இன, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

இன, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்துடன் இணைந்து, உலகின் ஆக அதிக சமயப் பன்மைத்துவமுள்ள நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூரில், இன, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கத்தின் முக்கிய அமைப்பாகச் செயல்படுகிறது. மன்றம், முதலில் சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றமாக, 9 நவம்பர் 1990 அன்று நிறைவேற்றப்பட்ட சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது. புண்படுத்தக்கூடிய, ஆத்திரமூட்டும் செயல்களால் ஏற்படும் சமயம் சார்ந்த பதற்றங்களைத் தணிக்கவும் மோதல்களைத் தடுக்கவும், சமயங்களைப் பற்றிய புரிதல், நிதானம், சகிப்புத்தன்மை, மரியாதை ஆகியவற்றை மேம்படுத்தவும் அந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

அந்நோக்கங்களுக்கு ஏற்ப, உள்துறை அமைச்சரோ நாடாளுமன்றமோ முன்வைக்கும் சமய நல்லிணக்கப் பேணல் சார்ந்த விஷயங்களைப் பரிசீலித்து அறிக்கை அளிப்பதற்கான ஆலோசனைக் குழுவாக மன்றம் உருவாக்கப்பட்டது. எந்தவொரு சமயக்குழு அல்லது அமைப்பின் தலைவர்களோ உறுப்பினர்களோ சமய சச்சரவுகளைத் தூண்டினாலோ சமய நம்பிக்கையைப் பரப்புவதையோ கடைப்பிடிப்பதையோ சாக்காகவைத்து அரசியல், கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவர்களுக்குத் தடை உத்தரவுகளை மன்றம் பரிந்துரைக்கும். இறுதி முடிவு அதிபரின் கையில் இருப்பதால் தனிநபருக்குப் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை அவரே உறுதிப்படுத்த வேண்டும். மன்றத்தின் தலைவரும் உறுப்பினர்களும் அதிபரால் நியமிக்கப்படுகின்றனர். மூன்றாண்டுகள் சேவையாற்றும் மன்றம் பொதுவாக மூத்த நீதிபதியைத் தலைவராகவும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். உறுப்பினர்களுள் பொதுமக்கள் சிலரும் அடங்குவர். தமிழர் உள்ளிட்ட இந்தியச் சமூகம் சமயப் பன்மைத்தன்மை மிகுந்தது. இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்களை உள்ளடக்கியது. சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம், இந்தியச் சமூகத்தின் சமயக் குழுக்களுக்குள்ளாகவோ பிற இனத்தவர்களுடனோ ஏற்படும் மோதல்களை விசாரிக்கும். எடுத்துக்காட்டாக, தைப்பூச ஊர்வலத்தில் இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதால் எழும் இரைச்சலைக் கட்டுப்படுத்துவது சார்ந்த கடந்தகால விவாதங்களைக் குறிப்பிடலாம். சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் அதேவேளையில் பண்பாட்டு, சமய நடைமுறைகளைப் பேணுவதற்கும் மன்றம் பாடுபடுகிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் பல்வேறு மதக் குழுக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டுவதாகவோ நல்லிணக்கத்தைக் குலைப்பதாகவோ கருதப்பட்டால் அவர் கடுமையாக விசாரிக்கப்படுவார். எடுத்துக்காட்டாக, இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய சமயப் போதகர் சிங்கப்பூரில் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிராகப் பேசியதால் அவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் முதலிய சமயக் குழுக்களுக்கு இடையேயும் இந்தியச் சமூகத்திற்கும் பிற சமூகங்களுக்கு இடையேயும் உருவாகும் சமயப் பதற்றங்களை நடுநிலையாளராக இருந்து தணிக்கிறது. இந்தியச் சமூகம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களிலும் சமய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எந்தவொரு பிரச்சினையையும் நியாயத்துடனும் பாரபட்சமின்றியும் தீர்க்க மன்றம் உறுதிபூண்டுள்ளது. இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் 2025 என்னும் புதிய சட்டம் 2025-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைப் பராமரிக்கவும் இன, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம் என்னும் புதிய அமைப்பை உருவாக்கவும் அச்சட்டம் வழிவகுத்தது. புதிய மன்றம், இனம், மதம் என்னும் இரு துறைகளையும் ஒருங்கே கவனிக்கிறது.  மேலும், அரசாங்கம் பிறப்பிக்கும் தடை உத்தரவுகளை மறுபரிசீலனை செய்து அவற்றின் பொருத்தம் குறித்து ஆலோசனை வழங்க மன்றத்திற்கு அதிகாரம் உண்டு. எனினும், மன்றத்தின் பரிந்துரைகளின்படி செயல்படலாமா வேண்டாமா என்பதை அதிபரே முடிவு செய்வார்.



மேல்விவரங்களுக்கு
“Presidential Council for Minority Rights.” President of the Republic of Singapore. Accessed 1 August 2025. https://www.istana.gov.sg/Presidents-Office/Other-Presidential-Councils
Maintenance of Religious Harmony. Singappore: National Library Board, 26 December 1989. https://eservice.nlb.gov.sg/flipviewer/data/booksg_publish/b/bea6d0b6-acfb-4d60-828d-c53b5c61814a/web/html5/index.html
Lim, Jean. “Maintenance of Religious Harmony Bill.” Singapore Infopedia. Accessed 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=3edc3e5f-7333-4ae9-ba2d-7c355c4a1cee
“Presidential Council for Religious Harmony is formed.” National Library Board Singapore. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=e787b4de-c6b7-4d59-9650-a4d050d892d3
“Background on the Presidential Council for Religious Harmony.” Ministry of Home Affairs Singapore. Accessed on 1 August 2025. https://www.mha.gov.sg/docs/default-source/media-room-doc/annexf6bc317198234fafaf873c1f66fd7d63.pdf?sfvrsn=1f978426_0
Menon, Malavika. “Changes Proposed to Maintenance of Religious Harmony Act: 5 Things to Know about the Law.” The Straits Times, 2 September 2019. https://www.straitstimes.com/politics/changes-proposed-to-maintenance-of-religious-harmony-act-5-things-to-know-about-the-law
David Sun “Public Invited to Give Feedback on Newly Proposed Racial Harmony Laws.” The Straits Times, 16 April 2024. https://www.straitstimes.com/singapore/public-invited-to-give-feedback-on-newly-proposed-racial-harmony-laws
PM Lawrence Wong. “DPM Lawrence Wong at the 75th Inter-Religious Organisations’ 75th Anniversary Celebration.” Prime Minister’s Office Singapore, 23 January 2024. https://www.pmo.gov.sg/Newsroom/DPM-Lawrence-Wong-at-the-75th-Inter-Religious-Organisations-75th-Anniversary-Celebration
Wong Pei Ting “Considerable value in having president, new council safeguard race-based restraining orders: Shanmugam.” The Straits Times, 5 February 2025. https://str.sg/CYkh
Goh Yan Han. “New law to protect racial harmony passed.” The Straits Times, 4 February 2025. https://str.sg/oVh86

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.

 



Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA