, 1945–1969. A thesis presented to the Faculty of Education, University of Malaya, in partial fulfilment of the requirements for the Degree of Bachelor of Education, 1969.
Dass, Danapaul Savery. Tamil Education in West Malaysia and Singapore 1860–1970. A thesis presented to the Faculty of Education, University of Malaya, in partial fulfilment of the requirements for the Degree of Master in Education, 1972.
Doray, Joseph. “Tamil Education in Singapore.” In 150 Years of Education in Singapore, edited by T. R. Doraisamy, 116–125. Singapore: TTC Publications, 1969.
Michael, Clement, et al. The Dance of Faith: Church of Our Lady of Lourdes, 1884–2011. Singapore: National Library, 2012.
“Opening of Saradamani Girls’ School.” The Singapore Free Press and Mercantile Advertiser (1884–1942), 3 February 1937, 7. (From Newspaper SG)
இராஜிக்கண்ணு, மா. சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வரலாற்று நோக்கில் (1950–2009). சிங்கப்பூர்: RPA Publications, மார்ச் 2016.
சிவசாமி, பி. சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள்: வேரிலிருந்து கிளைகள் வரை. சிங்கப்பூர்: திருவள்ளுவர் பதிப்பகம், செப்டம்பர் 2015.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |