தமிழர் பண்பாட்டில், மலர்களும் மாலைகளும் போற்றுதற்குரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. தேசிய மரபுடைமைக் கழகம், 2020-இல், சிங்கப்பூரின் தொட்டுணர முடியாத பண்பாட்டு மரபுடைமைகளுள் ஒன்றாக மலர்மாலை தொடுப்பதை அங்கீகரித்ததையொட்டி இந்தப் பழமையான பண்பாட்டுக் கூறு மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலர்கள் கோவில்களிலும் இல்லங்களிலும் அன்றாடம் இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், திருமண விழா, இறுதிச் சடங்கு எனப் பல்வேறு நிகழ்வுகளிலும் அவை இடம்பெறுகின்றன. பெண்கள் பூச்சூடிக்கொள்வது நெடுங்கால வழக்கம். உதிரிப் பூக்கள், மலர்ச் சரங்கள், மலர் மாலைகள் என மலர்களுக்கான தேவை பல்வகைகளில் தொடர்கிறது. அதனால் பூக்கடை வியாபாரம் ஒரு வணிகமாகச் சாத்தியமாகிறது. தமிழர்களால் நடத்தப்பெறும் பூக்கடைகள் தீவு முழுவதும் இருக்கின்றன. எனினும், பழமையான, மிகப் பிரபலமான கடைகள் லிட்டில் இந்தியாவிலேயே அதிகம் செயல்படுகின்றன.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் 24 ஜூன் 1936 அன்று வெளியான செய்தித் தொகுப்பில் 'ராஜா பூக்கடை' என்ற தலைப்பில் ஒரு செய்தி இடம்பெற்றிருக்கிறது. தமிழர்ப் பூக்கடைகள் 1930-களிலேயே இருந்துள்ளன என்பதை இது உணர்த்துகிறது. மேலும், லிட்டில் இந்தியாவிலிருக்கும் புஷ்பா பூக்கடையின் உரிமையாளர் ஆர். கோதண்டபாணி, தமது மாமா அக்கடையை 1930-களில் தொடங்கியதாக 1988-ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கோதண்டபாணி பொறுப்பேற்ற பத்தாண்டுகளுக்குள்ளேயே தம் வியாபாரத்தை லாபகரமாக விரிவுபடுத்தினார். எனினும் அவரின் மகன்கள் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவார்களா என்ற கவலையும் அவருக்கு இருந்தது.
இதற்கு நேர்மாறாக, 1, கேம்பல் லேனில் இருக்கும் ஜோதி ஸ்டோர் & புஷ்பக்கடை பற்றிய செய்தி இருக்கிறது. அது, 1960-இல், ஒட்டுக்கடை வியாபாரமாக, வெற்றிலை, பாக்கு, பூக்களை விற்பனை செய்துவந்தது. ஆனால், காலவோட்டத்தில் ஜோதி ஸ்டோர் & புஷ்பக்கடை என்ற பெயரில் ஐந்தடுக்கு வர்த்தக நிறுவனமாக விரிவடைந்தது. இன்று பெரிய அளவிலான ஆலய, திருமணத் தேவைகளுக்கு நாடப்படும் ஒரு முக்கிய பூக்கடையாகச் செயல்படுகிறது. கடையின் நிறுவனர் முருகையா ராமச்சந்திரன், 1931-இல் தமிழ்நாட்டில் பிறந்து, 1948-இல் சிங்கப்பூர் வந்தார். பின்னர், 1950-இல் சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் பத்திரிகை அச்சக அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து, அந்த நிறுவனம் 1959-இல் மூடப்படும் வரை அங்கேயே பணிபுரிந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, 1960-இல், ஜோதி ஸ்டோர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
மறு ஆண்டே பூக்கடையையும் அதில் இணைத்தது, அவருடைய வணிகத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பெருகிவந்த மக்கட்தொகை, வளர்ந்துவந்த பொருளாதாரம் ஆகியவற்றை அனுசரித்து அவருடைய வியாபாரமும் வளரத்தொடங்கியது. பின்னர், 1980-கள் வாக்கில், வளர்ச்சியடைந்து வந்த மலர் வணிகத் தேவைக்கு, உள்ளூர் சீன விவசாயிகளிடமிருந்து மலர்களைக் கொள்முதல் செய்தார். அதே சமயம் தீபாவளி, தைப்பூசம் போன்ற பண்டிகைகளின்போது அதிகரிக்கும் தேவைகளைச் சமாளிக்க, மலேசியா, தாய்லாந்து, இந்தியா என வெளிநாடுகளிலிருந்தும் பூக்கள் தருவிக்கப்பட்டன. ராமச்சந்தினின் மகன் ராஜகுமார் சந்திரா கணினித் துறையில் பட்டதாரியானபோதும், 1986-இல் தந்தையின் வணிகத்தொழில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ராஜகுமார் தலைமையின்கீழ் நிறுவனம் மேலும் விரிவடைந்து பல்பொருள் அங்காடியாக மாறிற்று. எனினும் கடை தமிழர்களிடையே இன்னமும் 'ஜோதி புஷ்பக்கடை’ என்றே பரவலாக அறியப்படுகின்றது. முருகையா ராமச்சந்திரன், 2025-இல், தம் 93-ஆவது வயதில் காலமானார்.
ஜோதி புஷ்பக்கடையைப் போலவே, கெர்பாவ் ரோட்டிலுள்ள அனுஷியா புஷ்பக்கடையையும் அதன் நிறுவனர் ஜெயசெல்வத்தின் மகன்கள் ஜெயகிரிஷன், ஜெயகண்ணன் இருவரும் பொறுப்பேற்று நடத்திவருகின்றனர். இருவரும், 2018-இல் மின்வர்த்தகத் தளத்தைத் தொடங்கிச் சமூக ஊடகங்களின் வழியாகப் பூ விற்பனையை அறிமுகம் செய்தனர். பெருந்தொற்று முறியடிப்பு நடவடிக்கைகள் 2020-இல் நடப்புக்கு வந்தபோது இணையவழி வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வாடிக்கையாளர்கள் பன்மடங்கு பெருகினர்.
லிட்டில் இந்தியாவில் சில தனிக்கடைகள் செயல்பட்டாலும், தீவு முழுவதுமிருக்கும் பல பூக்கடைகள், பல்பொருள் அங்காடிகளுடன் இணைந்த ஒட்டுக்கடைகளாகவே செயல்படுகின்றன. இவை தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாது மொத்த இந்தியச் சமூகத்திற்கும் பூக்களை நாடும் இந்தியர் அல்லாதோருக்கும் சேவை வழங்குகின்றன. கடந்த 1990-களிலிருந்து, புதிதாக இந்தியாவிலிருந்து குடியேறியவர்களாலும் இந்தியப் பாரம்பரியத்தைப் பராமரிப்பதில் ஏற்பட்டிருக்கும் புதிய அக்கறையாலும் பூக்கடைகள் வளரும் வணிகமாகக் கருதப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். வாடிவிடும் என ஒரு காலத்தில் கருதப்பட்ட மலர்மாலை தொடுக்கும் கலை இன்று பூக்கடைகளில் மலர்ச்சியுடன் தொடர்ந்து மணம்பரப்பிக் கொண்டிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு
Ramachandra, M. Oral History Interview by Rajandran Supramaniam, 19 March 1990. Transcript and MP3 audio, 01:29:29. National Archives of Singapore (accession no. 001122).
“Jothi Store & Flower Shop,” RootsSG. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/landmarks/little-india-heritage-trail-shop-till-you-drop/jothi-store-flower-shop
“Funeral of Mr. C. A. Odyar,” The Straits Times, 24 June 1936, 5. (From Newspaper SG)
“Flower Business Blooms in Little India,” The Straits Times, 16 December 1988, 10. (From Newspaper SG)
“The ‘Raja” of Serangoon Road,” The Straits Times, 16 August 1997, 6. (From Newspaper SG)
“Making of Flower Garlands,” RootsSG. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/en/ich-landing/ich/making-of-flower-garlands
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |