இந்திய தேசிய ராணுவம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், சிங்கப்பூரின் போர்க்கால வரலாறு, சிங்கப்பூரில் தமிழர் வாழ்க்கை முதலியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் பிரிட்டன் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த சிங்கப்பூரில் 1942-ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திலிருந்து போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களைக் கொண்டே அந்த ராணுவம் தொடங்கப்பட்டது. ஆட்சேர்ப்பு, கொள்கைப் பிரச்சாரம், ராணுவத் திட்டமிடல் ஆகியவற்றிற்குச் சிங்கப்பூர் ஒரு முக்கிய மையமாக மாறியது. ஜப்பானிய ஆதரவுடன் இவ்வட்டாரத்தில் உருவாக்கப்பட்ட அந்த ராணுவம் சிங்கப்பூரின் போர்க்கால அனுபவத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்னும் குறிக்கோளை மனத்திற்கொண்டு சிலர் தாமாக முன்வந்து புதிய படையில் சேர்ந்தனர்; மற்றவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆட்சேர்ப்பு, தளவாட உதவி, உள்ளூர் ஆதரவாளர்களின் கூட்டமைப்புகள் ஆகியவற்றின்மூலம், பெரும்பாலும் தமிழர்களே அதிகமாயிருந்த இந்தியச் சமூகம், இந்திய தேசிய ராணுவத்தின் நோக்கத்தை ஆதரிப்பதில் முக்கியப் பங்காற்றியது.
தொடக்கக்காலத்தில், கேப்டன் மோகன் சிங் தலைமையில் ராணுவம் செயற்பட்டது. அவரைத் தொடர்ந்து 1943-இல் முக்கிய இந்திய தேசியவாதியான சுபாஷ் சந்திர போஸ் தலைமைப் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் ராணுவம் துரிதமாகச் செயற்படத் தொடங்கியது. போஸ் சிங்கப்பூர் இந்திய மக்களிடையே பேராதரவைப் பெற்றார். அவரது உரைகளும் முன்னெடுப்புகளும் பலரை இயக்கத்திற்குப் பங்களிக்கத் தூண்டின. அவரது தலைமையின்கீழ் இந்திய தேசிய ராணுவம் இந்தியாவுக்கு மட்டுமின்றிச் சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கு எதிர்ப்பு, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான அடையாளமாக மாறியது. ராணுவத்தின் முதல் பெண்கள் அணியான ஜான்சி ராணி படைப்பிரிவை அமைப்பதிலும் போஸ் முக்கியப் பங்கு வகித்தார். அப்படைப்பிரிவு சென்னையிலிருந்து குடியேறிய கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் தலைமையில் இயங்கியது. மேலும், சிங்கப்பூரில் செயற்பட்ட சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் பெண்கள் அமைப்புக்கும் போஸ் அவரைப் பொறுப்பாளராக நியமித்தார்.
சிங்கப்பூரிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் உள்ள தமிழர்கள், படைவீரர்களாக மட்டுமல்லாமல் மருத்துவர்கள், தகவல் தொடர்பு அதிகாரிகள், நிர்வாகிகள் என இந்திய தேசிய ராணுவத்திற்குப் பெரும் பங்காற்றினர். பலர் பர்மாவில் கடுமையான போரை எதிர்கொண்டனர்; போராட்டத்தில் ஏராளமானோர் தங்கள் உயிரையும் இழந்தனர். அவர்களின் தியாகங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றில் நீடித்து நிலைத்து நிற்கின்றன. இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் தமிழர்களின் தியாகங்கள் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூரப்படுகின்றன.
இந்திய தேசிய ராணுவத்தினரின் வீரத்தையும் தியாகத்தையும் கௌரவிப்பதற்காக எஸ்பிளனேடில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்குப் போஸ் 8 ஜூலை 1945 அன்று அடிக்கல் நாட்டினார். இருப்பினும், ஜப்பானியரின் தோல்விக்குப்பிறகு பிரிட்டிஷ் ஆட்சி திரும்பியதைத் தொடர்ந்து, நினைவுச்சின்னம் நிறுவப்பட்டு இரண்டு மாதங்களே ஆன நிலையில் அது இடிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 50-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1995-ஆம் ஆண்டில் ஒரு நினைவுக்குறியீடு நிறுவப்பட்டது. அது எஸ்பிளனேட் பூங்காவில் மூல நினைவுச்சின்னம் இருந்த இடத்திலேயே அமைக்கப்பட்டது. தற்போது ஐ.என்.ஏ. நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படும் அது, இந்திய தேசிய ராணுவத்தின் மரபையும் சிங்கப்பூர்ப் போர்க்காலத்தோடு அந்த ராணுவத்திற்கு இருந்த தொடர்பையும் என்றென்றும் மதிக்கும் சின்னமாக விளங்குகிறது.
இன்று, ஐ.என்.ஏ. நினைவுச்சின்னம் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடையாளமாகத் திகழ்கிறது. அது இந்திய சுதந்திரத்திற்கான பரந்துபட்ட இயக்கத்தை நினைவுகூர்வதோடு வரலாற்றில் சிங்கப்பூரின் பங்கையும் தமிழ்ச் சமூகத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அந்த நினைவுச்சின்னம் தியாகத்தின் அடையாளமாகவும் எல்லைகள் கடந்த ஒற்றுமையின் சின்னமாகவும் சுதந்திர உணர்வின் நீடித்த அடையாளமாகவும் நிற்கிறது.
மேல்விவரங்களுக்கு
“Indian National Army Memorial.” Roots.sg. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/historic-sites/indian-national-army-memorial
Tay, Lionel. “Indian National Army Monument, 1995: close-up,” National Library Board, 29 June 2007. https://www.nlb.gov.sg/main/image-detail?cmsuuid=74e12473-497f-4d24-8e0d-175f59d99a82
“INA Monument Connect Singapore with Subhas Chandra Bose.” Deccan Herald, 22 November 2019. https://www.deccanherald.com/world/ina-monument-connect-singapore-with-subhas-chandra-bose-778849.html
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |