அப்துல் ரஹ்மான், என் (சிங்கை முகிலன்)



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

என். அப்துல் ரஹ்மான் (1922-1992), சிங்கை முகிலன் என்ற புனைபெயராலேயே பெரிதும் அறியப்படுகிறார். தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காகக் கலாசாரப் பதக்கம் பெற்ற முதல் எழுத்தாளர். அரைநூற்றாண்டுக்கும் மேல் நீண்ட தம் எழுத்துப் பயணத்தில் 1500க்கும் மேற்பட்ட கவிதைகளையும் பல கதைகளையும் எழுதியுள்ளார். முகிலன் இந்தியாவிலுள்ள சோழபுரத்தில் 1922-இல் பிறந்தார். இந்தியாவிலிருந்து மலாக்காவுக்கு 1938-இல் குடிபெயர்ந்தவர், அங்கு ஒரு மளிகைக் கடை உதவியாளராக வேலை செய்தார். மலாக்காவில், மலாயா திராவிடர் கழகம், மலாக்கா தமிழர் சீர்திருத்த சங்கம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டார். இரண்டாம் உலகப்போரின்போது, இந்திய தேசிய ராணுவத்தின் மலாயாத் தலைமையகத்தில் சிக்னலராகப் பணியாற்றினார். போருக்குப்பின் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர், தமிழ் முரசில் மெய்ப்புத் திருத்துநராக வேலை செய்தார். முகிலன் 1992-இல் மறைந்தார்.

இவரது முதல் கவிதை, பெரியார் வெளியிட்ட குடி அரசு வார இதழில் வெளியானது. மலாக்காவில் தமிழ்க்கொடி என்ற வார இதழை நடத்திவந்த உ. அருணாசலம் செட்டியாரிடமிருந்து யாப்பிலக்கணத்தைக் கற்றார். முகிலனின் 18-ஆம் வயதில், அவரது கவிதைத்தொகுப்பு தமிழ் ஒலி கீதம் இரு பகுதிகளாக 1939-இல் மலாக்கா தமிழர் சீர்திருத்த சங்கத்தால் வெளியிடப்பட்டது. மூன்றாம் கவிதைத் தொகுப்பு திராவிட மணி கீதம் 1940-இல் வெளியிடப்பட்டது. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சிங்கப்பூர்த் தமிழ் இதழ்களில், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தும் கவிதைகளை வெளியிட்டார். தமிழ் நேசன், தமிழ் மலர், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. இதய மலர் (1952), துடிக்கும் உள்ளம் (1954), இதய ஓசை (1960), இந்திய தேசிய ராணுவப் பாடல்கள் (1964), மனிதச் சுவடு (1975) உட்படப் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். மேலும், உருவகக் கதைகள் என்ற தலைப்பில் கதைத் தொகுப்பு ஒன்றையும் 1976-இல் வெளியிட்டார். அவரது சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆசியான் இலக்கியத் தொகுப்பு: சிங்கப்பூர்க் கவிதை (Anthology of ASEAN Literature: The Poetry Of Singapore, 1985) என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. முகிலன் தம் இலக்கியப் பங்களிப்புகளுக்காகக் கலைத்துறையில் ஆக உயரிய விருதாகிய கலாசாரப் பதக்கத்தை 1988-இல் பெற்றார். அவ்விருதின் சாதனைக் குறிப்பு, “இவ்வட்டாரத்தின் இரண்டு தலைமுறை தமிழ்க் கவிஞர்களின்மேல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர்” என்று பாராட்டியது. 



மேல்விவரங்களுக்கு
Arts House Limited. “N. Abdul Rahman.” Our Cultural Medallion Story. Accessed on 1 August 2025. https://artshouselimited.sg/ourcmstory-recipients/n-abdul-rahman 

“Cultural Medallion and Young Artist Award.” National Arts Council Singapore. Accessed on 1 August 2025. https://www.nac.gov.sg/singapore-arts-scene/cultural-medallion-and-young-artist-award/cultural-medallion-page/about-the-cultural-medallion 
“Culture’s six of the best” The New Paper, 28 February 1989, 18. (From Newspaper SG)
Singapore Tamil Writers. “Singai Mukilan.” In 200 Writers, Accessed July 25, 2025. https://singaporetamilwriters.com/ASTW/200%20Writers/S4%20Singai%20Mukilan.docx 
“Singai Mukilan.” Wikipedia. Accessed on 1 August 2025. https://en.wikipedia.org/wiki/Singai_Mukilan 
Thumboo, Edwin, Wong Yoon Wah, Lee Tzu Pheng, Masuri bin Salikun, and V. T. Arasu, eds. The Poetry of Singapore. Jakarta: ASEAN Committee on Culture and Information (COCI), 1985.

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA