சி. குணாளன் என்று பிரபலமாக அறியப்படும் கனகசபை குணாளன் (பி. 1942), ஒருகாலத்தில் "சிங்கப்பூரின் ஆகவேகமான மனிதர்" என்று அழைக்கப்பட்டார். ஒலிம்பிக் வீரராக 1968-ஆம் ஆண்டு 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் படைத்த தேசியச் சாதனை அடுத்த 33 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படவில்லை. மிகச்சிறந்த திடல்தடச் சாதனைகளுக்குப் பெயர்பெற்ற குணாளன், விளையாட்டுத்துறைக் கல்வியிலும் கணிசமாகப் பங்காற்றியிருக்கிறார்.
மலேசியாவின் ஜொகூரில் பிறந்த குணாளன், ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது 1944-இல் குடும்பத்துடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். தொடக்கப்பள்ளியில் பயின்ற காலத்திலேயே ஓட்டப்பந்தயத்தில் நாட்டம் கொண்டு தம் திறமையை வளர்த்துக் கொண்டார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற அவர், 1961 முதல் 1966 வரை தியோங் பாரு தொடக்கப் பள்ளியில் உடற்பயிற்சி உட்பட பல்வேறு பாடங்களைக் கற்பித்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் அவர் அதிவிரைவு ஓட்டத்தில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.
குணாளனுக்கு 1966-ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவரது விளையாட்டு வாழ்க்கையில் அது ஒரு முக்கிய ஆண்டாகும். ஐந்து தேசியச் சாதனைகளைப் படைத்தார்: மூன்று தனிநபர் போட்டிகளிலும் (100 மீ, 200 மீ, 400 மீ) இரண்டு அஞ்சலோட்டத்திலும் (4x100 மீ, 4x400 மீ). அதே ஆண்டு, 5-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் “ஆசியாவின் ஆகவேகமான மனிதர்” என்ற சாதனையை அவர் மிகக் குறுகிய வித்தியாசத்தில் தவறவிட்டார். இரண்டு திடல்தட வீரர்களும் ஒரே நேரத்தில் ஓடி முடித்தபோதிலும், மலேசியாவின் எம். ஜெகதீசனிடம் ஒரு மில்லி வினாடி வித்தியாசத்தில் குணாளன் தோல்வியடைந்தார். எதற்கும் சோர்வுறாத குணாளன், அதே நாளில் சிங்கப்பூர் அஞ்சலோட்டக் குழுவிற்குத் தலைமையேற்று, 4x400 மீ அஞ்சலோட்டத்தில் குழு புதிய தேசியச் சாதனையை பெறுவதற்கு வழிவகுத்தார்.
குணாளன், 1963-க்கும் 1974-க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரின் ஓட்டச் சாதனைகளை 19 முறை முறியடித்தார் - தனிநபர் போட்டிகளில் 11 முறையும் அஞ்சலோட்டத்தில் எட்டு முறையும். மேலும், 1964-இல் தோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் 1968-இல் மெக்சிகோ சிட்டி ஒலிம்பிக் போட்டியிலும் பங்கெடுத்த அவர், பின்னைய போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 வினாடிகளில் முடித்துத் தேசியச் சாதனையைப் படைத்தார். குணாளன் 1968-இலும் 1969-இலும் ஆண்டின் ஆகச்சிறந்த விளையாட்டு வீரராகக் கௌரவிக்கப்பட்டார். விளையாட்டுத்துறையில் அவர் காட்டிய திறமைக்குச் சான்றாக, தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 15 பதக்கங்களையும் ஆசிய விளையாட்டுகளில் 5 பதக்கங்களையும் வென்றார்.
குணாளன் 1979-ஆம் ஆண்டு தம் 37-ஆம் வயதில் திடல்தடப் போட்டிகளில் கலந்துகொள்வதிலிருந்து ஓய்வுபெற்று எதிர்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டுவதில் ஈடுபட்டார். அவர் 1980-இல், உடற்பயிற்சிக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டபோது, அங்கு உடற்கூறு, உடற்பயிற்சித்துறையில் தனிக்கவனம் செலுத்தினார். உடலை உரமாகவும் திடமாகவும் வைக்க உதவும் பாடங்களை அவர் கற்பித்தார். பின்னர் 2005-இல், சிங்கப்பூர் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அது உள்ளூர் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தியது.
சிங்கப்பூரின் ஆகச்சிறந்த திடல்தட வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் அவர் பெற்ற பல பாராட்டுகளில் 2015-இல் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மதிப்புக்குரிய சேவைப்பதக்கமும் அடங்கும். சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் 2018-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் விளையாட்டு அருங்காட்சியகத்தில், அப்போது 76 வயதை எட்டியிருந்த குணாளனின் கை, கால் வார்ப்பைக் கொண்ட தனித்துவமான கலைப்பொருளை வெளியிட்டுக் கௌரவித்தது. சிங்கப்பூர் விளையாட்டு வீரர் ஒருவர் அவ்வாறு போற்றப்படுவது அதுவே முதல் முறை. அடுத்து, 2022-இல், அவர் சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் புகழரங்கில் சேர்க்கப்பட்டார்.
குணாளனின் பெயர், திடல்தடப் போட்டிகளில் அவர் செய்த அசாதாரணச் சாதனைகளால் மட்டுமன்றி, பிறரை ஊக்குவிக்கும் கல்வியாளராகவும் வழிகாட்டியாகவும் அவர் ஆற்றிய சேவைகள்மூலமும் நிலைத்திருக்கிறது.
மேல்விவரங்களுக்கு
Koh, Tommy, Timothy Auger and Jimmy Yap. Singapore: The Encyclopedia. Singapore: Editions Didier Millet, 2007.
Kunalan, C. Oral History Interview by Zarina bte Yusof, 22 November 2001. Transcript and MP3 audio, 08:29:20. National Archives of Singapore (accession no. 002572)
“For the long run.” Today, 1 April 2010, 72. (From Newspaper SG)
“Canagasabai Kunalan.” Singapore National Olympic Council. Accessed on 1 August 2025. https://www.singaporeolympics.com/olympians/canagasabai-kunalan/.
“Mr Canagasabai Kunalan.” Physical Education & Sports Teacher Academy. Accessed on 1 August 2025. https://pesta.moe.edu.sg/pesta/be-connected-with-the-fraternity/our-pioneers/mr-canagasabai-kunalan/.
Singapore Sports Hub. “Singapore Sports Hub Celebrates C. Kunalan’s Sporting Legacy.” Accessed on 1 August 2025. https://www.sportshub.com.sg/sites/default/files/2022-10/SINGAPORE%2BSPORTS%2BHUB%2BCELEBRATES%2BC.%2BKUNALAN’S%2BSPORTING%2BLEGACY.pdf.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |