வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்க தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு விழைகிறது. அதன் பொருட்டு பல புதிய நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் தொடர்ந்து அது அறிமுகம் செய்து வருகின்றது. வீட்டிலிருந்தவாறே வாசிப்பையும் கற்றலையும் மேற்கொள்வதற்கான வசதிகள் இப்போது நம்மிடம் உள்ளன. தேசிய நூலக வாரியத்தின் மின்வளங்கைளப் பயன்படுத்தி நாம் நமது தாய்மொழியைத் துடிப்புடன் கற்பிக்க முடியும். இதுபோன்ற மின்வளங்கள் இளம் வயதிலிருந்தே தாய்மொழிகளில் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுகின்றன. எங்கள் நிகழ்ச்சிகள் குறித்து மேலும் தகவல்களுக்கு நீங்கள் தமிழ் நூலகச் சேவைகளின் முகநூல் பக்கத்தை நாடலாம்.
வாரந்தோறும் பதிவேற்றப்படும் எங்கள் காணொளி வழிக் கதைகள் பிள்ளைகளிடம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். வண்ணமயமான பக்கங்களும் கதை சொல்லிகளின் உற்சாகமான குரல்களும் பொருத்தமான வர்ணனைகளும் உங்களை நிச்சயம் கற்பனை உலகில் பயணிக்க வைக்கும். இந்த 5 நிமிடக் காணொளிகளை எங்கள் தமிழ் நூலகச் சேவைகள்’முகநூல் பக்கத்தில் கண்டு மகிழலாம். இதைப் போன்ற வேறு பல காணொளிகளைக் கண்டு மகிழ தமிழ் நூலகச் சேவைகளின் முகநூல் பக்கத்தை நாடுங்கள்.
குதூகலக் கதை நேரத்தில் எங்களுடன் இணைந்து உங்கள் குழந்தைகளுடன் ஆடிப்பாடி மகிழ வாருங்கள். அரை மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான கதைகளையும் பாடல்களையும் நீங்கள் கேட்டு களிக்கலாம். உங்கள் குழந்தைகளோடு உல்லாசமாய்ப் பொழுதைக் கழித்திட இது ஓர் அரிய வாய்ப்பு! 1 முதல் 3 வயது நிரம்பிய பிள்ளைகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியும்.
தொடர்ந்து 6-8 வாரங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்த புத்தக நிஞ்ஜாக்கள், புத்தகப் படையினர் மன்றங்கள், கதை சொல்லல், வாசிப்பு, எழுத்து பயிற்சிகள், வேடிக்கையான நடவடிக்கைகள், நாடகமயமாக்கல், கதை கலந்துரையாடல்கள் போன்றவற்றை உள்ளடக்கும். இதுபோன்ற விரிவான பாடத் திட்டங்கள் சிறுவர்களிடையே தமிழ் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும் உதவும்.
புனைக்கதைப் பரிந்துரைகள், நூலக வழிகாட்டிகள், வாசிப்புக் குறிப்புகள் – இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வாசிப்பு வளத்தை தேசிய நூலக வாரியம் உருவாக்கியுள்ளது. அனைத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்கைளயும் கவரக்கூடிய வாசிப்புச் சுவரொட்டிகளும் நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இந்த வாசிப்பு வளங்களை நீங்கள் வீட்டிலும் வகுப்பிலும் பயன்படுத்தலாம். மேலும், தகவல்களுக்கு இந்தச் சுவரொட்டியில் உள்ள விரைவுத் தகவல் குறியீட்டை வருடுங்கள்.
மாணவர்களுக்காக கதை சொல்லும் வகுப்புகளையும் நாடக வடிவிலான வாசிப்புப் பட்டறைகளையும் தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
நூல் சார்ந்த நிகழ்ச்சிகள்
கதை சொல்லுதல், நூல் பரிந்துரைகள், கைவினை நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த 1 மணி நேர நிகழ்ச்சி.
நூலக வருகை
நூலக வருகைகளின் மூலம் மாணவர்கள் நூலக ஊழியர்களின் பணிகளையும் நூலகங்களின் செயல்பாட்டையும் அறிந்துகொள்வார்கள்.
நாடக வாசிப்புப் பட்டறை
மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதும், உற்சாகமான படைப்புகளை உருவாக்க ஊக்குவிப்பதும் இந்தப் பட்டறையின் நோக்கம்.
6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களையும் பாலர் பள்ளி ஆசிரியர்களையும் இலக்காகக் கொண்ட இந்தப் பட்டறை சிறுவர்களிடையே எவ்வாறு வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவது என்பதை ஆராயும். தாய்மொழியில் வாசிப்பதன் முக்கியத்துவத்தை அறிவதோடு பெற்றோர்கள் தமிழில் கிடைக்கக்கூடிய நூல் வகைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வர்.
மாதம் ஒருமுறை நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் நிபுணர்கள் கலந்துகொண்டு
உரையாற்றுவர். தமிழ் கலாசாரம், பாரம்பரியம், கலைகள் போன்ற தலைப்புகளையொட்டி நடத்தப்படும் இந்தத் தொடரில் வாசகர்கள் ஒரே மாதிரி ரசனையைக் கொண்ட நபர்களைச் சந்திப்பதோடு இந்தத் தலைப்புக்கு ஏற்ற நூல்களையும் இரவல் பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரின் இலக்கியத் துறைக்குப் பங்காற்றிய சிங்கப்பூர் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் தொடர் இது. இத்தொடர், எழுத்தாளரைப் பற்றிய தகவல் துணுக்குகளை வழங்குவதோடு அவர்களை நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்தச் சந்திப்புகளில் தமிழ் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் குறித்து ரசனைப் பகிர்வுகள், கதை விமர்சனங்கள், கலந்துரையாடல்கள் போன்றவை நடைபெறும். தமிழ் இலக்கிய உலகில் நடக்கும் சமீபகால மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதையும் இந்தக் குழுக்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இளம் தமிழ் எழுத்தாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட இந்த வட்டம், 35 வயதுக்கும் குறைவான இளையர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. உள்ளூர் படைப்புகளை உருவாக்க முனைகிறது இந்தக் குழு.
நீங்கள் குறும்படம் தயாரிப்பதில் அல்லது மேடை நாடகத்தில் ஆர்வம் உள்ள இளையரா? இந்த வாசிப்புத் தொடர் நிச்சயம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 13 முதல் 19 வயதிலுள்ள இளையர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் தொடர். தமிழ் இலக்கியப் படைப்புகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றை வாசித்து எவ்வாறு மேடை நாடகம் தயாரிக்கப் பயன்படுத்தலாம் என்பதை இவர்கள் அறிந்துகொள்வர்.
விடுமுறைகளைப் பயனுள்ள வழிகளில் கழிக்கவேண்டுமா? ஆண்டுதோறும் நடைபெறும் எங்களின் விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்! இளையர்களைக் கவரும் வகையில் விதவிதமான கருப்பொருளையொட்டிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.