தேவன் நாயர், சி.வி.



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

செங்கர வீட்டில் தேவன் நாயர் என்னும் சி.வி. தேவன் நாயர் (1923-2005) சிங்கப்பூரின் முதல் இந்திய இன அதிபர். மக்கள் செயல் கட்சியின் (ம.செ.க.) நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர், தொழிற்சங்கவாதி, எழுத்தாளர், ஆசிரியர். தமிழ்மொழியைச் சிங்கப்பூர் இந்தியப் பண்பாட்டின் சாளரமாக வருணித்த அவர், சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக நிலைத்திருக்க அரசாங்க – சமூகப் பங்காளித்துவம் அவசியம் எனக் கருதித் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தை அமைத்தார். 

மலேசியாவின் மலாக்காவில் பிறந்த தேவன் நாயர் பத்து வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். முதலில் ரங்கூன் ரோடு தொடக்கப் பள்ளியில் பயின்று பிறகு ‘சீனியர் கேம்பிரிட்ஜ்’ சான்றிதழை விக்டோரியா பள்ளியில் 1940-இல் பெற்றார். இரண்டாம் உலகப்போர் முடிந்து சிங்கப்பூரில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்தபோது 1945-இல் செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையத்திலும் பிறகு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் ஆசிரியர் சங்கம் 1947-இல் நிறுவப்பட்டதிலிருந்தே அதன் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர், 1949-இல் அவ்வமைப்பின் செயலாளரானார். பிரிட்டிஷ் காலனித்துவ அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 1951-53 காலக்கட்டத்தில் சுமார் ஈராண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தேவன் நாயர், ஏப்ரல் 1953-இல் விடுதலையானதும் சிங்கப்பூர்த் தொழிற்சாலை, கடை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளரானார்.

தொழிற்சங்கவாதிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றிக்கொண்டிருந்த லீ குவான் யூ, தேவன் நாயரின் தலைமைத்துவத் திறன்களைக் கண்டு, 1954-இல் ம.செ.க தொடங்கியபோது அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இணைய அழைப்புவிடுத்தார். அழைப்பை ஏற்ற தேவன் நாயர், அக்கட்சியின் மத்தியச் செயற்குழுவிலும் பங்காற்றினார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 1956-இல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டவர், மக்கள் செயல் கட்சி 1959-இல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததும் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரே ஆண்டில் அப்பதவியிலிருந்து விலகி 1960-இல் மீண்டும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார். அதே ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட முதியோர் கல்விக் கழகத்தின் முதல் தலைவராக (1960-64) நியமிக்கப்பட்டார்.

சிங்கப்பூர்த் தொழிற்சங்க வரலாற்றில் மிகக்கடுமையான காலக்கட்டமாகக் கருதப்பட்ட 1960-களின் தொடக்கத்தில், புதிதாகப் பதவியேற்றிருந்த ம.செ.க.விற்கு ஆதரவான தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசை உருவாக்கி அதன் முதல் பொதுச்செயலாளராக 1961-இல் பொறுப்பேற்றார் தேவன் நாயர். அடுத்த ஈராண்டுகளில், சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்தபோது, ஜனநாயகச் செயல் கட்சி என்னும் புதுக் கட்சியை 1964-இல் தோற்றுவித்து அதன் முதல் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். பங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார்.

சிங்கப்பூருக்கு 1969-இல் திரும்பிய தேவன் நாயர், மீண்டும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் 1979-இலிருந்து தலைவராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தோடு புரிந்துணர்வுடன் இணைந்து செயலாற்றும் வகையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அம்மாற்றங்களே பிறகு பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வுகாணும் அரசு-தொழிற்சங்கம்-முதலாளி எனும் முத்தரப்பு உறவு வலுப்பட வழிவகுத்தன. அவர் தொடங்கிய திட்டங்களுள் ஒன்றான ‘வெல்கம்’ பேரங்காடியே பின்னாளில் ‘என்டியுசி ஃபேர்பிரைஸ்’ பேரங்காடிக் குழுமமாக மாற்றம் கண்டது. பிறகு ஆன்சன் நாடாளுமன்றத் தொகுதியில் 1979 இடைத்தேர்தலிலும் 1980 பொதுத்தேர்தலிலும் ம.செ.க.  வேட்பாளராக வெற்றிபெற்ற தேவன் நாயர், சிங்கப்பூரின் மூன்றாம் அதிபராக 1981-இல் பொறுப்பேற்க அழைக்கப்பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதிபராக நான்காம் ஆண்டில் இருந்தபோது அப்பதவியிலிருந்தும் விலகினார். மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சை மேற்கொள்ளவே அவர் பதவி விலகியதாகப் பிரதமர் லீ குவான் யூ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதை மறுத்த தேவன் நாயர் பிறகு கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கேயே சுமார் 20 ஆண்டுகள் வசித்து 2005-இல் மறைந்தார். 

தேவன் நாயர் மலையாளியாக இருந்தபோதும், சிங்கப்பூரில் தமிழ்மொழி வளரவும் பரவவும் தனிப்பட்ட அக்கறையும் கவனமும் செலுத்தினார். தமிழ்மொழி அனைத்து இந்தியருக்கும் உகந்த மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற பெருநோக்கோடு, இந்தியச் சமூகத்தின் பேராளர்களை ஒன்றுதிரட்டி, 1979-இல் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தை உருவாக்கி, தமிழரல்லாதோரையும் முக்கியப் பதவிகளில் அமர்த்தி, அதன் தலைவராகவும் செயலாற்றினார். அவர்தம் கனவு அவர் கழகத்திலிருந்து விலகி 1981-இல் சிங்கப்பூர் அதிபரானதுடன் நிறைவேறாமலேயே போய்விட்டது.

ஆசிரியராகத் தொடங்கி அதிபராக உயர்ந்த தேவன் நாயர் தன் தொழிற்சங்கச் சேவைகளுக்காகப் பொதுச்சேவை நட்சத்திர விருதையும் (1973), சமுதாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்வோருக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வழங்கும் கௌரவ முனைவர் பட்டத்தையும் (1976) பெற்றார். அவர் மறைந்தபோது, “சிங்கப்பூர் இந்நிலையில் இருப்பதற்கு வித்திட்ட தேசத்தந்தைகளுள் ஒருவர்” என்று பிரதமர் லீ சியன் லூங்கின் இரங்கல் குறிப்பில் பாராட்டப்பட்ட தேவன் நாயர், சிங்கப்பூருக்கேற்ற சோஷியலிசம் உட்பட பல நூல்களில் தொழிலாளர் ஒருங்கிணைப்பு, மேம்பாடு குறித்த ஆழமான சிந்தனைகளைப் பதிவுசெய்ததால் ‘தோழர்’ அதிபராகவும் நினைவுகூரப்படுகிறார். தேவன் நாயரின் மனைவி ஆவடை தனலட்சுமி, இந்தியர்களுள் முதன்முதலாக “முதல் பெண்மணி”யாகவும் முதல் இந்தியப் பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தவர்.



மேல்விவரங்களுக்கு
Koh Tommy, Timothy Auger, Jimmy Yap, and Wei Chian Ng, eds. Singapore: The Encyclopedia. Editions Didier Millet and National Heritage Board, 2006. (Call no. 959.57003 SIN-[HIS])
"Former Presidents." Istana. Accessed 1 August 2025. https://www.istana.gov.sg/The-President/Former-Presidents
Prime Minister Lee Hsien Loong’s Condolence Letter to Mr Janadas Devan, 7 December 2005, Singapore Government Press Release. Media Relations Division, Ministry of Information, Communications and the Arts (From National Archives of Singapore)
சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர். தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர் அ.வீரமணி, மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம். சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், 2019


To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA