எஸ். தனபாலன் என அறியப்படும் சுப்பையா தனபாலன் (பி. 1937) தேசிய வளர்ச்சி, வெளியுறவு, வர்த்தக, தொழில்துறை, சமூக மேம்பாடு, கலாசாரம் முதலிய துறைகளுக்கான அமைச்சராகப் பதவி வகித்தவர். அரசுப் பொறுப்புகளுக்கு அப்பால், சிங்கப்பூர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நிதி, முதலீடு, போக்குவரவு சார்ந்த பெரும் தனியார் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) என்னும் இந்தியர்களுக்கான சுயவுதவி அமைப்பிற்குத் தலைவராகவும் பங்களித்தார்.
தனபாலன் சிங்கப்பூரில் பிறந்து பாய லேபாரிலுள்ள ஒரு கம்பத்தில் வளர்ந்தவர். ரங்கூன் ரோடு தொடக்கப் பள்ளியிலும் பிறகு, விக்டோரியா பள்ளியிலும் படித்த தனபாலன், கல்வியமைச்சின் ஆசிரியர் கல்வி நிதியுதவியைப் பெற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்கச் சென்றார். இறுதியாண்டில் ஆங்கில இலக்கியத்துக்குப் படிப்பை மாற்றிக்கொள்ளக் கல்வியமைச்சால் அறிவுறுத்தப்பட்டாலும், அன்றைய நிதியமைச்சர் கோ கெங் சுவீயின் தலையீட்டால், பொருளாதாரக் கல்வியையே தொடர்ந்தார். அத்துறையில், சிறப்புநிலைத் தேர்ச்சியுடன் இளநிலைப் பட்டம் பெற்றதும் நிதியமைச்சில் உதவிச் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்குப் பொருளியல் வளர்ச்சிக் கழக உருவாக்கத்தின் வரைவைத் தயாரிப்பதில் உதவிய தனபாலன், அக்கழகம் 1961-இல் நிறுவப்பட்டபோது அதன் முதல் தொழில்துறைப் பொருளியலாளரானார். சுமார் ஏழு ஆண்டுகள் அங்குப் பணியாற்றியபிறகு, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் 1968-இல் அரசாங்கம் சிங்கப்பூர் வளர்ச்சி வங்கியை நிறுவியபோது அதன் துணைத் தலைவராக நிமிக்கப்பட்டார். அங்கு ஏறக்குறைய 10 ஆண்டுகள் பணியாற்றி நிர்வாகத் துணைத்தலைவராக உயர்ந்தார்.
தனபாலன் வங்கி வேலையில் இருந்தபோதுதான், ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் அழைப்பின் பேரில் அரசியலில் நுழைந்தார். காலாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1976-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட தனபாலன் அத்தொகுதியின் உறுப்பினராக 1991 வரையிலும் பின்னர், 1991 முதல் 1996 வரை தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அக்காலகட்டத்தில், 1980 முதல் 1992 வரை, பல துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அமைச்சரவையிலிருந்து செப்டம்பர் 1992-இல் விலகிய தனபாலன், 22 பேர் மார்க்சியச் சதிகாரர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு 1987-இல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுடன் தமக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே விலகலுக்குக் காரணம் என்று பின்னாளில் விளக்கமளித்தார். ஆயினும், 1992-இல் அன்றைய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் லீ சியென் லூங் நோய்வாய்ப்பட்டதால் அவருடைய இடத்தை நிரப்பப் பிரதமர் கோ சோக் டோங்கின் வேண்டுகோளின்படி, தனபாலன் அவ்வாண்டின் டிசம்பர் மாதம் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்று 1993 வரை பொறுப்பு வகித்தார். பின்னர் 1996-ஆம் ஆண்டில், அரசியலிலிருந்து முற்றாக விலகினார்.
தனபாலனின் தனிப்பெரும் திறமைகளை நன்கறிந்த அரசு, அவரை வேறுபல தலைமைப் பொறுப்புகளில் அமர்த்தியது. சிங்கப்பூர் அரசு முதலீட்டு நிறுவனம், சிங்கப்பூர் வளர்ச்சி வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தெமாசெக் ஹோல்டிங்ஸ், சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனம் ஆகிய நிறுவனங்களிலும் சிண்டாவிலும் தலைவராகப் பணியாற்றினார். அதிபர் ஆலோசனை மன்றத்தில், அதற்குமுன் இல்லாத வகையில் ஆக அதிகமாக 18 ஆண்டுகள் (2004-22) பணியாற்றி, மூன்று அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கி ஓய்வு பெற்றார். மேலும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்திலும் நிரந்தர உறுப்பினராகச் சேவையாற்றியுள்ளார். சிண்டா அமைப்பில், ஜே.ஒய். பிள்ளைக்குப் பின் 1996-இல் தலைவர் பதவியேற்ற தனபாலன், 2002-ஆம் ஆண்டுவரை அப்பதவியில் நீடித்தார். கல்விதான் இந்தியர்களின் மேம்பாட்டிற்குச் சரியான வழி என்பதைப் பெரிதும் வலியுறுத்தினார்.
தனபாலன் தம் சேவைகளுக்காகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தொழிலாளர் தோழர் விருது (1979), கௌரவப் பதக்கம் (1992), சிங்கப்பூரின் பொதுச்சேவை விருதுகளில் ஆக உயர்ந்த விருதான முதல்நிலை தெமாசெக் விருது (2015) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ, 1988-இல், தனக்குப்பின் பிரதமர் வேட்பாளராகத் தனபாலனைக் கருதியதாகவும் பிறகு சிங்கப்பூரர்கள் ஓர் இந்திய இனப் பிரதமருக்கு இன்னும் தயாராகவில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பல்வேறு துறைகளில் பல்வேறு வழிகளில் கணிசமான பங்களித்தவர் என்பதற்காகத் தனபாலன் இன்றும் நினைவுகூரப்படுகிறார்.
மேல்விவரங்களுக்கு
கோ டாமி, திமோதி ஆகர், ஜிம்மி யாப், வெய் சியான் என்ஜி. சிங்கப்பூர்: தி என்சைக்ளோபீடியா. பதிப்புகள் டிடியர் மில்லட், தேசிய மரபுடைமைக் கழகம், 2006. (Call no. 959.57003 SIN -[HIS])
டான், ஜோவானா ஹுவாங் சூ. “எஸ். தனபாலன்.” சிங்கப்பூர் இன்போபீடியா. Published 4 December 2023. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=c3eb8a5c-9abe-4678-8304-61dc7eeb2368
தமிழ் முரசு." அதிபர் ஆலோசனை மன்றத்தில் பணியாற்றிய திரு தனபாலனுக்கு அதிபர் பாராட்டு." 5 December 2022. https://www.tamilmurasu.com.sg/singapore/story20220630-91497
அ.வீரமணி, மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம். சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் வெளியீடு. (Call no. 305.89481105957 SIN)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |