நித்தியா என்று பரவலாக அறியப்படும் நித்தியானந்தன் ஆறுமுகம் (1949 - 2007), 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்சங்கவாதியாக இருந்து, குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்காகக் குரலெழுப்பிய தலைவர். மேலும், 2002 முதல் 2004 வரை நாடாளுமன்ற நியமன உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
நித்தியா தம் இளமைப்பருவ வறுமையால், உயர்நிலைப்பள்ளிக் கல்வியைக்கூடத் தொடர இயலாது, கட்டுமானத்தளத் துப்புரவாளராகவும் கப்பல் பட்டறைக் கொதிகலன் துப்புரவாளராகவும் பல வேலைகளைச் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார். அடுத்து, 1966-இல், பொதுப் பயனீட்டுக் கழகத்தில் அன்றாடச் சம்பளம்பெறும் சாதாரணத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். காலப்போக்கில் அன்றாடச் சம்பளத் தொழிலாளர்களின் அதிகாரப்பூர்வமற்ற தலைவராக உருவெடுத்து, 1979 முதல் தொழிற்சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டார். அவர், 1982-இல் அத்தொழிலாளர்களின் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் 1988-இல் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு, 1994-இல் நித்தியா தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1997-இல் உதவித் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். மின்சக்தி, எரிவாயு ஊழியர்கள் சங்கம் என்னும் அமைப்பு 1996-இல் உருவானபோது, அதில் முக்கிய பங்கு வகித்த நித்தியா, அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 1999-இல், அவர் நிர்வாகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுப் பயனீட்டுக் கழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியபோதும், மாதத்திற்கு வெறும் 1,120 வெள்ளி சம்பளம் பெற்ற அன்றாட ஊதிய ஊழியராகவே நீடித்தார். அவர் மேற்பதவிகளுக்கு உயர்ந்திருக்கலாம் என்றாலும் சக ஊழியர்களுக்குக் களத்தில் உதவும் உறுதிப்பாட்டோடு அவர்களுள் ஒருவராகவே இருந்தார்.
நித்தியா, தொழிலாளர் இயக்கத்தின் பேராளராக, நாடாளுமன்ற நியமன உறுப்பினராக 2002-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். செலவின மறுஆய்வுக் குழு, மெடிஃபண்ட் மருத்துவநிதி ஆலோசனைக்குழு, தொழிற்சங்க இயக்க, தேசியத் தொழிற்சங்க காங்கிரஸின் நியமன ஆலோசனைக்குழு, மூத்த ஊழியர் வேலை நியமனத்துக்கான முத்தரப்புக் குழு, தேசியச் சம்பள மன்றம் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான அமைப்புகளில் தொண்டாற்றினார். நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்று குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
அவர் 2005-இல் சிறுநீரகப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு, 2007-இல், தம் 58-ஆம் வயதில் காலமானார். நித்தியா, குறைந்த ஊதியம் பெற்ற, முதிய தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்குத் தமது தொழிற்சங்க வாழ்க்கை முழுவதும் பாடுபட்ட தலைவராக நினைவுகூரப்படுகிறார். அவரின் பொதுச் சேவைக்காக, 1997-இல் பொதுப் பணிப் பதக்கம் 2001-இல், பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம், 2007-இல் பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றார். மறைந்த நித்தியானந்தன் ஆறுமுகத்தின் தொண்டைப் பாராட்டும் வகையில், 2007-இல் ஓங் டெங் சியோங் தொழிலாளர் ஆய்வியல் கழகத்தில் நித்தியானந்தன் புத்தகப் பரிசுத் திட்டம் தொடங்கப்பட்டது.
மேல்விவரங்களுக்கு
Tan-Oehler, Shirley. Gritty Nithi: The Remarkable Life of Nithiah Nandan, Comrade & Champion. Singapore: National Trades Union Congress, 2007
“Unionist Who Pushes Members to Upgrade and Leave,” The Straits Times, 10 July 1994, 15. (From Newspaper SG)
“The Labour Movement Mourns the Loss of an Outstanding Comrade, Mr Nithiah Nandan S/O Arumugam.” National Trades Union Congress (NTUC), 1 November 2010. https://www.ntuc.org.sg/uportal/news/The-Labour-Movement-mourns-the-loss-of-an-outstanding-comrade-Mr-Nithiah-Nandan-S-O-Arumugam/
Parliament of Singapore, Obituary Speeches, vol. 77 of Parliamentary Debates: Official Report, 20 April 2004, cols. 2835
“Leadership Development Key to a Strong Labour Movement: Nithiah Nandan Prize and Book to Honour Veteran Unionist.” National Trades Union Congress (NTUC), 10 November 2007. https://www.ntuc.org.sg/uportal/news/Leadership-Development-Key-to-a-Strong-Labour-Movement-Nithiah-Nandan-Prize-and-book-to-Honour-Veter/
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |