பன்முகத் திறனாளரான ந. பாலபாஸ்கரன் (1941-2023), சிங்கப்பூர், மலேசியத் தமிழ் ஒலி, ஒளிபரப்புத்துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியவர். சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு, இதழியல் வரலாறு, சமூகத் தலைவர்கள் வரலாறு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுநூல்களை வெளியிட்டவர். மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
இந்தியாவில் கதிர்காமம் கிராமத்தில் பிறந்த பாலபாஸ்கரன், 10 வயதில் மலாயாவின் கூலிம் நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு சீனியர் கேம்பிரிட்ஜ் நிலைவரை படித்தார். அதன்பின்னர் இந்தியாவில் புகுமுகக் கல்வி பெற்றார். அக்காலக்கட்டத்தில் அவருக்கு இலக்கிய ஆர்வமும் அதிகரித்தது. தமிழகத்தின் முத்தாரம் இதழில் 1962-இல் அவரது முதல் கட்டுரை வெளியானது. பின்னர், 1963-இல் ரேடியோ மலாயாவில் ஒலிபரப்பு உதவியாளராக முழுநேர வேலைக்குச் சேர்ந்தார். பல்கலைக்கழகக் கல்வியை 1960-களின் இறுதியில் தொடர்ந்தபோது வானொலியில் பகுதிநேர ஊழியரானார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் இளநிலை (சிறப்புத் தகுதி) பட்டத்தையும் முதுநிலைப் பட்டத்தையும் 1970-களில் பெற்றார். முதுநிலைப் படிப்பின்போது அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
சிங்கப்பூருக்கு 1982-இல் குடிபெயர்ந்த பாலபாஸ்கரன், சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் செய்தி ஆசிரியராகச் சேர்ந்தார். சுமார் 18 ஆண்டுகள் பணியாற்றி, மூத்த செய்தி ஆசிரியராக 2000-இல் ஓய்வு பெற்றார். பிறகு, 2012 வரை, பகுதிநேரமாக ஊடகத் துறையில் பணியாற்றினார். அப்போது, 2004 முதல் 2008 வரை, அவர் தயாரித்த நடப்பு விவகார நிகழ்ச்சி 30 நிமிடங்கள் சிறந்த எழுத்துப் படைப்புக்கான விருதை நான்கு ஆண்டு தொடர்ந்து வென்றது. அவரது குரல்வளமும் எழுத்தாற்றலும் அவரது தயாரிப்புகளின் தாக்கத்தை அதிகரித்தன.
மலேசியத் தமிழ்ச் சிறுகதை (1995) பாலபாஸ்கரனின் முதல் நூல். அவரது முதுநிலை ஆய்வேட்டின் அடிப்படையில் அமைந்த அந்நூலை விரிவாக்கி The Malaysian Tamil Short Stories (1930-1980) – A Critical Study (2006) என்னும் ஆங்கில நூலை வெளியிட்டார். இவ்வட்டார இலக்கிய வரலாற்றாய்வில் தவிர்க்க இயலாத நூலாக அது ஆகியிருக்கிறது. கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை (2016) நூலுக்காக 2018-ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றார். சிங்கப்பூர் – மலேசியா தமிழ் இலக்கியத் தடம்: சில திருப்பம் (2018) அவரது மறைவுக்குமுன் வெளியான கடைசி நூல். இறுதி ஆண்டுகளில் உடல் நலிவுற்றிருந்த பாலபாஸ்கரன், சிங்கப்பூரில் 2023-இல் காலமானார்.
சிங்கப்பூரின் முதல் சிறுகதை எது என்ற விவாதத்தைக் கூர்மைப்படுத்தியது, ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் வெளியான தமிழ் இதழ்களை கவனப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பங்களிப்புகளின் வழியாக, ஒரு தொழில்முறை வரலாற்று ஆய்வாளராக அல்லாத நிலையிலும், இவ்வட்டார இலக்கிய வரலாற்றிலும் இதழியல் வரலாற்றிலும் முன்னோடி ஆய்வுகளைச் செய்தவராக நினைவுகூரப்படுகிறார் ந. பாலபாஸ்கரன்.
மேல்விவரங்களுக்கு
Baskaran, Bala. The Malaysian Tamil Short Stories (1930-1980) - A Critical Study. Self Published, 2006
Bala Baskaran, Said Abdullah, and Arun Senkuttuvan. VR Nathan - Community Servant Extraordinary. Singapore: ISEAS Publishing, 2012
Baskaran, Bala. “My Writings So Far (Under Different Names,” Bala Baskaran, 6 May 2008. https://balabaskaran24.blogspot.com/2008/05/my-writings-so-far-under-different.html
பாலபாஸ்கரன். சிங்கப்பூர் - மலேசியா தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பம். சொந்த வெளியீடு, 2018. (Call no.: RSING Tamil 894.81109 BAL)
பாஸ்கரன், ந. மலேசியத் தமிழ்ச் சிறுகதை. புதுச்சேரி : அரசி பதிப்பகம், 1995
கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வை. சொந்த வெளியீடு, 2016
சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர். தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர் அ.வீரமணி, மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம். சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், 2019
நா. கோவிந்தசாமி எனும் படைப்பாளி. தொகுப்பாளர்கள்: புஷ்பலதா நாயுடு, சுந்தரி பாலசுப்ரமணியம். சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரிய வெளியீடு, 2010. (Call no. RSING Tamil 894.811471 NAK)
ந. பாலபாஸ்கரன். Tamil Wiki, published 3 June 2023. https://tamil.wiki/wiki/ந.பாலபாஸ்கரன்
சிவானந்தம் நீலகண்டன். “பாலபாஸ்கரன் ஆய்வுகள்: அக்கறையும் அணுகுமுறையும்”. Published 1 July 2021. https://sivananthamneela.wordpress.com/2021/07/01/பாலபாஸ்கரன்-ஆய்வுகள்-அக/
ந.பாலபாஸ்கரன். “இலக்கியம் நடந்து சென்ற பாதையில்தான் வாழ்க்கை இருக்கிறது”. வல்லினம், 4 January 2018. https://vallinam.com.my/version2/?p=4918.
லதா. “ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்”. வல்லினம், 1 March 2023. https://vallinam.com.my/version2/?p=8987.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |