சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தில் தமிழர்கள் ஆகப் பெரிய பிரிவினராக இருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தால் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், தமிழ் மக்கள்தொகை பற்றிய தரவுகள் திட்டவட்டமானவையாக இல்லாததோடு, இந்தியர்கள், தமிழர்கள் பற்றிய தெளிவான வரையறைகளும் இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, இலங்கைத் தமிழர்கள், இந்தியர்களாகவோ இந்தியத் தமிழர்களின் ஒரு பிரிவினராகவோ அடையாளப்படுத்தப்பட விரும்பவில்லை. அவர்கள் காலனித்துவக் காலத்திலிருந்து ஒரு தனி அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றனர். ‘இந்தியர்’ என்னும் அடையாளம், சில மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் பாகிஸ்தானியர்கள், வங்காளதேசிகள், இலங்கையர்களை உள்ளடக்கிய ஓர் இன வகையாகப் பயன்படுத்தப்பட்டது. மக்கள்தொகைப் புள்ளிவிவரத்தில் தமிழர்கள், இந்தியர்கள் என்ற வகைப்பாடு உள்ளார்ந்த சிக்கல்களைக் கொண்டுள்ளதால், எண்ணிக்கைகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியுள்ளது. பின்வரும் விவரங்கள், 1819-இல் சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாக நிறுவப்பட்டதிலிருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்கள்தொகையில் ஏற்பட்ட வளர்ச்சியை மேலோட்டமாகக் காட்டுகின்றன.
சிங்கப்பூரில் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1824-இல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து 1860 வரை 13 மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. ஆரம்பகால மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை குன்றியும் போதிய விவரங்களின்றியும் இருப்பதாகக் கருதப்படுகின்றன. சிங்கப்பூரின் முறையான முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1871-இல் நீரிணைக் குடியேற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. அப்போதிருந்து 1931 வரை பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இரண்டாம் உலகப்போர் குறுக்கிட்டதால், அடுத்தடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் 1947, 1957-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூர், சுதந்திரத்திற்குப் பிந்தைய தன் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 1970-ஆம் ஆண்டில் நடத்தியது. அதைத் தொடர்ந்து 1980, 1990, 2000, 2010, 2020-ஆம் ஆண்டுகளில் மேலும் ஐந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
முன்னர் குறிப்பிடப்பட்ட 1824-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், மொத்த மக்கள் தொகையான 10,683-இல் 756 பேர் இந்தியர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஆயினும் தமிழர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரான செட்டியார் குடியேறிகளின் முதல் அலை, 1820-களில் தமிழ்நாட்டிலிருந்துசிங்கப்பூருக்கு வந்ததாக நம்பப்படுகிறது. அதே காலக்கட்டத்தில், தமிழ் முஸ்லிம்களும் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கினர். சிங்கப்பூரில், 1860 வாக்கில் சுமார் 13,000 இந்தியர்கள் இருந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் தென்னிந்தியர்கள், பெரும்பாலும் தமிழர்கள். அப்போது சீனர்களுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய சமூகமாக இந்தியச் சமூகம் இருந்தது. இருப்பினும், அந்த நிலை 1870-களில் மாறத் தொடங்கியது. அன்றிலிருந்து சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் அடுத்தபடியாக மூன்றாவது பெரிய சமூகமாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் தமிழர்கள், பிற இந்தியர்களின் விகிதம் காலப்போக்கில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்களின் மக்கள்தொகை விகிதத்தை முறையே 75:15:8 விழுக்காடு என்ற அளவில் வைத்திருக்க அரசாங்கம் ஒரு பொதுவான திட்டத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், குடிநுழைவுக் கொள்கைகளும் போக்குகளும் எப்போதும் அந்த விகிதாச்சாரத்தைப் பின்பற்றுவதில்லை. பொருளாதாரத் தேவைகள் சில நேரங்களில் இன அடிப்படையிலான மக்கள்தொகை விழுக்காட்டுப் பேணலைவிட முன்னுரிமை பெறுகின்றன. மேலும், அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள், சிங்கப்பூரில் தொழில் நிபுணத்துவ, உயர்திறன்மிக்க ஊழியர் தேவையை நிரப்பக் கூடியவர்களாக உள்ளனர். காலனித்துவ ஆட்சியின் தொடக்கத்தில் இங்குவந்த ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்களிலிருந்து அவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். அதோடு, ஒவ்வோர் இனப்பிரிவின் கருவள விகிதமும் மக்கள்தொகை விகிதத்தை ஓரளவு பாதிக்கிறது. இந்தியப் பெண்களின் கருவள விகிதம் 2020-களில் 1 ஆக இருந்தது. அது மலாய்க்காரர்களைக் காட்டிலும் சற்றுக் குறைவு, சீனர்களைக் காட்டிலும் சற்று அதிகம். எனவே, மக்கள்தொகை விகிதத்தில் உள்ளூர்ப் பிறப்புவிகிதம் சார்ந்த ஏற்றம் சாத்தியமில்லை. அதன் விளைவாக, சிங்கப்பூரில் இந்திய மக்கள்தொகை விகிதத்தைக் கட்டிக்காப்பதில் குடியேற்றம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றக்கூடும்.அரசாங்கத்தின் கவனம் ‘தமிழ் மக்கள்தொகை’ என்பதைவிட ‘இந்திய மக்கள்தொகை’ என்பதில் இருந்தால் இந்திய மக்கள்தொகையில் தமிழர் எண்ணிக்கை குறைந்துவிடுமோ என்றும் சில கவலைகள் உள்ளன.
பின்வரும் அட்டவணை இதுவரை கிடைத்த அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது.
சிங்கப்பூரில் 19-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழர் மக்கள்தொகை
|
ஆண்டு |
சிங்கப்பூரில் தமிழர்களின் எண்ணிக்கை |
சிங்கப்பூர் இந்தியர்களில் தமிழர்களின்விழுக்காடு (%) |
சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் தமிழர்களின் விழுக்காடு (%) |
|
1871 |
9,248 |
86.0 |
9.52 |
|
1881 |
10,507 |
86.6 |
7.55 |
|
18911 |
12,503 |
78.0 |
6.77 |
|
1901 |
14,541 |
69.44 |
6.41 |
|
1911 |
19,378 |
81.6 |
6.39 |
|
1921 |
25,823 |
79.6 |
6.17 |
|
1931 |
37,293 |
72.5 |
6.66 |
|
1947 |
42,240 |
61.3 |
2.582 |
|
1957 |
81,672 |
63.1 |
5.80 |
|
1970 |
99,616 |
68.7 |
4.83 |
|
1980 |
98,772 |
63.9 |
4.09 |
|
1990 |
122,038 |
64 |
4.07 |
|
2000 |
122,038 |
63.9 |
3.01 |
|
2010 |
188,591 |
54.2 |
3.71 |
|
2020 |
198,449 |
54.8 |
4.90 |
ஆதாரம்: சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை
1 Figure this year is for ‘Tamils and Other Natives of India’ including Punjabis and Parsees
2 Anomalous data
மேல்விவரங்களுக்கு
Department of Statistics Singapore. Accessed on 1 August 2025. https://www.singstat.gov.sg
Schiffman, Harold F. Tongue-Tied in Singapore: A Language Policy for Tamil?. Philadelphia: University of Pennsylvania - South Asia Studies, 1994. https://ccat.sas.upenn.edu/~haroldfs/public/tongueti.htm. Leng, Ang Seow. “Head Count: The History of Census-taking in Singapore,” Biblioasia, 21 January 2020. https://biblioasia.nlb.gov.sg/vol-15/issue-4/jan-mar-2020/head-count-history/
LePoer, Barbara Leitch, ed. Singapore - A Country Study, 2nd ed. Singapore: Federal Research Division Library of Congress, 1989. Dunlop, S., W.A. Pickering, V. Cousins, H. Heweston, A. Knight and A.P. Talbot.Report on the Census of Singapore, 1881.
Singapore: Straits Settlements Government Press, 1882. Merewether, E.M. Report on the Census of the Straits Settlements taken on the 5th April 1891. Singapore: Government Printing Press, 1892
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |