விவியன் பாலகிருஷ்ணன்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (பி. 1961) 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 20 ஆண்டுகள் அமைச்சராகவும் பணியாற்றிவருகிறார். அதற்கு முன்னர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் முன்னணி கண் மருத்துவராகவும் விளங்கியவர். 

சிங்கப்பூரில் பிறந்த பாலகிருஷ்ணனின் தந்தை தமிழர், தாய் சீனர். ஆங்கிலோ-சீனப் பள்ளியிலும்  தேசிய தொடக்கக் கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர், 1980-இல் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில அதிபர் கல்விமான் விருது பெற்றார். பல்கலைக்கழகத்தில், மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பின்னர் சங்க மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். கண் மருத்துவத்தில் முதுநிலை நிபுணத்துவப் பயிற்சி பெற்ற அவர், 1991-இல் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் ஆஃப் எடின்பர்க் உறுப்பினராக அங்கீகாரம் பெற்றார்.

பாலகிருஷ்ணன் 2001-இல் அரசியலில் நுழைந்தார். அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஹோலண்ட்-புக்கிட் பாஞ்சாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவராகப் போட்டியின்றி வெற்றிபெற்றார். அவர் 2002-இல் தேசிய வளர்ச்சித் துணையமைச்சராகவும் சிங்கப்பூர் மீளுருவாக்கக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2004-இல் வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் ஆனார். 

பின்னர், வர்த்தக, தொழில் அமைச்சு, சமூக, இளையர் விளையாட்டுத்துறை அமைச்சு, தகவல், தொடர்பு, கலை அமைச்சு, சுற்றுப்புற நீர்வள அமைச்சு, வெளியுறவு அமைச்சு எனப் பலவற்றில் அவர் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். அக்காலக்கட்டத்தில், பல முக்கியத் திட்டங்களை அவர் செயல்படுத்தியிருக்கிறார். சுற்றுச்சூழல் நிர்வாகத்தில், சிங்கப்பூரின் கடல்நீர் சுத்திகரிப்பையும் நியூவாட்டர் உற்பத்தி ஆற்றலையும் கணிசமாக அதிகரித்தார். புதிய உணவங்காடி நிலையங்களின் கட்டுமானத்தைச் சுமார் 26 ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தொடங்கி, உள்ளூர் உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு ஆதரவளித்ததுடன் உணவுப்பொருள்கள் எளிதாகக் கிடைக்க வழிசெய்தார். 

துப்புரவுப் பணியாளர்களுக்குப் படிப்படியான சம்பள உயர்வு முறையை அவர் அறிமுகப்படுத்தினார்.  இந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மேம்பட்ட ஊதியமும் வேலை விதிமுறைகளும் பெறுவதற்கு அது உதவியாக இருந்தது. வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கு விரிவான சமூக உதவி வழங்க (கொம்கேர்) என்னும் சமூகநல நிதி அமைப்பை உருவாக்கினார். தேசிய விளையாட்டரங்கின் மறுசீரமைப்பை வழிநடத்தினார். சிங்கப்பூரின் அனைத்து வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் வேகமான, மலிவான இணையத் தொடர்புச் சேவையை வழங்கும் தேசிய விரிவலைக் கண்ணாடி இழைத் தொடர்புக் கட்டமைப்பை அமல்படுத்தினார். 

சௌந்தரநாயகி வயிரவனும் ஏ.பி. ராமனும் இணைந்து எழுதிய தமிழ்ச் சமுதாயமும் நவீன சிங்கப்பூரின் உருவாக்கமும் என்னும் நூலின் வெளியீட்டு விழாவில் (2018) பாலகிருஷ்ணன் தமது குடும்ப வரலாற்றைப் பகிர்ந்துகொண்டார். "நான் நான்காம் தலைமுறை சிங்கப்பூரர். என் கொள்ளுப்பாட்டனார் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலிருந்து வந்தார். நூறு ஆண்டுகளுக்குமுன் நாங்கள் சிங்கப்பூருக்கு வந்தோம். என் பாட்டனார் அரசாங்க அச்சகத்தில் பணிபுரிந்தார்," என்று கூறிய அவர், தமது தந்தை தமிழ் ஆசிரியரானார் என்றும் குறிப்பிட்டார். 

வெளியுறவு அமைச்சராக, இந்தியாவின் அதிபர் மாளிகையான ராஷ்டிரபதி பவனுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது தமது இந்தியப் பாரம்பரியத்தை அவர் நினைவுகூர்ந்தார்: "என் கொள்ளுப்பாட்டனார் தம் கொள்ளுப்பேரன் இந்திய அரசின் விருந்தினராக ராஷ்டிரபதி பவனுக்கு வரக்கூடும் என்று கற்பனைகூட செய்திருக்கமாட்டார் என்ற எண்ணம் நான் அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் என்னை நெகிழவைக்கிறது." என்றார். 

சிங்கப்பூரில் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாலகிருஷ்ணன், "நாம் இப்பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம், இப்பயணத்தை ஆவணப்படுத்துவோம், தமிழைக் கொண்டாடுவோம். தமிழ் 4,000 முதல் 5,000 ஆண்டுகளாக வாழும் மிகத் தொன்மையான செம்மொழிகளில் ஒன்று. இது கொண்டாடத்தக்கது," என்று கூறினார்.



மேல்விவரங்களுக்கு
“CV.” Vivian Balakrishnan. Accessed on 1 August 2025. https://vivian.balakrishnan.sg/about-2/. 
“Vivian Balakrishnan.” Wikipedia. Accessed on 1 August 2025. https://en.wikipedia.org/wiki/Vivian_Balakrishnan. 
Jamal, Ashraf. “How Tamils helped Singapore scale highs.” Connected to India, 17 May 2018. https://www.connectedtoindia.com/we-need-to-appreciate-the-sacrifices-of-our-ancestors-vivian-balakrishnan/. 
“Dr Vivian BALAKRISHNAN.” Prime Minister’s Office Singapore. Accessed on 1 August 2025. https://www.pmo.gov.sg/The-Cabinet/Dr-Vivian-BALAKRISHNAN. 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA