சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் சிங்கப்பூரின் முக்கிய பண்பாடுகளுக்கிடையே பாலம் அமைக்கும் பணிக்காகத் தொடங்கப்பட்டது. பண்பாட்டுப் பரிமாற்றங்களுக்காகவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ள சிங்கப்பூர் அமைப்புகள் சிலவற்றுள் இதுவும் ஒன்று. மேலும், தமிழர் தம் சொந்தப் பண்பாட்டைப்பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ளவும் மையம் பல நிகழ்வுகளையும் திட்டங்களையும் முன்வைக்கிறது. சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் 6 பிப்ரவரி 2019 அன்று தொடங்கப்பட்டது. சரியாக 200 ஆண்டுகளுக்குமுன் அதே நாளில்தான் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்  ‘சிங்கப்பூர் ஒப்பந்தம்’ என்னும் ஆவணத்தில் கையெழுத்திட்டு இந்தத் தீவைக் கைப்பற்றினார். சிங்கப்பூரில் தமிழர்களின் தொடர்வரலாறு அன்றுதான் துவங்கியது. பின்னர், 2 ஜூன் 2021 அன்று மையம் சட்டப்பூர்வமாக உத்தரவாதத்திற்குட்பட்ட நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. இது மக்களின் முன்னெடுப்பாக எழும்பிய, லாபநோக்கற்ற, மெய்நிகர் அமைப்பு. துடிப்புமிக்க குடிமக்களின் தொண்டூழிய உணர்வே அதன் உந்துசக்தி என்கிறது அமைப்பு. உரைகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள், மின்வளங்கள் என மையத்தின் நிகழ்ச்சிகளும் திட்டங்களும் பல்தரப்பட்டவை. சிங்கப்பூரின் வேறுபட்ட பண்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் பேணவும் உதவும் வகையில் இவற்றை முன்னெடுக்க, சீன, மலாய் சமூகங்களோடும் தமிழரல்லாத ஏனைய இந்தியச் சமூகங்களோடும் மையம் கைகோத்து வருகிறது.

புது வளங்களை உருவாக்கும் முயற்சியில், மையம் மேற்கொண்ட ஆக முக்கியத் திட்டம் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம். தேசிய நூலக வாரியத்தோடு இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மின்வளம், 2 ஆகஸ்ட் 2025 அன்று, சிங்கப்பூரின் 60-ஆவது சுதந்திர விழாவைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது. இக்கலைக்களஞ்சியம், தமிழிலும் ஆங்கிலத்திலும், தொடர்ந்து விரிவாக்கப்படவும் சரிபார்க்கப்படவும் ஏற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். மின்வளங்களை உருவாக்குவதில் தமிழ் மின்மரபுடைமைக் குழு என்னும் பெயரில் இயங்கிய அமைப்பே சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்திற்கு முன்னோடி. அந்த அமைப்பை உருவாக்கியவர்களே இந்த அமைப்பையும் தொடங்கினார்கள். தமிழ் மின்மரபுடைமைக் குழு, 2015-இல் கொண்டாடப்பட்ட சிங்கப்பூர்ச் சுதந்திரப் பொன்விழாவின்போது, தமிழ்ச் சமூகத்தின் அன்பளிப்பாகச் சில பண்பாட்டு மின்வளங்களை உருவாக்குவதற்கென அமைக்கப்பட்டது. தற்போது சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக அது இணைந்துவிட்டது. மையத்தின் மின்தளத்திலும் சமூக ஊடகங்களிலும், அமைப்பின் அடிப்படைத் தகவல்களோடு, பண்பாட்டு ஊடாடல்களைப்பற்றிய செய்திகள், அனுபவங்கள், ஆழ்ந்த கருத்துகள் முதலியவற்றையும் காணலாம்.



மேல்விவரங்களுக்கு
Centre for Singapore Tamil Culture. Accessed 1 August 2025. https://www.singaporetamil.org
Centre for Singapore Tamil Culture. Instagram. Accessed 1 August 2025. https://www.instagram.com/singapore.tamil/
Centre for Singapore Tamil Culture. Facebook. Accessed 1 August 2025. https://www.facebook.com/sgtamilorg 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA