தீபாவளி



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

 

சிங்கப்பூரில் இந்துக்கள் ஆகப்பெரிய அளவில் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. அப்பண்டிகையைக் கொண்டாடுவதற்கென 1929-இலிருந்தே பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. தீபாவளி, தமிழ் மாதமான ஐப்பசியில் (அக்டோபர் - நவம்பர்) கொண்டாடப்படும் ஒர் இந்து பண்டிகை. தீபாவளி என்பது தீபம், ஆவளி (வரிசை) ஆகிய இரண்டு சொற்களின் ஒட்டுச்சொல். "விளக்குகளின் வரிசை" என்று பொருள்படும். பண்டிகையைக் கொண்டாடும் இல்லங்களில் சுடர்விடும் அகல் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது பாரம்பரியம். பின்னாளில் மின்விளக்குகளும் தீபங்களாக மாறிவிட்டன. அடிப்படையில், தீமையை வெல்லும் நன்மையைக் கொண்டாடும் இவ்விழா தொடங்கியதைக் குறித்துப் பல்வேறு தொன்மங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, அரக்க அரசன் நரகாசுரனை விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன் தோற்கடித்ததை விவரிக்கிறது. நரகாசுரன் இறப்பதற்கு முன், தனது மறைவை ஆண்டுதோறும் விளக்குகளுடனும் வண்ணக் கோலங்களுடனும் மக்கள் கொண்டாட வேண்டுமெனக் கிருஷ்ணனிடம் வரம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. எனவேதான், தீபாவளி நரக சதுர்தசி என்றும் அழைக்கப்படுகிறது. 

மற்றொரு பாரம்பரியக் கதை, ராமாயணத்தின் நாயகனான ராமன், இலங்கை வேந்தன் ராவணனை தோற்கடித்து அயோத்திக்குத் திரும்புவதை தீபாவளியுடன் இணைக்கிறது. ராமன் வரவை மக்கள் தீபம் ஏற்றி, வாணவெடிகளை வெடித்துக் கொண்டாடியதாகவும் அதுவே தீபாவளியாக மாறியது எனவும் அந்தக் கதை விளக்குகிறது. பல்வேறு இந்துச் சமூகங்கள் தீபாவளியைப் பல்வேறு விதமாகக் கொண்டாடுவதால், தீவாவளிப் பாரம்பரியங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கொண்டாட்ட நடைமுறைகள் வேறுபடுகின்றன. சிங்கப்பூர்த் தமிழர்கள், தமிழ்நாட்டு மரபுகளைப் பின்பற்றி, எண்ணெய்க் குளியலுடன் நாளைத் தொடங்குகிறார்கள். பாரம்பரியமாகக் கோடித்துணி எனப்படும் புத்தாடைகளை அணிகிறார்கள். வீடுகள் கோலங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. தீபாவளி கொண்டாடும் குடும்ப உறுப்பினர்கள் பொதுவாகக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் வீட்டில் கூடுகிறார்கள். உணவருந்துகிறார்கள், பலகாரங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். மேலும் உறவினர்களைப் பார்க்க அவரவர் இல்லங்களை நாடிச் செல்கிறார்கள். சிங்கப்பூரில், தீபாவளியைக் கொண்டாடுவதற்கு இந்தியர் அல்லாத நண்பர்களை வீட்டிற்கு அழைக்கும் வழக்கமும் பரவலாக உண்டு. ஒருகாலத்தில் தீபாவளி கொண்டாடும் இந்துக்களும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் சீனர்களும் பட்டாசு வெடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், தீ விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், 1970 முதல் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் அவ்வழக்கம் நின்றுபோனது.  

தீபாவளி முதன் முதலில், காலனித்துவ அரசால் 1929-இல் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இன்றும் வழக்கிலிருக்கிறது. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான ஒரே பொது விடுமுறை நாள் அது ஒன்றுதான். பொதுமக்கள் பலரும் ஒன்றுகூடும் தீபாவளிக் கொண்டாட்டங்களின் மையம் லிட்டில் இந்தியா. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் லிட்டில் இந்தியா தெருக்களில் வரிசையாக நிற்கும். மேலும் தீபாவளிக்கென்றே கடைத்தொகுதிகளும் நிறைந்து காணப்படும். லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் மூலம் 1985 முதல் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த ஓளியூட்டு விழா பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சரால் தொடங்கிவைக்கப்படுகிறது. 

எஸ்பிளனேட் கலை நிறுவனம், ஆண்டுதோறும், தீபாவளியை ஒட்டி, “கலா உற்சவம் - இந்தியக் கலை விழா” என்னும் ஒரு வார நிகழ்ச்சித் தொடரை 2001 முதல் நடத்தி வருகிறது. அவ்விழாவில் சிங்கப்பூர்க் கலைஞர்களோடு வெளிநாட்டுக் கலைஞர்களும் பல்துறை சார்ந்த இந்தியக் கலை நிகழ்ச்சிகளை படைக்கிறார்கள். இந்துக்கள் தவிர மற்ற சமூகத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் உள்ள சீக்கியர்கள் குருத்வாராக்களில் கூடி 1619-இல் குரு ஹர்கோவிந்த் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் பந்தி சோர் திவாஸ் எனப்படும் விடுதலை நாளைக் கொண்டாடுகிறார்கள். சமணர்கள் தீபாவளியை அவர்களின் 24-ஆவதும் இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரர் மோட்சமடைந்ததைக் குறிக்கும் ஆண்டு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவரது போதனைகளைப் போற்றும் வகையில் விளக்குகளை ஏற்றி வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள். சிங்கப்பூரில், தீபாவளி என்பது விளக்குகளின் வரிசையால் ஒளியூட்டப்படும் பண்டிகை என்பதோடு இந்நாட்டின் பல்லின உயிர்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில் பல்பண்பாட்டுக் கொண்டாட்டமாகவும் வளர்ந்துள்ளது எனலாம். 




மேல்விவரங்களுக்கு
“Deepavali.” Roots.sg. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/ich-landing/ich/deepavali
“Deepavali.” Singapore Infopedia. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=0a84fe1a-1222-4701-be17-1735a8a9af27

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA