சந்திர மோகன், எஸ்.



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூர்த் தொலைக்காட்சித் துறை முன்னோடிகளுள் ஒருவரான எஸ். சந்திர மோகன் (1938-2010) "ஒளிபரப்பு ஊடகத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொடக்கக்காலத் தயாரிப்பாளர்களுள் ஒருவர்.

இந்தியாவின் கீழ்வேளூரில் பிறந்த சந்திர மோகன், 1942-இல், தமது மூன்றாம் வயதில் பெற்றோருடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். ராஃபிள்ஸ் பள்ளியில் கல்விகற்ற அவர் பிறகு 1962-இல் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் இளநிலைப் பட்டம் (சிறப்புத்தகுதி) பெற்றார். 

சந்திர மோகன் 1963-இல் அன்றைய ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூராவில் சேர்ந்து தமது ஒளிபரப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். தொலைக்காட்சிக் குழுவில் இருந்த சில தமிழர்களுள் ஒருவராக அவர் தொடக்கக்காலத் தமிழ்த் தொலைக்காட்சித் தயாரிப்புகள் சிலவற்றில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும், விரைவிலேயே அவர் ஆங்கிலமொழிப் பகுதிக்கு மாறித் தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கேயே செலவிட்டார். எனினும், செண்ட்ரல் புரொடக்‌ஷன்ஸ் யூனிட் (சி.பி.யூ.) தலைவராக நியமிக்கப்பட்டபிறகு  ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளரானார். சி.பி.யூ. பின்னாளில் நடப்பு விவகாரப் பிரிவு எனப் பெயர் மாற்றம் கண்டது. பின்னர் அவர் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதுவே தம் தொழில் வாழ்க்கையில் அவர் எட்டிய உச்சப் பதவி.

ஒளிபரப்புத் துறையில் அவர் அறிமுகப்படுத்திய புத்தாக்கங்களுக்காகவும் தர நிலைகளுக்காகவும் இன்றுவரை பெரிதும் மதிக்கப்படுகிறார். அவரது தலைமையின்கீழ், பல புதிய நிகழ்ச்சிகளும் நிகழ்ச்சி வடிவங்களும் நடைமுறைக்கு வந்தன. அவற்றில் மிக முக்கியமானது ஆவணப்பட வடிவம். தொடக்கத்தில் வெறும் விளக்கப்படப் பேச்சுகளாக இருந்த நிகழ்ச்சிகள் பின்னர் முழு நீள ஆவணப்படத் தயாரிப்புகளாக உருவெடுத்தன. பொதுச்சேவை ஒளிபரப்பின் தாரகமந்திரங்களான அறிவித்தல், கற்பித்தல், மகிழ்வித்தல் ஆகியவற்றை அந்த வரிசையிலேயே உறுதியாகக் கடைப்பிடித்த சந்திர மோகன், அதேவேளையில், சுவையற்ற தகவல்களையும் மக்கள் ஆர்வத்துடன் பார்க்கும், கேட்கும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைத்தார். செயல்திறனில் உயர்தரத்தை எட்டியிருந்த அவர் அத்தகைய தரத்திற்கு மேம்படப் பலருக்கும் வழிகாட்டியாக இருந்தார்.

அவரது தலைமையின்கீழ், அதுவரை கண்டிராத பல நடப்பு விவகார நிகழ்ச்சிகள் வெளிவந்தன. அவை பொதுமக்களைச் சென்றடைந்து அதிகமானோரைச் சிந்திக்கவைத்தன. சிங்கப்பூரின் முதல் வெளிநாட்டுச் சேவையான ரேடியோ சிங்கப்பூர் இன்டர்நேஷனல் 1994-இல் தொடங்கப்பட்டதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

அரசியல் தலைவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது சிங்கப்பூரில் நடப்பு விவகாரப் பிரிவை நடத்துவதிலுள்ள சவாலான அம்சங்களில் ஒன்று. பிரதமர், பிற அமைச்சரவை அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்குச் சந்திர மோகன் பெரிதும் நாடப்பட்டார். மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததை அறிவிக்கும் 1965 பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் லீ குவான் யூ குரல் தழுதழுத்துக் கண்கலங்கியபோது அதையும் பதிவுசெய்ய சந்திர மோகன் முடிவெடுத்தார். பின்னர்ப் பதிவை ஒளிபரப்பலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை லீ ஒளிபரப்பு நிபுணர்களிடம் விட்டுவிட்டபோது, சந்திர மோகன் அதை ஒளிபரப்பவேண்டும் என முடிவெடுத்தார். அந்த ஒளிபரப்பு சிங்கப்பூரின் அரசியல், ஒளிபரப்பு வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்டதாகவும் மிகவும் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகவும் ஆனது.

சந்திர மோகன் 2007-இல் ஓய்வு பெற்றபோது அவர் மூன்று பிரதமர்களுக்குச் சேவை செய்திருந்தார். நீண்டகால உடல்நலக் குறைவுக்குப்பிறகு 71 வயதில் காலமானார். தங்கள் இரங்கல் செய்திகளில், மூன்று பிரதமர்களும் சந்திர மோகனின் தொழில்முறை ஆலோசனைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தனர். லீ குவான் யூ, “மலேசியாவை விட்டு சிங்கப்பூர் வெளியேறிய மறுநாள் எனது தொலைக்காட்சிச் சந்திப்பு அவருடைய குழுவினரால் இயக்கப்பட்டது. என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாததால் நான் பாதியிலேயே சந்திப்பை நிறுத்தவேண்டியிருந்தது. அதில் ஒரு பகுதியை ஒளிபரப்ப அவர் முடிவு செய்தார். பின்னாளில் எனக்குக் கிடைத்த கருத்துகள் அவர் எடுத்தது சரியான முடிவு எனக் காட்டின” என்றார்.

லீக்குப் பிறகு பிரதமரான கோ சோக் டோங், "அரசியல் ரீதியாகக் கூர்மையான, மிகவும் மதிக்கப்படும் ஊடக முன்னோடி" மட்டுமல்லாமல், "இன்றைய பல ஒளிபரப்பாளர்களுக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் வழிகாட்டியாகவும்" இருந்ததற்காக அவரைப் பாராட்டினார். சந்திர மோகன் சேவையாற்றிய இறுதிப் பிரதமர் லீ சியன் லூங், "நாடாளுமன்றத்தில் இன்று" தொலைக்காட்சித் தொடரைத் தொடங்கியதற்காக அவரைப் பாராட்டினார். அது "மிகவும் சவாலான வேலை" என்று குறிப்பிட்ட அவர், "மணிக்கணக்கில் நீடிக்கும் நீண்ட, சிக்கலான விவாதங்களை 45 நிமிடத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகப் பார்க்கக்கூடிய வடிவில் சுருக்கி அன்றிரவே ஒளிபரப்பவேண்டும்" என விவரித்தார்.

ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் தேசிய தினக் கூட்டம், தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள், பொதுத் தேர்தல்களின்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் முதலிய மிக முக்கியமான பரவலாகப் பார்க்கப்பட்ட தேசிய நிகழ்ச்சிகளைச் சந்திர மோகன் வடிவமைத்தார்.

சிங்கப்பூர் ஊடகத்துறைப் புகழரங்கு 2022-இல் திறக்கப்பட்டபோது, ஒளிபரப்பு ஊடகத்தை உருமாற்றம் செய்ததற்காக, மறைந்த சந்திர மோகன் அவ்வரங்கில் சேர்க்கப்பட்டார். 



மேல்விவரங்களுக்கு
Tay, Philip. “Another Caldecott Hill Old Timer Dies - S. Rajaratnam.” Memories of Caldecott Hill, 28 August 2010. https://memoriesofcaldecotthill.blogspot.com/2010/08/another-caldecott-hill-old-timer-dies-s.html
Goh Chok Tong and Lee Kuan Yew. “Condolence Letters from Senior Minister Goh Chok Tong and Minister Mentor Lee Kuan Yew to Mrs. Rajaratnam.” Prime Minister’s Office Singapore, 31 August 2010. https://www.pmo.gov.sg/Newsroom/condolence-letters-senior-minister-goh-chok-tong-and-minister-mentor-lee-kuan-yew-mrs
“Lights, Camera, Action on Caldecott.” meWATCH. Accessed 1 August 2025. https://www.mewatch.sg/show/Lights-Camera-Action-On-Caldecott-413143
Chandramohan, S. Oral history interview by Patricia Lee, 5 June 2004. Transcript and MP3 audio, 12:50:14. National Archives of Singapore (accession no. 002848)

Nag, Abhijit. “Broadcast Guru.” In Inspirations of a Nation, pp. 26-29. Singapore: World Scientific Publishing, 2006. https://doi.org/10.1142/9789813141063_0007

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.



Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA