அப்சரஸ் டான்ஸ் கம்பனி



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

அப்சரஸ் டான்ஸ் கம்பெனி தான் வழங்கியுள்ள இந்திய நடனப் படைப்புகளுக்காக, சிங்கப்பூரில் தொட்டுணர முடியாத பண்பாட்டு மரபுடைமையை ஊக்குவிப்பதற்கும் பரப்புவதற்கும் வழங்கப்படும் தேசிய மரபுடைமைக் கழகத்தின் விருதைப் பெற்றுள்ளது. முதன் முதலாக 2020-இல் அத்தகைய விருதுகள் வழங்கப்பட்டபோது அவற்றுள் ஒன்றைப் பெற்ற பெருமை அதற்குண்டு. அந்நிறுவனமும் அதன் தலைவர்களும் சிங்கப்பூரில் கலைத்துறையில் முக்கியப் பங்காற்றியவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

அப்சரஸ் ஆர்ட்ஸ் என்று 1977-இல் எஸ். சத்தியலிங்கம், அவரது மனைவி நீலா சத்தியலிங்கம் ஆகியோரால் நிறுவப்பட்ட அமைப்பு 2024-இல் தன் பெயரை அப்சரஸ் டான்ஸ் கம்பனி என்று மாற்றிக்கொண்டது. தம்பதிகள் இருவரும் புகழ்பெற்ற கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள். அவர்களின் மறைவுக்குப் பிறகு, 2005-ஆம் ஆண்டு முதல் கலை, நிர்வாக இயக்குநரான அரவிந்த் குமாரசாமி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அது ஒரு பதிவுசெய்யப்பட்ட லாப நோக்கற்ற நிறுவனம். இது ஆற்றும் பணிகளுக்கு அங்கீகாரமாகத் தேசியக் கலை மன்றம் வருடாந்திர மானியங்களை அளிக்கிறது.


அப்சரஸ் கலைப்படைப்புகளை வழங்குவதோடு கலைக்கல்விக் கழகமாகவும் செயல்படுகிறது. இளம், வளரும் சிங்கப்பூர்க் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிப் புதிய ரசிகர்களை உருவாக்கும் முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட அதன் மேடைத் தயாரிப்புகளுள் ‘நிர்மாணிக்கா - கட்டடக்கலையின்அழகு’, ‘ஆஞ்சநேயம் - அனுமனின்ராமாயணம்’ ஆகியவற்றோடு 2023-இல் ‘அரிசி’என்ற படைப்பும் அடங்கும்.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துலக அளவில் நல்ல வரவேற்பைப் பெறுவதுடன் இந்தியா, ஐரோப்பா, ஆசிய பசிபிக் வட்டாரம் முழுவதும் பல விழாக்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. தொழில்முறை அளவிலான மேம்பாட்டு முயற்சியான இந்திய நிகழ்கலைகள் மாநாடு. முன்னர் Dance India Asia Pacific என அறியப்பட்டது), 2011-இல் தொடங்கப்பட்டு, உள்ளூர் இந்திய நடனச் சமூகத்தை இலக்காகக்கொண்டு இயங்குகிறது. அது தொழில்முறை நடனக் கலைஞர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகளை நடத்துவதுடன் அமைப்பில் சேர்ந்து முழுநேரமும் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. இந்திய நிகழ்கலைகள் மாநாடு, 2020 முதல், நேரடியாகவும் இணையவழியாகவும் தொடர்கிறது. இதில் சிறந்த பேச்சாளர்கள் ஆழமான தலைப்புகளில் வழங்கும் விரிவான பயிலரங்குகளும் அடங்கும். ஐ.பி.ஏ.சி. ஆஸ்திரேலியா என்னும் திட்டம், அங்குள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2021-இல் தொடங்கப்பட்டது. இளம் தலைமுறையினரைப் பயிற்றுவிக்கவும் வளர்க்கவும் பள்ளிகளிலும் சமூக நிலையங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தி வருவதோடு, பாலர்களுக்கெனச் சிறப்பு நடன வகுப்புகளையும் அப்சரஸ் நடத்துகிறது.

மேலும், அப்சரஸ் தொடர்ந்து சமூகத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்வதற்காக, பொது நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அவற்றுள் ‘வெள்ளிக் கலை விழா’, ‘Got to Move’, ‘அக்கம்பக்கத்தில் கலைகள்’ ஆகியவையும் ‘விற்பன்னர் வகுப்புகள்’ பொதுப் பயிலரங்குகள் ஆகியவையும் அடங்கும். அந்நிறுவனம், 2006-ஆம் ஆண்டு முதல் எஸ்ப்ளனேட்  எனப்படும் அரசாங்கக் கலை நிறுவனத்தோடு இணைந்து, பத்துக்கும் மேற்பட்ட சொந்த நடனத் தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. சில நிகழ்ச்சிகள் தொழில்நுட்பப் புதுமைகளோடுகூடிய புத்தாக்க முயற்சிகளாகவும் சில தயாரிப்புகள் நேரடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாதவர்களும் இணையவழியில் பங்கேற்க ஏதுவாகவும் அமைந்தன.

அப்சரஸ் 2024-இல் அகம் என்னும் நூலை வெளியிட்டுத் தன் முக்கியமான படைப்புகளை ஆவணப்படுத்தியது. அந்நூலில் நடனம் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் அடங்கியுள்ளன. அதே ஆண்டு, ‘அவை’ என்னும் தலைப்பில் ஒரு மின்தளத்தையும் உருவாக்கியது. அத்தளத்தில், அப்சரஸ் தன் கலைஞர்கள் மட்டுமின்றிப் புகழ்பெற்ற இந்தியக் கலைஞர்களையும் இடம்பெறச் செய்துள்ளது.



மேல்விவரங்களுக்கு
Kumarasamy, Aravinth. Aham: From the Creative Mind to the Stage. Singapore: Apsaras Arts Ltd, 2024
Metamorphosis, compiled and edited by Vidhya Nair. Singapore: Apsaras Arts Ltd, 2021
Thavarajah, Mohanapriyan. Apsaras: Temple Dance of Apsaras. Singapore: Apsaras Arts Ltd, 2021
Thavarajah, Mohanapriyan. Prayogam: Applying the Techniques of Bharatanatyam. Singapore: Apsaras Arts Ltd, 2022
“Watch the finest Indian performing arts productions from artists across the globe.” Avai. Accessed on 1 August 2025. https://avai.video
“Home.” Apsaras Dance Company. Accessed on 1 August 2025. https://www.apsarasarts.com

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி 

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA