க.து.மு. இக்பால் (பி. 1940) சிங்கப்பூரின் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை முன்னிட்டுத் தொடக்கக்காலத்திலேயே புதுக்கவிதைகளை ஆதரித்த சிலருள் ஒருவர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான இலக்கியப் பயணத்தில் 1000-க்கும் மேற்பட்ட மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறார் பாடல்களை எழுதியவர். கலைத்துறையில் ஆக உயரிய விருதான கலாசாரப் பதக்கத்தைப் பெற்றவர்.
இக்பால் இந்தியாவிலுள்ள கடையநல்லூரில் பிறந்தார். குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிப் படிப்பு தொடக்க நிலையிலேயே தடைபட்டது. சிங்கப்பூருக்கு 1951-இல் அழைத்து வரப்பட்டவர், மெக்ஸ்வெல் ரோட்டிலிருந்த உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் சில மாதம் கல்வி பயின்றார். பிறகு, 1953-இல், கேட்டி & பேட்மன் கணக்காய்வு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
சுமார் பத்தாண்டுகள் கழித்து, முதியோர் கல்விக் கழகத்தின் வழியாகக் கல்வியைத் தொடர்ந்தவர், பின்னர் கெண்டோன்மண்ட் தொடக்கப்பள்ளியிலும் கான் எங் செங் பள்ளியிலும் கல்வி கற்று, 1967-இல் பள்ளி இறுதித் தேர்வை முடித்தார். அதே காலக்கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழாசிரியர் ஒருவரிடம் தமிழையும் பயின்றார். சிங்கப்பூர் இண்டர்நேஷனல் மெர்ச்சண்ட் பேங்கர்ஸ் நிறுவனத்தில் 1973-இல் பங்குப் பதிவாளராக வேலைக்குச் சேர்ந்தவர், அதே நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றி 1998-இல் மேலாளராக ஓய்வுபெற்றார்.
இக்பாலின் இலக்கியப் பயணம் தொடங்கியது தமிழ் முரசு நாளிதழ் 1950-களில் தொடங்கிய வெண்பாப் போட்டிக்காக யாப்பிலக்கணம் பயின்றபோதுதான். மரபுக்கவிதைகளை 1956-இல் எழுதத் தொடங்கியவர், 1957-இல் கவிஞர் கடையநல்லூர் ஜமீலாவுடன் இணைந்து உமறுப்புலவர் நினைவு மலரை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 1960-களில், தமிழ் முரசு, மலாயா நண்பன், தமிழ் நேசன் நாளிதழ்களில் கவிதைகள் எழுதியதோடு வானொலிக் கவியரங்கத்திலும் பங்கேற்றார். சிங்கப்பூர் வானொலியில் 1970-களில் ‘பாடிப் பழகுவோம்’ சிறுவர் நிகழ்ச்சியின் வழியாகச் சிறார் பாடலாசிரியராக அறிமுகமாகி ஏறக்குறைய 200 பாடல்களை எழுதினார். அவரது தலைமுறையச் சேர்ந்த கவிஞர்கள் மரபுக் கவிதையைப் புதுக்கவிதை அழித்துவிடும் எனக்கருதி எதிர்த்தபோது, முதலில் அக்கருத்தை ஏற்ற இக்பால், விரைவில் அத்தகைய போக்கு இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என்றெண்ணிப் புதுக்கவிதையை ஆதரித்தார். தாமும் எழுதத்தொடங்கினார். கவிதையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருக்குத் தொடர்ந்து வழிகாட்டியாகச் செயல்பட்டுவருகிறார்.
தேசியக் கலை மன்றம் 2000-இல் வெளியிட்ட சந்தங்கள் சிங்கப்பூர் கவிதைகள் என்னும் தொகுப்பு நூலின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் தேசியக் கலை மன்ற இலக்கியக் குழு உறுப்பினராகவும் (2004-2006) பணியாற்றினார். மேலும், அரசாங்க அமைப்புகள் நடத்தும் பல்வேறு இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதய மலர்கள் (1975), அன்னை (1984), முகவரிகள் (1990), வைரக் கற்கள் (1995), கனவுகள் வேண்டும் (2000), காகித வாசம் (2003), காவின் குரல்கள் (2022) என 15-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இக்பாலின் கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, ஈவினிங் நம்பர் & அதர் பொயம்ஸ் (2008) என்ற தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், “காலை”, “நீலக்கண்ணாடி”, “கவிதை மூச்சு” ஆகிய கவிதைகள் சிங்கப்பூரில் பள்ளிப் பாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. “தண்ணீர்” கவிதை 1995-ஆம் ஆண்டு சிங்கப்பூர்ப் பெருவிரைவு ரயில் வண்டிகளில் வரையப்பட்டிருந்தது. அதே கவிதை ஜெர்மனியில் நடைபெற்ற எக்ஸ்போ 2000 கண்காட்சியிலும் இடம்பெற்றது.
மோன்ட் பிளாங்க் இலக்கிய விருது (1996), தமிழவேள் இலக்கிய விருது (1999), தென்கிழக்காசிய எழுத்து விருது (2001), கலாரத்னா விருது (2004), கலைத்துறையில் ஆக உயரிய விருதாகிய கலாசாரப் பதக்கம் (2014) எனப் பல விருதுகளைப் பெற்ற அவருக்கு மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி வாழ்நாள் சாதனையாளர் விருதையும் (2019) வழங்கிச் சிறப்பித்தது.
மேல்விவரங்களுக்கு
Esplanade - Theatres on the Bay. “KTM Iqbal,” Esplanade Offstage, 24 November 2021. https://www.esplanade.com/offstage/arts/k-t-m-iqbal
Mahizhnan, Arun. KTM Iqbal: Cultural Medallion 2014. Singapore: National Arts Council, 2014. https://www.nac.gov.sg/docs/default-source/singapore-arts-scene-files/cultural-medallion/2014/iqbal.pdf?sfvrsn=ee2aa2ca_2
Tachihara, Lynn. Cultural Identity - My Contribution To Tamil Language and Cultural Identity. Singapore: Viddsee Studios, 2021. https://www.viddsee.com/video/cultural-identity-ep-4/x4knk
சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர். தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர் அ.வீரமணி, மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம். சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், 2019
“க.து.மு.இக்பால்,” Tamil Wiki, 25 August 2022. https://tamil.wiki/wiki/க.து.மு.இக்பால்
Kavimaalai Singapore. “சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் க.து.மு.இக்பால்,” Youtube Video, 5 April 2018. https://www.youtube.com/watch?v=MR555Uf2cNU
“தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் - எளிமையான மொழியில் ஆழமான கருத்துகளைக் கூறும் கவிஞர் க.து.மு. இக்பால்,” Mediacorp செய்தி, 9 November 2019. https://seithi.mediacorp.sg/singapore/ktm-iqbal-219351
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |