மாதவி கிருஷ்ணன்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

மாதவி கிருஷ்ணன் (பி. 1941) சிங்கப்பூரின் உயரிய கலை விருதான கலாசாரப் பதக்கத்தைப் பெற்ற முதல் இந்தியர், முதல் பெண்மணி. இந்திய நடனத்தில் புதுமையான அணுகுமுறைகளைப் புகுத்தியதற்காகவும் மலாய், சீனப் பண்பாட்டுக் கூறுகளைக் கலந்து பல்லினப் பார்வையாளர்களை ஈர்த்ததற்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.

பாலஸ்டியர் ரோடு பெண்கள் பள்ளியில் படித்த மாதவி, சிறுவயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தம் 14-ஆம் வயதில், பல்வேறு இந்தியப் பாரம்பரிய நடன வடிவங்களில் பயிற்சி பெற இந்தியாவின் சென்னைக்கு அனுப்பப்பட்டார். அங்கு, நடன நிகேதனில், குரு கோபிநாத், குரு டி.வி. செளந்தரராஜன் ஆகியோரது வழிகாட்டலில் நடனம் பயின்றார். பரதநாட்டியம், கதக், கதகளி, மணிப்புரி ஆகிய நடன வடிவங்களை நன்கு கற்று, 1950-களின் பிற்பகுதியில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு நடனப் பயணங்களை மேற்கொண்டார். இடையிடையே தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தோன்றத் தொடங்கினார். பின்னர், அவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞராகவும் நடன இயக்குனராகவும் மாறி, சிறிது காலத்தில் நடிகையாகவும் ஆனார். தென்னிந்தியத் திரையுலகில் 'சிங்கப்பூர் மாதவி' என்று 1960-களில் பெயர் பெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் 1968-இல் சிங்கப்பூர் திரும்பியபோது அவரது நடிப்பு வாழ்க்கை நின்றுபோனது.

மாதவி, சிங்கப்பூர்த் தேசிய நடன, நாடகக் குழுவின் (1970-1985) தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரானார். அந்தக் குழு, கலையின்மூலம் தேசிய அடையாளத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு அப்போதையக் கலாசார அமைச்சு உருவாக்கிய ஓர் அமைப்பு. அதன் மூலம், மாதவி ஒரு பண்பாட்டுத் தூதராக 1970-கள், 1980-களில் உலகச் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றார்; 1972-இல் அடிலெய்ட் கலை விழா, 1973-இல் சோவியத் யூனியன் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டம் முதலிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். 

சிங்கப்பூரின் பண்பாட்டுப் பன்முகத்தன்மையை சித்திரித்ததற்காக மாதவியின் தனித்துவமான நடனங்களும் பிற பண்பாட்டு நடனங்களோடு கலந்துறவாடிய படைப்புகளும் பாராட்டப்படுகின்றன. அடிலெய்ட் கலை விழாவில், 1972-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பல இன நடன மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் 'தைப்பூசம்' என்ற படைப்பை வழங்கினார். அதேபோன்று, 1976-இல், அவர் மலாய்க் கலைஞர் முகமட் நைம் பானி, சீனக் கலைஞர் வோங் டியூ சின் ஆகியோருடன் இணைந்து 'மீனவர்கள்' நடனத்தை உருவாக்கினார். அதே  ஆண்டில் அவர் படைத்த 'பஸ்மாசுரனும் மோகினியும்’ என்னும் நாட்டிய நாடகமும் குறிப்பிடத்தக்கது. அவரது மற்றொரு முக்கியமான தயாரிப்பு 1985-இல் மேடையேறிய 'மீராவின் கனவு'. அது பாலேஓப்பரா ஆகிய மேற்கத்திய நடனங்களின் கூறுகளைப் பின்னிப் பிணைத்த ஒரு படைப்பு. இம்முயற்சிகள் பல்லினப் பார்வையாளர்களை ஈர்த்தன. நடனக் கலையின்மூலம் பண்பாட்டுப் பன்முகத்தன்மையை ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் முயன்ற மாதவியின் அர்ப்பணிப்பை அப்புதுமையான படைப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

பின்னர் 1980-களின் பிற்பகுதியிலிருந்து பல்வேறு உள்ளூர் நடனப் பள்ளிகளில் நடனம் கற்பிப்பதிலும் தனி வகுப்புகளை நடத்துவதிலும் அவர் தம் நேரத்தைச் செலவிட்டார். மாதவி கிருஷ்ணன், 1980-இல் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாசாரப் பதக்க விருதாளர்கள் அறுவருள் ஒரே இந்தியர், ஒரே பெண். கடந்த 2022-இல், அவர் சிங்கப்பூரில் உள்ள இந்தியர் புகழரங்கில் சேர்க்கப்பட்டார். அவர் 2001-இல் தமது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குக் குடிபெயர்ந்தார்.



மேல்விவரங்களுக்கு
“Cultural Medallion 1979 - Madhavi Krishnan”. Arts House Limited. Accessed on 1 August 2025. https://artshouselimited.sg/ourcmstoryrecipients/madhavikrishnan  
“Dance Girl”. The Singapore Free Press, 22 December 1960, 3. (From NewspaperSG)
“A Good Deed By The Dancing Cousins”. (1961, January 19). The Singapore Free Press, 19 January 1961, 6. (From NewspaperSG)
“Typhoid fever that changed Madhavi.” New Nation, 27 June 1973, 10. (From NewspaperSG)
“The magic of Madhavi.” The Business Times, 26 June 1978, 6. (From NewspaperSG)
“Dance.” The Business Times, 2 October 1978, 40. (From NewspaperSG)
“6 artistes win Ministry of Culture awards.” The Straits Times, 2 February 1980, 11. (From NewspaperSG)
“Four strike silver for 15 years’ service.” The Straits Times, 21 November 1987, 39. (From NewspaperSG)
“Madhavi Krishnan.” Indian Hall of Fame Singapore. Accessed on 1 August 2025. https://indianhalloffame.sg/?page_id=20671
Pillai, Gopinath, and K Kesavapany. 50 Years of Indian Community in Singapore. WORLD SCIENTIFIC eBooks, 2016. https://doi.org/10.1142/9961 


To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA