சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றம் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய அரசாங்க அமைப்பு. சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 1965-ஆம் ஆண்டிலிருந்து அமைப்பின் உருவாக்கமும் தொடங்கியது. 

அதிபர் மன்றம் அமைக்கும் யோசனை, சுதந்திரம் அடைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 1965-இல் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அரசமைப்பு ஆணையத்திலிருந்து உருவானது. அப்போதைய தலைமை நீதிபதி வீ சோங் ஜின் தலைமையிலான ஆணையம், இன, மொழி, சமய அடிப்படைகளில் சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கவும் அவற்றை சிங்கப்பூர் அரசியலமைப்பில் இடம்பெறச்செய்யவும் உருவாக்கப்பட்டது. 

ஆணையத்தின் இறுதி அறிக்கை முன்வைத்த பெரும்பாலான பரிந்துரைகள் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், பாரபட்சமான சட்டங்கள் இயற்றப்பட்டால் அதைத் தடுப்பதற்கு "அரசாங்க மன்ற" ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்கும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

பின்னர், 1969-ஆம் ஆண்டின் அரசமைப்புத் திருத்தங்களின் கீழ், அத்தகைய அரசாங்க அமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 1970-இல் அதிபர் மன்றம் அமைக்கப்பட்டது. மன்றம் 1973-இல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றம் என மறுபெயரிடப்பட்டது. 

மன்றத்தின் செயல்பாடுகள், அனைத்துச் சட்டங்களையும் ஆராய்ந்து அவை எந்தவொரு இன அல்லது சமய சமூகத்திற்கும் பாதகமில்லாமல் அமைவதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், நாடாளுமன்றம் அல்லது அரசாங்கம் பரிந்துரைக்கும் இன, சமய சமூகங்களைப் பாதிக்கும் அம்சங்களையும் ஆராய்தல், சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றம், மலாய் சமூகத்தினர் குழு, இந்திய, இதர சிறுபான்மைச் சமூகத்தினர் குழு ஆகியவற்றின் உறுப்பினர் நியமனங்கள் சார்ந்த ஆலோசனைகளை அதிபருக்கு வழங்குதல் ஆகியவையும் மன்றத்தின் பணிகளுள் அடங்கும். பிந்தைய இரண்டு குழுக்களும் குழுத்தொகுதி திட்டத்தின் ஒரு கூறு. அத்திட்டமும் சிங்கப்பூர்ச் சிறுபான்மைச் சமூகங்களின் அக்கறைகளைக் கருத்திற்கொள்கிறது. 

அதிபர் மன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை ஆலோசனையின் பேரில் அதிபரால் நியமிக்கப்படுகின்றனர். பொதுவாகத் தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும்/அல்லது மூத்த அமைச்சர்களோ அமைச்சரவையினரோ உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதிக்கின்றனர். இன, சமயச் சமூகங்களின் முக்கியப் பேராளர்களும் மன்றத்தில் இடம்பெறுகின்றனர். 

அதிபர் மன்றம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களிலும் பாகுபாடுகள் எவையும் இடம்பெற்றுவிடாமல் சரிபார்க்கிறது. இந்திய அல்லது தமிழ்ச் சமூகத்தை அளவுக்கு மீறிப் பாதிக்கும் சட்டங்கள் இருக்குமாயின், அச்சட்டத்தைப் பற்றிய பரிந்துரைகளை மன்றம் வழங்கும். தனிப்பட்ட சமூகப் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்ப்பதைவிட, பொதுவான நடைமுறை ரீதியில், சட்டம் குறித்த ஆலோசனைகள வழங்குவதே மன்றத்தின் பணி. 

எடுத்துக்காட்டாக, வேலைவாய்ப்பு நடைமுறைகள் தொடர்பான சட்டங்கள் இந்திய சிங்கப்பூரர்களைக் கடுமையாக பாதிக்கும் என்று கருதப்பட்டால், மன்றம் அத்தகைய சட்டங்களை மறுஆய்வு செய்து, இன அடிப்படையில் பாதகமின்றி அமைவதை உறுதிசெய்யும். பொது சமய விழாக்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களின் செயல்பாடுகள் (எ.கா.: இந்துக் கோயில்கள்) தொடர்பான சட்டங்கள் அல்லது கொள்கைள் இந்தியச் சமூகத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் நிறைவேற்றப்பட்டால் அவற்றையும் மன்றம் ஆராயலாம். அது மத சுதந்திரம் மதிக்கப்படுவதையும் எச்சமூகமும் பாரபட்சமின்றி நடத்தப்படுவதையும் உறுதி செய்கிறது. கல்வி தொடர்பான சட்டங்கள் தமிழ் கற்பிப்பதையோ இந்தியப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதையோ பாதிக்கும் எனக் கருதப்பட்டால் மன்றம் அவற்றையும் ஆராயும். 

சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றம் ஓர் அரசமைப்புச் சட்டக் கவசமாகச் செயல்படுகிறது. சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்பிற்குள் இந்திய, தமிழ்ச் சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மைக் குழுக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. 

 

மேல்விவரங்களுக்கு
“Other Presidential Councils.” President of the Republic of Singapore. Accessed on 1 August 2025. https://www.istana.gov.sg/Presidents-Office/Other-Presidential-Councils
“Presidential Council for Minority Rights is formed.” National Library Board Singapore. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=84e97e5f-1d0b-4f1f-84f7-b69f758c84e4
Tan, Yee Lin. “Presidential Council for Minority Rights.” Singapore Infopedia. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=98b489aa-a067-4c08-95ea-7ba69fb42e8e 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA