சிங்கப்பூரில் 1915-இல் கட்டப்பட்ட தேக்கா சந்தை, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிராங்கூன் ரோட்டின் அடையாளமாக விளங்கியது. ஹொக்கியன் சொற்றொடரான 'டெக் கியா கா' (பின்னர் 'டெக் கா'), என்பதிலிருந்து அதன் பெயர் உருவானது. 'சிறிய மூங்கில்களின் வேர்கள்' என்பது அதன் பொருள். அது ரோச்சோர் கால்வாயை ஒட்டியிருந்த மூங்கில் தோப்புகளைக் குறித்தது. மாண்டரின் மொழியிலும் தேக்காவுக்கு 'மூங்கில் தோப்பு' என்று பொருள். அந்தப் பகுதியில் செழித்தோங்கிய கால்நடை வியாபாரம் காரணமாக அந்தச் சந்தை கண்டாங் கெர்பாவ் (மலாய் மொழியில் 'எருமைத் தொழுவம்') சந்தை என்றும் அழைக்கப்பட்டது. அதே நேரத்தில் உள்ளூர்த் தமிழர்கள் சந்தையை மலாய்ப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான 'மாட்டு கம்போங் பசார்' என்று அழைத்தனர்.
இன்றைய லிட்டில் இந்தியா ஆர்க்கேட், சுற்றியுள்ள கடைவீடுகள் முதலியவற்றை உள்ளடக்கிய கம்போங் கபூர் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக 1909-இல் தேக்கா சந்தை உருப்பெறத் தொடங்கி, 1913-இல் கட்டிமுடிக்கப்பட்டது. முகமதிய, இந்து அறக்கட்டளை வாரியத்திடமிருந்து 25,000 வெள்ளிக்கு நிலம் வாங்குவதில் நடந்த பேரத்தின் இழுபறியாலும் பிற நிதிச் சிக்கல்களாலும் சந்தையின் கட்டுமானப்பணியில் சுணக்கம் ஏற்பட்டது. எஃகு வேலைப்பாடுகள் 1913-இல் முடிந்த பின்னர் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு, பிறகு 30,000 வெள்ளி பெறுமானமுள்ள ஒப்பந்தம் மூலம் சந்தை கட்டிமுடிக்கப்பட்டது. நகராட்சிப் பொறியாளர் ராபர்ட் பியர்ஸ் வடிவமைத்த, தனித்தன்மைமிக்க வளைவுகளும் அலங்கரிக்கப்பட்ட எஃகு வேலைப்பாடுகளும் கூடிய அந்தக் காலனித்துவப் பாணிக் கட்டடம், 1915-இல் திறக்கப்பட்டது.
சந்தை, 1930-களில் பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இறைச்சி, காய்கறிகள், கடல் உணவுகளோடு இதர சில்லறை விற்பனைப் பொருள்களும் விற்கப்பட்டன. ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது அக்கட்டடம் ஒரு விநியோக மையமாகச் செயல்பட்டது. போருக்குப்பிறகு, சந்தையை முழுமையாக மறுசீரமைக்கும் திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் நின்றுபோயின. நகராட்சி 1948-இல் சந்தையை விரிவுபடுத்துவதற்குப் பதிலாகப் பழுதுபார்ப்பு, அலங்கார வேலைப்பாடுகள் முதலிய பணிகளை மட்டுமே மேற்கொண்டது. அதற்கென, மெக்ஸ்வெல் ரோடு சந்தைக்கு வேலி அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி தேக்கா சந்தை வேலையை முடிப்பதற்குத் திருப்பிவிடப்பட்டது.
போருக்குப் பிந்தைய இடர்ப்பாடுகள் கடுமையாக இருந்தபோதிலும் கண்டாங் கெர்பாவ் சந்தைக் கடைக்காரர்கள் ‘கண்டாங் கெர்பாவ் சந்தை வியாபாரிகள் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கினர். சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், சங்கம் அதன் விளைபொருள்களை லிட்டில் சிஸ்டர்ஸ் ஆஃப் த புவர் அமைப்புக்குத் தாராளமாக நன்கொடையாக வழங்கியது. சந்தையைச் சுற்றிலும் 1970-களில் வியாபாரம் பல்கிப் பெருகியது. சுமார் 300 பேர் மட்டுமே கடை வைக்கக்கூடிய இடத்தில் 400 பேர் கடை வைத்திருந்தனர்.
சந்தை அமைந்திருந்த பகுதியான கம்போங் கபூருக்கு 1970-களின் நடுப்பகுதியில் நகர்ப்புறப் புதுப்பிப்புத் திட்டம் வந்தபோது, அது கண்டாங் கெர்பாவ் வளாகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. தேக்கா சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு, அதன் பழைய இடத்திற்கு நேர் எதிரே புதிய சந்தையின் கட்டுமானம் 1979-இல் தொடங்கியது. கடைக்காரர்கள் 1981-இல் புதிய வளாகத்திற்குக் குடிபெயர்ந்தனர்.
ஆரம்பத்தில் “பஃபலோ ரோடு சந்தையும் உணவங்காடியும்” என்று அழைக்கப்பட்ட தேக்கா சந்தை, அதன் பெயரின் சீன அடையாளத்தை வலியுறுத்துவதற்காக 1981-இல் ஸூஜியாவ் நிலையம் என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், புதிய பெயர் சந்தையின் நீண்டகாலப் பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கப்பட்டதால் குடியிருப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது கடை வைத்திருப்பவர்களில் பலர் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை வியாபாரிகள். இவர்களின் மூதாதையர்கள் 30 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பழைய சந்தையில் வர்த்தகம் செய்தவர்கள். பின்னர் 2000-இல், அது “தேக்கா நிலையம்” என்று மறுபெயரிடப்பட்டது.
நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழர்கள் ஒன்றுகூடும் சிராங்கூன் சாலைப் பகுதியின் உயிர்நாடியாக விளங்கும் தேக்கா, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகளில் பரவிக் கிடக்கும் ஒரு வரலாற்றுப் பெயர்.
மேல்விவரங்களுக்கு
“Former Tekka Market.” Roots.sg. Accessed 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/landmarks/little-india-heritage-trail-serangoon-in-the-1900s/former-tekka-market
“Tekka Market.” Roots.sg. Accessed 1 August 2025. https://www.roots.gov.sg/stories-landing/stories/Hawker-Centres/Tekka-Market
Ng, Sabrina and Ng, Darrelle. “Tekka Centre shuts for 3 months as renovation begins.” CNA, 3 July 2023. https://www.channelnewsasia.com/singapore/tekka-centre-renovation-three-months-shops-temporary-stalls-3602551
Chris. “Exploring The Renovated Tekka Market in Singapore.” BusyKidd, 12 February 2024. https://busykidd.com/lifestyle/renovated-tekka-market-singapore/
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |