வாழ்வென்னும் வானவில்லில் எத்தனையோ வண்ண நிகழ்வுகள் இருப்பினும் காதல் என்னும் கணத்திற்கு எப்போதும் ஒரு தனி வண்ணம் உண்டு. உள்ளவரை உயிரில் கலந்து உருக்கம் கொடுக்கும் காதல் ஒரு சிலருக்கு கல்யாணம் வரை வரும். பலருக்கோ எங்கோ, எப்போதோ ஒரு சில நாட்கள் மட்டும் வந்துவிட்டு வாசம் விட்டு செல்லும். ரிஷபனின் முதல் கதையான ‘காதல் காதலில்' விதவையான வித்யாவுடன் நாயகனுக்கு வந்த காதல், கண்ணியமான நட்பாய் கருக் கொள்கிறது.அந்த நட்பே, வித்யாவின் குழந்தைக்கு பாதுகாவலன் ஆகும் நிலைக்கு வழிவகுக்கிறது. காதல் கைகூடும் களிப்பு கிடைப்பதற்குள் எத்தனையோ இடையூறுகள். மனம் ஒருவனிடம், மாலை இன்னொருவனிடம் என இருந்த ‘மணமகள் அவசர தேவை' கதையின் நாயகி வசந்தி, கணேஷிடம் சேர்வதை 6 கதை மாந்தர்களுடன் சுவைப்பட விவரித்திருக்கிறார். சற்றே பெரிய சிறுகதை என்று சொல்லுமளவிற்கு குறைவான நிகழ்வுகள், கதை மாந்தர்களுடன் விறுவிறுப்பாய் கதை சொல்லும் கலை ஆசிரியருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.