கே.எஸ். மூர்த்தி என அழைக்கப்படும் கணபதி சத்திய மூர்த்தி (1932 - 2010), 1964 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இரண்டு சிங்கப்பூர் ஜூடோ வல்லுநர்களுள் ஒருவர். மூர்த்தி, 14 வயதிலிருந்தே தற்காப்புக் கலைகளைப் பயிலத் தொடங்கினார். பின்னர், 1956-இல் மலாயா ஆயுதப் படையில் லெப்டினண்ட் பதவியில் இருந்தபோது, சிலாங்கூர் ஜூடோ கிளப்பில் சேர்ந்தார். வெறும் 18 மாதங்களில் தனது கருப்புப் பட்டையைப் பெற்ற பிறகு, அவர் 1958-இல் சிங்கப்பூருக்கு வந்து, இச்சிஜிமா, நிஷிமுரா ஆகியோரின்கீழ் பயிற்சி பெற்றார். ஜப்பானின் புடோ பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அவர் தனது திறமைகளுக்கு மேலும் மெருகேற்றினார். ஜூடோவைத் தவிர, குத்துச்சண்டை, ஜூஜிட்ஸு, கராத்தே, டேக்வாண்டோ, ஹாப்கிடோ முதலிய தற்காப்புக் கலைகளைக் கற்றதோடு உடற்கட்டழகிலும் மூர்த்தி ஈடுபாடுகொண்டார்.
பின்னர், 1964 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், இடைநிலைஎடைப் பிரிவில், மூர்த்தி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். அவர் இரண்டு போட்டிகளில் போராடி, முதலில் பிலிப்பீன்ஸிலிருந்து வந்த எதிராளியை வென்றாலும் இரண்டாவது ஆட்டத்தில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த போட்டியாளரிடம் தோற்றார். மறு ஆண்டே, கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசியத் தீபகற்ப விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். பல ஆண்டுகள் கழித்து, 1981 வாக்கில், மூர்த்தி சிங்கப்பூர் ஜூடோ கூட்டமைப்பின் தலைவரானார். ஜூடோ, ஜூஜிட்ஸு இரண்டிலும் ஆசியாவின் மிக உயர்ந்த கருப்புப் பட்டைத் தரவரிசையில் ஒன்பதாம் நிலை என்னும் தகுதியைப் பெற்றிருந்தார். அவர் ஆசிய ஜூடோ சங்கத்தின் துணைத் தலைவராகவும் காமன்வெல்த் ஜூடோ சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றினார். தம் 57-ஆம் வயதில் சிறைச்சேவையில் உதவிக் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றார்.
ஜூடோ போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற மூர்த்தி, கிளாஸ் ஏ நடுவர் சான்றிதழைப் பெற்று ஒலிம்பிக்கிற்குத் திரும்பினார்; 1981 முதல் பன்னாட்டுப் போட்டிகளில் நடுவராக அல்லது தொழில்நுட்ப நடுவர்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். ஜூடோவை ஊக்குவித்ததோடு மட்டுமன்றி, சிங்கப்பூரில் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக வாதாடுபவராகவும் இருந்தார்; 1985-ஆம் ஆண்டில், அவர் சிங்கப்பூர் அரசாங்கம் "உயர்திறனுள்ள விளையாட்டு வீரர்களுக்குப் பொருத்தமான வேலையைக் கண்டுபிடித்து உதவவேண்டும், அப்போதுதான் அவர்கள் தங்கள் பணிவாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரமாகப் பயிற்சி செய்யமுடியும்" என்று வலியுறுத்தினார். மூர்த்தியின் சேவைகளுக்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்தது: 1968-இல், சிங்கப்பூர்த் தேசிய ஒலிம்பிக் மன்றம் மூர்த்திக்கு விளையாட்டுத்துறை பாராட்டுப் பணிப் பதக்கத்தை வழங்கியது; 1973-இல், சிறைச்சாலையில் தற்காப்புக் கலைகளை ஊக்குவிப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகச் செயல்திறன் பதக்கத்தைப்பெற்றார்; 1987-இல் சிங்கப்பூரில் தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியசேவைகளுக்காகப் பொதுச் சேவை விருது வழங்கப்பட்டது.
மேல்விவரங்களுக்கு
“Kanapathy Sathia Moorthy.” Singapore National Olympic Council. Accessed on 1 August 2025. https://www.singaporeolympics.com/olympians/kanapathy-sathia-moorthy/
“Youngest sixth dan judoka in South-east Asia.” The Straits Times, 4 March 1980, 24. (From Newspaper SG)
“Moorthy at helm of SJC.” The Straits Times, 29 May 1981, 38. (From Newspaper SG)
“Moorthy now a world referee.” The Straits Times, 26 July 1981, 30. (From Newspaper SG)
“K S MOORTHY.” Singapore Monitor, 9 March 1985, 26. (From Newspaper SG)
“Moorthy receives national honours.” The Straits Times, 13 August 1987, 31. (From Newspaper SG)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |