சிங்கப்பூர்ச் சூழலில், கணினிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு 1980-களின் தொடக்கத்தில் முக்கியத்துவம் பெற்றது. முன்னர் கணினிகளில் தமிழ்ப் பயன்பாட்டிற்குச் சில தனிநபர் முயற்சிகள் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் பன்மொழிக் கொள்கையால் கணினிகளிலும் பின்னர் இணையத்திலும் தமிழ்ப் பயன்பாடு கட்டாயத் தேவையானது. இது மின்னிலக்க உலகத்திற்குள் தமிழ் செல்வதற்கு அதிகாரப்பூர்வ உந்துதலை அளித்தது. அதே சமயம், இந்தியாவில் உள்ள சில அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலரும் கணினிகளிலும் இதர மின்னிலக்கச் சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்த முயன்றனர். விசைப்பலகை போன்ற உள்ளீட்டுச் சாதனங்கள் இந்தப் புதிய வளர்ச்சியின் முக்கிய விளைவுகளாகும்.
சிங்கப்பூரில், பொதுப் பயன்பாட்டிற்கான தமிழ் விசைப்பலகையை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க முதல் முயற்சிகளை மேற்கொண்ட பெருமை தேசியக் கல்விக் கழகத்தின் தமிழ் விரிவுரையாளர் நா. கோவிந்தசாமி, தமிழ் விரிவுரையாளர் ஆர். கலைமணி, அப்போது சிங்கப்பூரில் தங்கியிருந்த மலேசியத் தொழில்நுட்ப நிபுணர் முத்து நெடுமாறன் ஆகியோரைச் சேரும். அவர்கள் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து, சுதந்திரமாகச் செயல்பட்டு, கணினி சொல் செயலாக்கத் திட்டங்களில் தமிழைச் சேர்த்தனர். கோவிந்தசாமியின் ‘கணியன்’ தமிழாசிரியர்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டில், கணியனின் ஆரம்பப் பதிப்புகளின் கூறுகள் ‘தமிழ் 99’ விசைப்பலகையில் இணைக்கப்பட்டன. இது தமிழ்நாடு அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ விசைப்பலகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, கலைமணியின் ‘தாரகை’ விசைப்பலகை தோன்றிய சிறிது காலத்திலேயே மறைந்துபோனது. நெடுமாறன் 'முரசு அஞ்சல்' அமைப்பை உருவாக்கினார். இதில் விசைப்பலகைகளின் தொகுப்பு மட்டுமின்றி, முரசு எழுத்துருக்கள், அடிப்படைத் தன்னியக்கத் திருத்தத் திறன்கள், ஆங்கிலத்திலிருந்துத் தமிழுக்கு ஒலிபெயர்ப்பு போன்ற பயன்பாடுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அமைப்பாகும். முரசு அமைப்பு 2009-இல் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முரசு பயன்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான மலாய், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் கவிதைகள் இடம் பெற்றிருந்தன. இந்நூல் 1995-ஆம் ஆண்டு அப்போதைய சிங்கப்பூர் அதிபரான ஓங் டெங் சியோங்கால் இணையப் பதிப்பாக வெளியிடப்பட்டது. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியரான முனைவர் டான் டின் வீ, 1990-களின் முற்பகுதியில் சிங்கப்பூருக்கு இணையத்தைக் கொண்டுவந்து 1995-இல் அதை வணிகமயமாக்கிய குழுவில் அங்கம் வகித்தார். அவர் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் இணைய ஆராய்ச்சி & வளர்ச்சிப் பிரிவில் பன்மொழி இணையத் திட்டத்தை அமைத்தார்; இணையத்தளங்களில் பல மொழிகளை ஆதரிக்கும் பணியை மேற்கொண்டார். தமிழ் தெரியாத டான், கோவிந்தசாமியின் உதவியை நாடி, இருவரும் இணைந்து சிங்கப்பூரில் இணையத்தில் தமிழைப் புகுத்த உதவினார்கள். அவர்களின் முன்னோடி முயற்சிக்காக, கோவிந்தசாமியும் டானும் சிங்கப்பூரில் “தமிழ் இணையத் தந்தைகள்” என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்கள். இணையத்தோடு, மின்னஞ்சலிலும் தமிழ் பயன்படுவதற்கான கருவிகளை 1996-ஆம் ஆண்டு வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின்னர், அடுத்த ஆண்டே உலகின் முதல் தமிழ் இணைய மாநாடான தமிழ்நெட்97 என்னும் நிகழ்வைத் தோற்றுவித்தனர்.
உலகளாவிய வலைத்தளம், மின்னஞ்சல் ஆகியவற்றில் தமிழ்ப் பயன்பாட்டைச் செயல்படுத்தும் கருவிகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், 1998-இல், இணைய ஆராய்ச்சி & வளர்ச்சிப் பிரிவு, Domain Name என்று சொல்லப்படும் இணையப்பெயர்களைப் பல மொழிகளிலும் அறிமுகப்படுத்தியது. தமிழைப் பொறுத்தமட்டில், .COM என்பதற்கு .வணி, .ORG என்பதற்கு .அமை போன்ற தமிழ் இணையப் பெயர்கள் இந்த முயற்சியால் நடைமுறைக்கு வரத் தொடங்கின. அதே காலக்கட்டத்தில், சிங்கப்பூர் அரசாங்கம் இணையத்தில் ஆங்கிலம் அல்லாத மொழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வந்தது. அதன் தொடர்பாக, தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் மொழி சார்ந்த வழிகாட்டுக் குழுக்களை அமைத்தது. தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு, இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை வளர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டது.
தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு அதிகாரப்பூர்வமாக 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ரவீந்திரன் தலைவராகவும் கொள்கை ஆய்வுக் கழகத்தின் உறுப்பினர் அருண் மகிழ்நன் இணைத் தலைவராகவும் இருந்தனர். கோவிந்தசாமியும் இக்குழுவில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி காலமானார். குழுவின் பணிகள் நான்கு துறைகளில் மேற்கொள்ளப்பட்டன: உள்ளடக்க வளர்ச்சி, வர்த்தக, தொழில்நுட்ப வளர்ச்சி, பொதுமக்களுக்கான கல்வி, உலகளாவிய கட்டமைப்பு வளர்ச்சி. இத்தகைய முயற்சிகளின் நீண்டகால நோக்கம் சிங்கப்பூரின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, புலம்பெயர் தமிழ் மக்களுக்கான தமிழ் இணைய மையமாக செயல்படுவதும் ஆகும். உள்ளூர்த் தமிழ்மொழி உள்ளடக்க வளர்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி நிலைகளில் உள்ள தமிழாசிரியர்களின் ஆற்றலையும் முயற்சிகளையும் ஒருங்கிணைத்து, பாடத்திட்டம் தொடர்பான நூற்றுக்கணக்கான பக்கங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும்கூட இலவசமாகவும் எளிதாகவும் பயன்படுத்த அக்குழு வழிவகுத்தது. தமிழில் இணைய உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சமூக நிலையங்களில் இணையப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் இணையத்தளம் சுமார் 100 பள்ளிகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் 700-க்கும் மேற்பட்ட பெற்றோர் பயிற்சிகளில் கலந்துகொண்டனர். மேலும், மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்வதற்காக, நாடளாவிய தகவல் தொழில்நுட்பப் போட்டிகளுக்கு ஆதரவு அளித்தது.
தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுவின் மற்றொரு பணி மின்-வர்த்தகத்தை வணிக நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன்மூலம் தகவல் தொழில்நுட்ப உலகில் சிங்கப்பூரின் போட்டித்தன்மையை மேம்படுத்துவது ஆகும். இதன் தொடர்பில், இக்குழு தமிழுக்கான ஒளிவழி எழுத்துணரி என்னும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தது. மின்-வர்த்தகம் ஆரம்ப நிலையில் இருந்தபோது, ‘லிட்டில் இந்தியா’ வணிகர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 2000-ஆம் ஆண்டில் கருத்தரங்குகளை நடத்தியது. இணையப் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான தேசியத் திட்டத்திற்கேற்ப, தமிழ்ச் சமூகம் அதிக அளவில் இணையத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இக்குழு பல முயற்சிகளை மேற்கொண்டது. மின்-வாழ்க்கை முறையின் பலன்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய தேசிய நிகழ்வுகளில் இணையத்தைப்பற்றித் தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ்ச் சமூகம் கற்றுக்கொள்ளவும், பயிற்சி பெறவும் வசதி செய்துகொடுத்தது. சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் (சிண்டா) இணைந்து, இக்குழு தகவல் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகளுக்குப் பதிவுசெய்வதையும் இணையத்தில் தமிழ் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் தகவல்தொழில்நுட்ப விழாக்களுக்கு ஏற்பாடு செய்தது.
தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு ஒரு தன்னார்வ சமூக அமைப்பாக, சிங்கப்பூர் அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நன்மதிப்பையும் பெற்றது. எனவே, 2000-ஆம் ஆண்டில் மூன்றாவது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்த சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம், உலகளாவிய தமிழ் இணைய அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று சிங்கப்பூர் முன்மொழிந்தபோது, மாநாட்டில் பங்கேற்றவர்கள், அந்த அமைப்பின் தலைமையிடத்தைச் சிங்கப்பூரில் நிறுவவும் ஒரு சிங்கப்பூரரை நிர்வாக இயக்குநராக்கவும் முடிவுசெய்தனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), 24 ஜூலை 2000 அன்று சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. இந்தியாவைப் பிரதிநிதித்த பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் முதல் தலைவராகவும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த அருண் மகிழ்நன் முதல் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர்.
சீன, மலாய், தமிழ் இணைய வழிகாட்டுதல் குழுக்களின் அடித்தளப் பணிகள் முடிவடைந்ததாகக் கருதப்பட்டதால், தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் அக்குழுக்களை முடிவுக்குக் கொண்டுவந்தது. அரசு வேண்டுகோளின்படி, தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு அதன் பொறுப்புகளையும் எஞ்சியிருந்த நிதியையும் தகவல், தொடர்பு, கலை அமைச்சின்கீழ் புதிதாக நிறுவப்பட்ட வளர்தமிழ் இயக்கத்திடம் ஒப்படைத்தது.
மேல்விவரங்களுக்கு
Jayakumar, S. (1997, May 17). Speech by Prof S Jayakumar, Minister for Law and Foreign Affairs, at the Opening Ceremony of Tamilnet ‘97 International Symposium for Tamil Information Processing and Resources on the Internet Jointly Organised by National University of Singapore (NUS) and National Institute of Education (NIE)/Nanyang Technological University (NTU) at the Auditorium, Computer Centre, NUS on Saturday, 17 May 1997 at 10.00am. National Archives of Singapore. Accessed on August 1, 2025. https://www.nas.gov.sg/archivesonline/data/pdfdoc/1997051701/sj19970517s.pdf
Tamil Language Council. (2005, January 12). TISC has helped the Tamil Community to be Infocomm Savvy. National Archives of Singapore. Accessed on August 1, 2025. https://www.nas.gov.sg/archivesonline/data/pdfdoc/2005011295.htm
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |