அபிஷேகநாதன், அலெக்ஸ்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

அலெக்ஸ் அபிஷேகநாதன் எனப் பரவலாக அறியப்படும் அலெக்சாண்டர் எஸ். அபிஷேகநாதன், (1926 - 2023) இசைத் துறையில் கலாசாரப் பதக்கம் பெற்றவர். "கிதாரின் தந்தை" என்று பெயர் பெற்றவர். செவ்விசைக் கிதார், இரட்டை பேஸ் (Bass) எனும் இரு இசைக்கருவிகளிலும் தேர்ச்சி பெற்ற முதல் உள்ளூர்க் கலைஞர் என்னும் புகழும் அவருக்குண்டு. அவர் குடும்பத்தின் ஏழு குழந்தைகளில் ஆறாவதாக 31 ஜனவரி 1926 அன்று பிறந்தார். அவரது தந்தை தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறி, அன்றையக் காலனித்துவ அரசாங்கத்தில் பணியாற்றிய அற்புதநாதன் அபிஷேகநாதன். அன்னை, மலேசியாவின் பினாங்கில், செல்வந்தத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் அபிஷேகநாதன்.  

அலெக்ஸ் அபிஷேகநாதனுக்கு, சிறுவயதிலிருந்தே குடும்பத்தின் இசைத் தாக்கம் இருந்தது. அவர் தம் தந்தை, காலையில் கிறிஸ்துவப் பாடல்களைப் பாடுவதையும் வயலின், யூக்கலேலி ஆகிய தந்திக் கருவிகளை வாசிப்பதையும் கேட்டு வளர்ந்தவர். மேலும் அவரின் மூத்த சகோதரர்களான பால், ஜெரார்ட், ஜெஃப்ரி ஆகியோரும் இசைக்கலைஞர்களாக இருந்தனர். அந்த தொடக்கக்காலக் குடும்பத் தாக்கங்கள், வாழ்நாள் முழுதும் அவர் இசை மீது வேட்கைகொள்ளக் காரணமாயிருந்தன. தமக்கிருந்த இசையறிவைக்கொண்டு, தம் 15-ஆம் வயதிலேயே, கிதார், பியானோக் கருவிகளை வாசிக்கவும் தானே கற்றுக் கொண்டார். அவர் பள்ளியிலேயே பாடவும் இசைக் கருவிகளை வாசிக்கவும் செய்தார்.  

ஜப்பானியர் ஆக்கிரமிப்பின்போது, அபிஷேகநாதனின் வலுவான இசைத் திறன், அப்போதைய நெருக்கடிச் சூழ்நிலைக்குக் கைகொடுத்தது. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தால் அமைக்கப்பட்ட ஆசாத் ஹிந்த் வானொலி நிலையத்தின் இந்திய இசைக்குழுவில் கிதார் வாசிக்கும் பணி அவருக்குக் கிட்டிற்று. அந்த நிலையம், இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் ஆதரவான பாடல்களை ஒலிபரப்பியதோடு, ஆங்கிலேயருக்கு எதிரான பிரசாரங்களையும் ஒளிபரப்பிற்று. அவரின் பாட்டுத் திறன், ஜப்பானிய மொழிப் பரிச்சயம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஜப்பானிய அதிகாரிகள், அபிஷேகநாதனைச் சிங்கப்பூரில் செயல்பட்ட சியோனன் ஒலிபரப்பு நிலையத்தில், ஜப்பானிய நாட்டுப்புற, பிரச்சாரப் பாடல்களைப் பாடும்படி பணித்தனர். 

அவர் பள்ளிப்படிப்பை முடித்ததும், ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, 1947 முதல் 1981 வரை ஆசிரியராகவும், பள்ளி முதல்வராகவும், இறுதியில் பள்ளிகளின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். இடையே, 1961-இல், அவர் இசைக் கல்வியைத் தொடர இங்கிலாந்துக்குச் சென்றார். அதன் பிறகு, கல்வி அமைச்சின் இசைப் பிரிவுக்குப் பணி மாற்றப்பட்டார். அவர் அங்கு “கிதாரோடு இசை விருந்தளிப்பது” என்ற தலைப்பில் 26-பாக தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு. அந்தத் தொடரை உருவாக்கத் தூண்டியவர் அன்றையக் கல்வி அமைச்சர் கோ கெங் ஸ்வீ. தொடர் 1970 முதல் 1971 வரை இடம்பெற்றது. அந்தத் தொடரைத் தயாரித்ததுடன், இரு பாடப்புத்தகங்களையும் அவர் எழுதினார். அத்தகைய முயற்சிகள் இறுதியில் அவருக்கு "சிங்கப்பூரின் செவ்விசைக் கிதார் விற்பன்னர்" என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

கல்வி அமைச்சின் பொறுப்புகளைத் தவிர, அபிஷேகநாதன் 1967-இல் சிங்கப்பூர் செவ்விசைக் கிதார் சங்கத்தையும், 1981-இல், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஜீனஸ் கிதார் இசைக்குழுவையும் நிறுவினார். தொடக்கத்தில் 10க்கும் குறைவான ஆர்வலர்களைக் கொண்ட ஜீனஸ், 50 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக வளர்ந்தது. பல்வகை இசைத் திறன்களைக் கொண்ட குழு, சிங்கப்பூரின் தலைசிறந்த கிதார் குழுக்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. சிதார், எர்ஹு, கிதார் எனப் பல இசைக்கருவிகளைச் சேர்த்தமைத்த இவரது “ஹுவான் யின்-வணக்கம் என்னும் இசைத் தொகுப்பு பெரும்புகழ் பெற்றது. அவரின் இளம்பருவத்தில் கேட்டுப் பழகிய இந்தியப் பணியாளர்களின் பாடல்களில் இருந்த தாளலயத்துடன், சீன மெல்லிசையைப் பதமாக இணைத்த அந்த இந்திய-சீன நாட்டுப்புற இசை “தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்ற உலக இசை” என இசை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

கல்வியிலும் இசையிலும் அவர் ஆற்றிய அருஞ்சேவைகளைப் பாராட்டி, அவருக்கு 1981-இல் நீண்டகாலச் சேவைப் பதக்கமும், 1988-இல் கலாசாரப் பதக்கமும் வழங்கப்பட்டன. அலெக்ஸ் அபிஷேகநாதன், 17 மார்ச் 2023 அன்று, தம் 97-ஆம் வயதில் மரணமுற்றார். அவர் மகள் ஜெசிந்தா, மூத்த சகோதரர் பால் ஆகியோரும் சிங்கப்பூர் இசை உலகில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர்களாக விளங்குகிறார்கள்.



மேல்விவரங்களுக்கு
Abisheganaden, Alex. Music Making with the Guitar. Vol. 1. Singapore: ETV Service, 1970. (Call no.: RSING 787.6151 ABI)
Abisheganaden, A. “60 years playing the high notes.” The Straits Times, 12 June 1983, 24. (From Newspaper SG)
Loh, Joy. “The Guitar Man: Alex Abisheganaden.” BiblioAsia 13, no. 1 (Apr–Jun 2017), 12 April 2017. https://biblioasia.nlb.gov.sg/vol-13/issue-1/apr-jun-2017/guitar-man/
Abisheganaden, Paul. Oral History Interview by Jesley Chua Chee Huan, 9 March 1993. Transcript and MP3 audio, 24:21:45. National Archives of Singapore (accession no. 001412)

Chang, You Liang. “Alex Abisheganaden,” Singapore Infopedia. National Library Board Singapore. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=e831e20c-b8cd-44d3-bd85-36abb2049a92 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA