தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து முறை தங்கப் பதக்கம் வென்ற ஜெயமணி கந்தசாமி (பி. 1955), 1982-இல் பெண்களுக்கான 1500, 3000 மீட்டர் ஓட்டங்களில் நிகழ்த்திய தேசியச் சாதனைகள் இன்றுவரை நின்றுகொண்டிருக்கின்றன. சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருமுறை 1970-களில் கௌரவிக்கப்பட்ட ஜெயமணி, "நெடுந்தூர ஓட்டத்தின் ராணி" என்ற புகழாரத்தையும் பெற்றார். சிங்கப்பூரில் பிறந்த ஜெயமணி, டன்யர்ன் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே தமது திடல்தடத் திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவர், 1971-இல், நியூ நேஷன் பிக் வாக் போட்டியில் பள்ளியைப் பிரதிநிதித்து வெற்றிபெற்றார். உள்ளூர் விளையாட்டு மன்றமொன்றின் பயிற்சியாளரான மோரிஸ் நிக்கொலஸ், ஜெயமணியின் திறமையை அடையாளம் கண்டார். அவரது வழிகாட்டுதலின்கீழ், ஜெயமணி நெடுந்தூர ஓட்டத்திற்கான பயிற்சியைத் தொடங்கினார். பெரும்பாலும், ஃபேரர் பார்க் விளையாட்டரங்கத்தில் பயிற்சி மேற்கொண்ட அவர், சி. குணாளன், கே. எல். வேணுகோபாலன் உள்ளிட்டப் பல்வேறு பயிற்சியாளர்களிடம் தமது திறன்களை மெருகேற்றிக்கொண்டார்.
இந்தோனேசிய ஓப்பன் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து முதன் முதலில் 1976-இல் ஜெயமணி கலந்துகொண்டார். அப்போது, சிங்கப்பூர்த் துறைமுக ஆணையத்தில் மின்தூக்கி உதவியாளராக வேலைபார்த்த அவர், வேலைப்பளுவிற்கிடையே ஓட்டப் பயிற்சிகளையும் பந்தயப் பங்கேற்புகளையும் சமாளித்தார். அவ்வேலையிலிருந்து விலகி 1979-இல் ஆசியத் திடல்தடச் சங்கத்தில் ஒரு நிர்வாகப் பதவியை ஏற்றபின் அவரது ஓட்டப்பந்தய முயற்சிகளுக்கு அதிக ஆதரவு கிட்டியது. பின்னர், 1988 வாக்கில் சிங்கப்பூர்ச் செய்தித்தாள் சேவைகள் அமைப்பில் எழுத்தராகப் பணிபுரியத் தொடங்கினார். தென்கிழக்காசியத் தீபகற்ப விளையாட்டுப் போட்டிகளில் 1977, 1979-ஆம் ஆண்டுகளில் வென்ற தங்கப் பதக்கங்களைத் தவிர, 1982இல் ஜெர்மனியில் நடந்த போட்டிகளிலும் அவர் 1500 மீட்டர் (4:31.2), 3000 மீட்டர் (9:56.6) ஓட்டங்களில் தேசியச் சாதனைகளைப் படைத்தார். தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1983-இல் மாரத்தான் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து மாஸ்கோ ஒலிம்பிக்கில் 3000 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொள்ள 1980-இல் ஜெயமணி தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமித்ததற்கு எதிராக, அமெரிக்காவின் தலைமையில் உருவான ஒலிம்பிக் கூட்டுப்புறக்கணிப்பு அணியில் சிங்கப்பூரும் இணைந்ததால், அவரால் கலந்துகொள்ள இயலாமற்போனது. ஒருமுறை அதைக் குறித்து நினைவுகூர்ந்த ஜெயமணி, "வாழ்க்கையில் எனக்கு அதிக வருத்தங்கள் இல்லை, ஆனால் அதைக்குறித்து வருத்தப்பட்டேன்" என்றார். ஜெயமணி, போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து 1992-இல் ஓய்வுபெற்றார். அதைத்தொடர்ந்து, சிங்கப்பூர்த் திடல்தடச் சங்கத்தில் பயிற்சியாளரானார். பின்னர், தனித்தியங்கும் பயிற்றுவிப்பாளராகப் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றினார். தொடர்புத்திறன் குன்றிய பிள்ளை ஒன்றின் முழுநேரப் பராமரிப்பாளராக 2008-இல் அவர் ஆனபோது ஓட்டப்பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்திவிட்டார். சிங்கப்பூர் விளையாட்டுத்துறைக்கு அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஜெயமணி 2019-இல் சிங்கப்பூர் மாதர் புகழரங்கில் சேர்க்கப்பட்டார்.
மேல்விவரங்களுக்கு
“Jayamani returns with 3 golds.” New Nation, 11 July 1978, 18. (From Newspaper SG)
“Jaya: A worthy experience.” New Nation, 9 April 1980, 16. (From Newspaper SG)
“6 athletes, 4 officials get IAAF awards.” The Straits Times : Weekly Overseas Edition, 2 January 1988, 23. (From Newspaper SG)
Kandasamy Jayamani.” Singapore Women’s Hall of Fame. Accessed 1 August 2025. https://www.swhf.sg/profiles/kandasamy-jayamani/
Chua Siang Yee. “Atheletics: In pursuit of those Glory days,” The Straits Times, 10 May 2015. https://www.straitstimes.com/sport/athletics-in-pursuit-of-those-glory-days
BiblioAsia. BiblioAsia, vol. 11, no. 2 (Jul–Sep 2015). https://biblioasia.nlb.gov.sg/files/pdf/BiblioAsia%20Jul-Sep%202015.pdf
“S’porean ladies are OG sprint queens who held national gold records for more than 3 decades.” Mothership, 31 March 2019. https://mothership.sg/2019/03/glory-barnabas-k-jayamani-singaporean-runners/
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |