சசி என்றும் அழைக்கப்படும் திருநளன் சசிதரன் (பி. 1958), நடிப்பு, கலை விமர்சனம், கலைக் கல்வி, பல்பண்பாட்டு நாடகம், சமூகச் செயற்பாடு, இதழியல், தத்துவம் எனப் பல்வேறு துறைகளில் திறன்மிக்க ஓர் ஆளுமை. முக்கியமான கலை நிறுவனங்களைக் கட்டியெழுப்பியதோடு மதிப்பிற்குரிய தலைவராகவும் சிந்தனையாளராகவும் செயல்பட்டுச் சிங்கப்பூர்க் கலை உலகில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.
சிங்கப்பூரில் பிறந்த சசிதரன், விக்டோரியா பள்ளியிலும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். முன்னர் ஸ்டாம்ஃபோர்ட் ரோட்டில் அமைந்திருந்த சிங்கப்பூரின் தேசிய நூலகம் இளையர்களுக்காக நாடகப் பட்டறைகளை 1970-களில் நடத்தியது. எக்ஸ்பெரிமெண்டல் தியேட்டர் கிளப், ஸ்டேஜ் கிளப், ஸ்டார்ஸ் முதலிய கலை நிறுவனங்களின் உள்ளூர்ப் பயிற்சியாளர்கள் அவற்றில் பயிற்றுவித்தனர். சசிதரன் அப்பட்டறைகளில் பங்கேற்று, நடிப்பு, இயக்கம், நாடகம் எழுதுதல், அரங்கமைத்தல், ஒப்பனை, ஒளி, ஒலியமைப்பு என நாடகத்துறையின் பல்வேறு கூறுகளில் அனுபவம் பெற்றார். நாடகத்தின் மீதான தமது ஆர்வத்தை 1971-இல் விக்டோரியா பள்ளியில் படித்தபோதுதான் அவர் முதன்முதலில் உணர்ந்தார். அந்த ஆர்வம் அவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தபோது மேலும் வளர்ந்தது. முன்னோடிச் சிங்கப்பூர் நாடகக் கலைஞரும் கலை ஆர்வலருமான குவோ பாவ் குன் 1981-இல் சசிதரனை அணுகினார். அவர் சசிதரனின் நாடகப் பணிகளைக் கூர்ந்து கவனித்திருந்தார். "நோ பார்க்கிங் ஆன் ஆட் டேய்ஸ்" என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை இணைந்து எழுதவும் நடத்தவும் அழைத்தார்.
சசிதரன் பத்திரிகைத் துறைக்குப் போவதற்குமுன், 1983 முதல் 1989 வரை, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கற்பித்தார். அதன்பின் 1988 முதல் 1996 வரை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கலைப் பகுதி ஆசிரியராகப் பணியாற்றினார். அடுத்து, உள்ளூர் நாடக நிறுவனமான தி சப்ஸ்டேஷனில், குவோ பாவ் குன்னுக்குப் பிறகு கலை இயக்குநராக 1996-இலிருந்து 2000 வரை வழிநடத்தினார். பின்னர் குவோவும் சசிதரனும் இணைந்து 2000-ஆம் ஆண்டில் தியேட்டர் ட்ரெயினிங் அண்ட் ரிசர்ச் ப்ரோகிராம் என்னும் புதுப் பள்ளியை நிறுவினர். அப்பள்ளி பல மொழிகள், பல பண்பாடுகள், பல துறைகள் ஊடாடும் சூழல்களில் நடிகர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான தனித்துவமிக்க முதுநிலைப் பாடத்திட்டத்தை வழங்கத் தொடங்கியது. அதன் பல்பண்பாட்டு அடிப்படையை முன்னிலைப்படுத்தும் வகையில் பள்ளியின் பெயர் இன்டர்கல்ச்சுரல் தியேட்டர் இன்ஸ்டிடியூட் என 2011-இல் மாற்றப்பட்டது. சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து மட்டுமின்றி இந்தியா, ஜப்பான், மக்காவ், பிலிப்பீன்ஸ், தைவான், மெக்சிகோ, போலந்து ஆகிய நாடுகளின் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.
சசிதரன், தி சப்ஸ்டேஷன், தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம், சிங்கப்பூர் அனைத்துலக அறக்கட்டளை, தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றம், ஆசியக் கலைக் குழுமம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆலோசனைக் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூரில் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கிற்காக சசிதரனுக்கு 2012-ஆம் ஆண்டு கலாசாரப் பதக்கம் வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தால் ஃபெலோ விருது 2022-இல் அவருக்கு வழங்கப்பட்டது. தணிக்கை, அரசியல்சார் கலை, கலைகளின் நிலை ஆகியவை பற்றிய அவரது கூர்மையான அவதானிப்புகளும் கருத்துகளும் அவரை 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கப்பூரில் செல்வாக்கு மிக்க கலைச் சிந்தனையாளராகவும் முன்னோடியாகவும் நிலைநிறுத்தியுள்ளன.
மேல்விவரங்களுக்கு
“EBFP 2022 Judge:T.Sasitharan,” Epigram. Accessed 1 August 2025. https://www.epigram.sg/t-sasitharan
“Cultural Medallion 2012: Thirunalan Sasitharan,” Arts House Limited. Accessed 1 August 2025. https://artshouselimited.sg/ourcmstory-recipients/thirunalan-sasitharan
Intercultural Theatre Institute. Accessed 1 August 2025. https://www.iti.edu.sg/about/people/
Judith Tan, “Theatre doyen T Sasitharan becomes HUAAS 3rd Fellow,” TheHomeGround Asia, 2 March 2022, https://thehomeground.asia/destinations/singapore/theatre-doyen-t-sasitharan-given-the-2022-huaas-fellow-award/
Sasitharan Thirunalan, oral history interview by Ah Sim, 22 January 2010, transcript and MP3 audio, 00:54:30, National Archives of Singapore (accession no. 003466)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |