கோவிந்தசாமி, பி.



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

பி.கோவிந்தசாமி என்று பரவலாக அறியப்பட்டபெருமாள் கோவிந்தசாமி (1911 - 1978),தம் வாழ்க்கையை ஓர் அஞ்சல் ஊழியராக எளிமையாகத் தொடங்கிப்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்தவர். தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றிபெற்றார்; ஆன்சன் தொகுதியில் 15 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச்சேவையாற்றினார். 

இந்தியாவில் பிறந்த அவர், 1927-இல் சிங்கப்பூர் வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, அவர் அஞ்சல் சேவைகள் துறையில் அஞ்சலராகச் சேர்ந்தார். காலப்போக்கில் பதவியுயர்வு பெற்று 1963-இல் அஞ்சல்துறை ஆய்வாளராக ஓய்வுபெற்றார். இப்பதவி அஞ்சல் துறையின் சீருடைப் பிரிவில் ஆக உயர்ந்த பதவி. மேலும், 1947 முதல் 1963 வரை, அவர் அஞ்சல் ஊழியர் சங்கத்திலும் அஞ்சல், தொலைத்தொடர்பு சீருடைப் பணியாளர் சங்கத்திலும் தீவிரமாகப் பங்காற்றினார்.

மக்கள் செயல் கட்சியை நிறுவிய உறுப்பினர்களுள் ஒருவரான அவர், 1963 பொதுத் தேர்தலில் ஆன்சன் தொகுதியில் போட்டியிட்டு, அப்போது பொறுப்பிலிருந்த பாட்டாளிக் கட்சியின் டேவிட் மார்ஷலைத் தோற்கடித்தார். பின்னர், 1968, 1972, 1976 தேர்தல்களில் போட்டியின்றி வெற்றிபெற்றார். 1978-இல் அவர் மாரடைப்பால் காலமானபிறகு, 1979-இல் ஆன்சன் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அவருடைய கட்சியையே சேர்ந்த சி.வி. தேவன் நாயர் வெற்றிபெற்றார். பின்னர், அதிபர் பதவியை ஏற்பதற்காக நாயர் பதவியைத் துறந்தபோது, 1981-இல் ஆன்சன் தொகுதியை மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சியின் ஜே.பி. ஜெயரத்தினத்திடம் இழந்தது. ஜெயரத்தினம் சுதந்திர சிங்கப்பூரின் முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 

கோவிந்தசாமி, நாடாளுமன்றத்தில் பொதுப் போக்குவரத்து முதல் பொதுப் பூங்காக்கள் வரை, விளம்பரங்கள் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை, பணவீக்கம் முதல் குடியேற்றச் சட்டங்கள் வரை எனப் பல தலைப்புகளில் கேள்வி எழுப்பினார். 1969-ஆம் ஆண்டு சான்றாயர் முறையை நீக்குவதற்கான சட்ட மசோதாவை அரசாங்கம் முன்வைத்தபோது, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எழுந்த ஒரே ஓர் எதிர்ப்புக் குரல் அவருடையதாக இருந்தது. 1976-இல், சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணம், வட்டார உரிமக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோது, பிரதமரிடம் எதிர்ப்புத் தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலருள் அவரும் ஒருவர். 

பிரதமர் லீ குவான் யூ, 1977-இல், மற்ற உறுப்பினர்களைவிட கோவிந்தசாமியால் நாடாளுமன்றத்திற்கு அதிகச் செலவு ஏற்படுவதைச் சுட்டினார். ஏனெனில், கோவிந்தசாமி தமிழில்பேச முடிவுசெய்ததால் அவருக்கு மொழிபெயர்ப்புச் சேவை வழங்குவதற்குச் செலவு ஏற்பட்டது (காண்க: நாடாளுமன்றத்தில் தமிழ்). பின்னர், கோவிந்தசாமி நாடாளுமன்றத்தில் ஒரு தனித்துவமான பாணியைப் பின்பற்றினார்; ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகியவற்றைக் கலந்து பேசினார். அவர் பெரும்பாலும் ஒரு மொழியில் தொடங்கி, பின்னர் இரண்டாவது மொழிக்குச் சென்று மூன்றாவது மொழியில் தம் உரையை முடித்தார். ஆயினும் தமது கருத்துகளைத் திறம்பட எடுத்துரைத்தார். அவரது நேர்மையான உரைகள், நாடாளுமன்றத்தில் அடிக்கடி சிரிப்பலையை உருவாக்கிய அதேவேளையில், அவை அடித்தள உணர்வுகளைப் பிரதிபலித்ததால், சக உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றார். 

ஆன்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியதோடு, குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள், ஆன்சன், தஞ்சோங் பகார் தொகுதிகளுக்கான நிர்வாகக் குழுக்கள் ஆகியவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும், இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை மன்றம், ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆகியவற்றின் தலைவராகவும், சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறநிதியின் துணைத் தலைவராகவும் சேவையாற்றினார். அன்றைய சுகாதார அமைச்சர் டோ சின் சை, கோவிந்தசாமியின் இரங்கல் செய்தியில், நிர்வாகமாக இருப்பினும் சட்டமாக இருப்பினும் அவர் நல்லதுகெட்டதைச் சீர்தூக்கிப் பார்க்கும் அரசியல் உள்ளுணர்வு கொண்ட ஒரு 'தரமிக்க மனிதர்' என்று குறிப்பிட்டார். அவ்வுள்ளுணர்வை அவரது தொழிற்சங்க அனுபவத்திலிருந்தும் அடித்தளப் பிரச்சினைகளில் அவர் கொண்டிருந்த அக்கறையிலிருந்தும் பெற்றார் என்று கருதப்படுகின்றது. 



மேல்விவரங்களுக்கு
Parliament of Singapore, Obituary Speeches, vol. 37 of Parliamentary Debates: Official Report, 14 June 1978, cols. 1545
The Straits Times. “Goh Leads Ministers and MPs at Govin’s Funeral,” The Straits Times, 7 June 1978, 8. (From NewspaperSG) 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA