நாடாளுமன்றத்தில் தமிழ்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

தமிழ், அதிகாரத்துவ மொழியாகப் பயன்படுத்தப்படும் உலகின் அரிய சில நாடாளுமன்றங்களுள் சிங்கப்பூர் நாடாளுமன்றமும் ஒன்று. சிங்கப்பூர் சுதந்திரம் அடைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே, பன்மொழிப் பயன்பாட்டின் தேவையை உணர்ந்த காலனித்துவகாலச் சட்டமன்ற உறுப்பினர்களே இதற்கு வழிகோலியவர்கள். 

தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளில் பேசலாம். நாடாளுமன்ற அவையில் உள்ள உறுப்பினர்களுக்காக உடனுக்குடனான ஏககால மொழிபெயர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வசதி, நாடாளுமன்றக் கூட்டங்களைக் காணவருவோருக்கும் உண்டு. இந்தப் பன்மொழி நடைமுறைக்கு 1956-இல் வித்திடப்பட்டது. அப்போதைய காலனித்துவ சிங்கப்பூரின் சட்டமன்றம் அதன் விவாதங்களை நான்கு மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் நடத்தலாம் என்று தீர்மானித்தது. சிங்கப்பூரின் அன்றைய முதலமைச்சர் டேவிட் மார்ஷல், “வாய்மொழி விவாதத்திற்கு, அவையின் மொழிகளாக ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் ஆகியவை பயன்படுத்தப்படலாம் என்று இந்த அவை கருதுகிறது; அந்த முன்மொழிவைச் செயல்படுத்துவதற்கான தேவைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க ஒரு பொறுக்குக் குழு நியமிக்கப்படவேண்டும்” என்றொரு தீர்மானத்தை 8 பிப்ரவரி 1956  அன்று முன்மொழிந்தார். மறுநாள், சிங்கப்பூர்க் காலனியின் முதல் சட்டமன்றத்தில் அத்தீர்மானம், ஆம்: 29, இல்லை: 0, வாக்களிப்பின்மை:3 என நிறைவேற்றப்பட்டது. 

தமிழ் சேர்த்துக்கொள்ளப்படுவதை ஆதரித்த ஆர். ஜும்மாபாய் பின்வருமாறு கூறினார்: “சபை முன் இருக்கும் தீர்மானத்தை ஆதரிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். நான் கூறியதைப் போல, இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள், நான் அவர்களை மதிக்கிறேன். இந்தச் சபையில் பன்மொழிப் பயன்பாடு பற்றிய விவாதம் முன்னைய சட்ட சபையில் 28 ஜனவரி 1955 அன்று இடம்பெற்றது. அந்தத் தீர்மானம் உள்நாட்டில் பிறந்த மிகவும் அறிவார்ந்த இந்தியரான திரு சி. ஆர். தசரதராஜால் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக திரு எம் பி டி நாயர், திரு சி ஆர் தசரதராஜ், திரு தியோ சான் பீ, திரு லிம் இயூ ஹாக், ஆர் ஜும்மாபாய் ஆகியோர் வாக்களித்தனர்.”

அதே நாளில் சட்டமன்றத்தில் பேசிய லீ குவான் யூ, 15 ஜனவரி 1954 அன்று சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டார்: ”நேற்று விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற ரெண்டல் அரசியலமைப்புச்சட்ட ஆணைக்குழுவின் முதல் பொதுக் கூட்டத்தில் பல மொழிகள் பேசப்படும் சட்டசபைக்கான தேவை எனத் தொழிற்சங்கவாதிகள் மூன்று மொழிகளில் கோரிக்கை எழுப்பினர். சட்டசபைக்கும் நகர மன்றங்களுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் மொழித் தடை, தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதிகள் மன்றங்களுக்கு வருவதைத் தடுக்கின்றது எனத் தொழிற்சங்கவாதிகள் வலியுறுத்தினர். தொழிலாளர்களின் மூன்று பேராளர்களான கே. எம். பேர்ன், எம். ஏ. கே. கருப்பையா, இஞ்சே இஸ்மாயில் பின் பாஜி ஆகியோர் மொத்த மக்கள் தொகையில் ஆங்கிலம் பேசும் பத்து விழுக்காட்டுச் சிறுபான்மையினரால் சிங்கப்பூர் ஆளப்படுகிறது என்று கூறினர்.” 

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் உடனுக்குடனான மொழிபெயர்ப்புச் சேவையை வழங்கும் சாத்தியம் குறித்து ஆராய 1956 டிசம்பரில் ஒரு பொறுக்குக் குழு அமைக்கப்பட்டது. குழு தனது பணியை 1957-இல் முடித்துக்கொண்டபோது, அது ஆங்கிலத்தை மைய மொழியாகக் கொண்ட முறையைப் பரிந்துரைத்தது. அம்முறையின் கீழ், மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கில மூல உரையை அல்லது தங்கள் சகாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கேட்டுத் தத்தம் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்ப்பை வழங்குவார்கள். எந்தவொரு மொழிபெயர்ப்பாளரும் நான்கு மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் சேவையை வழங்கும் திறனைப் பெற்றிராதலால், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு நிரந்தர மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டார்.  முதல் தமிழ் மொழிபெயர்ப்பாளராக எஸ் நாராயணன் நியமிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் (1959-1990) அப்பதவியை வகித்தார். தற்சமயம், நாடாளுமன்றக் கூட்டங்களின்போது ஒவ்வொரு மொழிப்பிரிவுக்கும் ஒருசில பகுதிநேர மொழிபெயர்ப்பாளர்களும் உதவுகின்றனர். உறுப்பினர்கள் பேசுவதை உடனுக்குடன் மொழிபெயர்ப்பதால் இத்தகையவர்களை ஏககால உரைபெயர்ப்பாளர்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு.          

நாடாளுமன்றத்தில், 1955 முதல் 1965 வரை, இந்திய/தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர் பட்டியலில் ஜே. எம். ஜும்மாபாய், ஆர். ஜும்மாபாய், மடை புத்தன் தாமோதரன் நாயர், ஏ. வி. வின்ஸ்லோ, ஏ. பி. ராஜா, ஜி. கந்தசாமி, ஜான் மாமன், எஸ். ராஜரத்தினம், எஸ். ராமசாமி, எஸ். டி. பாணி, எஸ். வி. லிங்கம், திருமதி தேவன் நாயர், பி. கோவிந்தசாமி, எஸ். ராஜூ ஆகியோர் அடங்குவர். அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, 20 ஜூலை 1959 அன்று சட்டமன்றத்தில் எஸ். ராமசாமி ஆற்றிய உரையே முதல் தமிழ் உரை எனத் தோன்றுகிறது. தமது உரையில், “முதலாவதாக என் தாய் மொழி தமிழில் பேச வாய்ப்பளித்த புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். நான் என் தாய் மொழியில் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று ராமசாமி கூறினார். 

சிங்கப்பூர், 9 ஆகஸ்ட் 1965 அன்று சுதந்திரம் பெற்றதுடன் சட்டசபை நாடாளுமன்றம் என்று பெயர் மாற்றம் கண்டது. பி. கோவிந்தசாமி  14 மார்ச் 1967 அன்று நாடாளுமன்றத்தில் முதன்முதலாகத் தமிழில் உரையாற்றினார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 23 பிப்ரவரி 1977 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது, அன்றையப் பிரதமர் லீ குவான் யூ பின்வருமாறு கூறினார்: “ம.செ.க (மக்கள் செயல் கட்சி)  1959-இல் ஆட்சிக்கு  வந்தபோது ஏற்பட்ட மாற்றங்களை உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் -- பன்மொழிக் கொள்கை, நான்கு அதிகாரத்துவ மொழிகள். மேலும் தமிழில் உரையாற்றுவதற்காக திரு பி. கோவிந்தசாமிக்கென்று ஒரு மொழிபெயர்ப்பாளரை அமர்த்தியுள்ளோம். இந்த மன்றத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களைவிட ஆன்சன் தொகுதி உறுப்பினருக்கு அதிகச் செலவாகிறது. அவரால் ஆங்கிலத்தில் பேச முடியும். ஆயினும் தமிழில் பேசும் தமது உரிமையைப் பயன்படுத்திக்கொள்கிறார். அந்த உரிமையை நான் மதிக்கிறேன், நாம் அவ்வாறுதான் செய்யவேண்டும். அது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது; மலாய் தேசிய மொழி, நான்கு அதிகாரத்துவ மொழிகள்”.     

கால ஓட்டத்தில், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஆங்கிலம் முதல் மொழியாக ஆகிவிட்டது என்றாலும், இந்திய/தமிழ்ச் சமூகத்திற்கு முக்கியமான விவகாரங்களைப் பற்றிய விவாதங்களின்போது, அவர்களில் சிலர் தமிழில் உரையாற்றுகின்றனர். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அதிபர் தொடக்கிவைத்து உரையாற்றியதற்கு நன்றி கூறும் போதும் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் வரவு செலவுத் திட்ட அறிக்கை விவாதத்தின்போதும் குறைந்தது ஓர் உரையாவது தமிழில் இடம்பெறும் போக்கைக் காணலாம்.



மேல்விவரங்களுக்கு
சிவானந்தம் நீலகண்டன். (October 29, 2021). நாளும் தமிழ் நாடாளுமன்றத்தில் – மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பன் நேர்காணல். Accessed on 1 August 2025. https://sivananthamneela.wordpress.com/2021/10/29/
Singapore. (1967). Parliament. Parliamentary debates: Official report. Singapore : Govt. Printer, 1965-. (Call no.: RSING 328.5957 SIN). https://www.parliament.gov.sg/parliamentary-business/official-reports-(parl-debates)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.








Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA