முத்துஸ் கறி உணவகம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

முத்துஸ் கறி, 1969-இல் கிள்ளான் ரோட்டில் முத்து அய்யாக்கண்ணுவால் நிறுவப்பட்ட உணவகம். தென்னிந்திய பாணியில் தயாரிக்கப்படும் மீன்தலைக் கறிக்குப் புகழ்பெற்று விளங்கும் இவ்வுணவகம், பலமுறை மிச்செலின் வழிகாட்டியில் இடம்பெற்றுள்ளது.உணவுப் புத்தாக்கம் மட்டுமின்றி, உணவில் சேர்க்கப்படும் வண்ணப்பொருள்களைத் தவிர்ப்பதையும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதையும் கொள்கைகளாகக் கொண்டு இந்த உணவகம் செயல்படுகிறது.

முத்து மாக்கான் ஷாப் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வுணவகம் சிறிய கோப்பிக் கடையாக இருந்தபோது முத்து மீன்தலைக் கறியை விற்கத் தொடங்கினார். அக்காலக்கட்டத்தில் சீன, நோன்யா சமூகங்களைச் சேர்ந்தவர்களும் மீன்தலைக்கறியை விற்றுவந்ததால், தமிழ்நாட்டின் செட்டிநாட்டுச் சமையல் சாயலில் சொந்தப் பாணி மீன்தலைக்கறியை முத்து உருவாக்கினார். இது வியாபாரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிறகு, 1974-இல் 78 ரேஸ் கோர்ஸ் ரோடு என்னும் முகவரிக்கு உணவகம் மாற்றப்பட்டது; 1982-இல் மேலும் விரிவுபடுத்தப்பட்டு முத்துஸ் கறி எனப் பெயர் மாற்றம் கண்டது.

நிறுவனர் முத்து 1996-இல் மறைந்தபிறகு அவரது மகன் காசி விஸ்வநாதன் உணவகத்தின் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டில் பெருவிரைவுப் போக்குவரத்து நிலையக் கட்டுமானப்பணியின் காரணமாக ரேஸ் கோர்ஸ் ரோட்டின் சில பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டபோது, 138 ரேஸ் கோர்ஸ் ரோடு என்னும் முகவரிக்கு உணவகம் இடம்மாறியது. ஏழு மில்லியன் வெள்ளிச் செலவில் 6,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 300 பேர் அமரக்கூடிய நவீன உணவகமாக அது 2 ஜூன் 2004 அன்று திறக்கப்பட்டது. உணவுப் பட்டியலில் வட இந்திய உணவு வகைகளுடன் மதுபான வகைகளும் சேர்க்கப்பட்டன.

முத்துஸ் கறி சிங்கப்பூர் உணவு, பொழுதுபோக்கு வழிகாட்டியில் 1993-இல் சிறந்த ஐந்து உணவகங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது. சிங்கப்பூர் உணவுத் திருவிழாவில் 1994, 1995-ஆம் ஆண்டுகளில் முத்துஸ் மீன்தலைக்கறி ஆக அதிகமாக விரும்பப்பட்ட உள்ளூர் உணவுகளுள் ஒன்றாக இருந்தது. மாக்கான்சூத்ரா மரபார்ந்த உணவுகளுக்கான ஆஸ்கார் (2003), மிச்செலின் வழிகாட்டி (2018 – 2023) உள்ளிட்ட பட்டியல்களில் முத்துஸ் கறி இடம்பெற்றது அதற்குக் கிடைத்துள்ள பரவலான அங்கீகாரத்தைக் காட்டுகிறது.

முத்து அய்யாக்கண்ணுவின் சகோதரர் செல்லப்பன் சங்கரநாதன், பனானா லீஃப் அப்போலோ உணவகத்தை 1974-இல் தொடங்கினார். பனானா லீஃப் அப்போலோவும் மீன்தலைக் கறிக்குப் புகழ்பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.



மேல்விவரங்களுக்கு
“The Evolution of Muthu’s Curry,” Muthu’s Singapore. Accessed on 1 August 2025. https://www.muthuscurry.com/page/brand-story
“Muthu’s Curry,” Michelin Guide. Accessed on 1 August 2025. https://guide.michelin.com/sg/en/singapore-region/singapore/restaurant/muthu-s-curry-little-india
“Awards,” Muthu’s Singapore. Accessed on 1 August 2025. https://www.muthuscurry.com/page/awards
Nor-Afidah Abd Rahman and Marsita Omar. “Muthu’s Curry,” Singapore Infopedia. National Library Board Singapore. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=fc621f68-3e06-4b71-81f0-8d390fd26507
புதிய பாணியில் முத்துஸ் கறி. CCPL. 28 August 2004. https://ccpl.ninjaos.com/media/ckfinder/files/Tamil%20Article%20.pdf

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA