ஜெயரத்தினம் ஜே.பி.



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

ஜே.பி. ஜெயரத்தினம் என அறியப்பட்ட ஜோஷ்வா பெஞ்சமின் ஜெயரத்தினம் (1926-2008), புகழ்பெற்ற வழக்கறிஞர், நீதிபதி, சுதந்திரச் சிங்கப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். ஜனநாயகம் தழைத்தோங்கவும் சட்டத்தின் ஆட்சி நடைபெறவும் பாடுபட்டவர்.

ஜெயரத்தினம், அவரது பெற்றோர் மலேசியாவிலிருந்து விடுமுறைக்கு இலங்கை சென்றிருந்தபோது சங்கானை என்னும் ஊரில் பிறந்தார். பின்னர், மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள இங்லிஷ் காலேஜிலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு (1942-45), சிங்கப்பூரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியிலும் பயின்றார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டம் படிப்பதற்காக 1948-இல் இங்கிலாந்து சென்றவர், 1951-இல் சிறப்புத் தேர்ச்சியுடன் பட்டம் பெற்று, அதே ஆண்டு பிரிட்டிஷ் சட்டத்தொழில் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றார். அதற்கடுத்தாண்டு, அரசாங்கச் சட்டத்துறையில் சேரச் சிங்கப்பூர் திரும்பினார். ஜெயரத்தினம், தமது சட்டத்துறைப் பணிக்காலத்தின்போது நீதிபதி, அரசு வழக்குரைஞர், உச்ச நீதிமன்றப் பதிவாளர் எனப் பல பதவிகளில் பங்காற்றினார். குறிப்பாக, 1963-ஆம் ஆண்டில், அவர் முதல் குற்றவியல் மாவட்ட நீதிபதியாகவும், முதல் மேஜிஸ்டிரேட்டாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் தனியார்துறைக்குச் செல்ல முடிவு செய்து பதவி விலகினார்.

ஜெயரத்தினம், 1971-இல் அரசியலில் நுழைந்து, அதே ஆண்டு பாட்டாளிக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். அவர் 1972-இல் நடைபெற்ற தமது முதல் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால், 1981-இல் ஆன்சன் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த வெற்றியே, 1965-இல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் எதிர்க்கட்சி வேட்பாளர் என்னும் புகழைப் பெற்றுத் தந்தது. எனினும், 1986-இல், பாட்டாளிக் கட்சியின் கணக்குகள் குறித்துத் தவறான அறிக்கைகளை வழங்கிய குற்றத்திற்காக அவர் நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மறு ஆண்டு, வழக்கறிஞராகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, அவர் பிரிவி கவுன்சிலின் நீதித்துறைக் குழுவிடம் முறையிட்டார். அக்குழு, அவரது வழக்கறிஞர் பதவி விலக்கலை நிராகரித்ததோடு அவரது தண்டனையை "ஒரு கடும் அநீதி" என்றும் குறிப்பிட்டது. அவர் 1997-இல் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக அவரது கட்சியால் நியமிக்கப்பட்டார். ஜெயரத்தினம், 1990-களின் பிற்பகுதியில், தாம் தோற்ற வழக்குகளில் நஷ்டஈடு செலுத்துவதற்காகத் தமது நூல்களைத் தெருக்களில் விற்றுக்கொண்டிருந்தார். இருந்தும், கடன்களை அடைக்க முடியாமற் போனதால், நொடித்துப் போனவர் என்று அறிவிக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டில், தமது நாடளுமன்றப் பதவியை இழந்தார். கையோடு தமது கட்சியிலிருந்தும் விலகினார். கடனை அடைத்து நொடிப்புநிலை மீளாதவரைத் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என்ற நிலையில், அவர் 2008-இல் சீர்திருத்தக் கட்சியை நிறுவினார். ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில், தம் 82-ஆம் வயதில் காலமானார். அவரது மூத்த மகன் கென்னத் ஜெயரத்தினம் பின்னாளில் கட்சியின் தலைவரானார். அவரது இளைய மகன், ஃபிலிப் ஜெயரத்தினம், பரிசு பெற்ற எழுத்தாளராகவும் தலைசிறந்த நீதிமானாகவும் விளங்கினார்.  

மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற ஏகபோகத்தை 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உடைத்த முதல் எதிர்க்கட்சி உறுப்பினர் என்னும் வரலாற்றைப் படைத்தது மட்டுமன்றி, ஜெயரத்தினம் தமது வாழ்நாள் முழுதும் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் அயராது போராடினார். அவர் மறைந்துபோது, “சிங்கப்பூரின் அரசியல் வளர்ச்சியில், ஜனநாயகம், நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் திரு ஜெயரத்தினம் முக்கியப் பங்காற்றினார்” என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார். ஆளும் கட்சி எவ்வளவு திறன்மிக்கதாக இருந்தாலும் சிங்கப்பூரின் ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை என்ற நிலைப்பாட்டின் வழியாக ஜெயரத்தினம் இன்றும் நினைவுகூரப்படுகிறார்.



மேல்விவரங்களுக்கு
சியு, வேலரி. “ஜோஷ்வா பெஞ்சமின் ஜெயரத்தினம்,” சிங்கப்பூர் இன்போபீடியா, Published 4 December 2023. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=26021a48-d4ee-4d15-9d5d-51b1ea033bc5
சுவா, வேல், சிங்க் வெர்ன் லீ. “டுடே20: தி லோன்லி பியிட்டெர் (12 October 2002).” டுடே, 14 November 2020. https://www.todayonline.com/singapore/today20-lonely-fighter-oct-12-2002
எகானாமிஸ்ட். “ஜே.பி. ஜெயரத்தினம்.” 9 October 2008. https://www.economist.com/obituary/2008/10/09/jb-jeyaretnam 
நவீன் இளங்கோவன். “மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜே.பி. ஜெயரத்தினம் பெயரில் புதிய அறக்கட்டளை அமைக்கப்படும்.” டுடே, 5 January 2021. https://www.todayonline.com/singapore/new-charity-be-set-and-named-after-late-opposition-party-leader-jb-jeyaretnam
வால் ஸ்ட்ரீட். “மதிப்புமிக்க சொத்து.” 31 July 2001. https://www.wsj.com/articles/SB99653464010000000
"ஜோஷ்வா பெஞ்சமின் ஜெயரத்தினமும் சிங்கப்பூர் சட்ட சங்கமும் (சிங்கப்பூர்)." கேஸ்மைன். Published 21 November 1988. https://www.casemine.com/judgement/uk/5b4dc2542c94e07cccd23f18

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA